இந்த தீபாவளிக்கு புதிய பலகாரங்களை ட்ரை பண்ணுங்க ...! தீபாவளி ஸ்பெஷல்

முற்றிய  தேங்காய்  பெரியது -1, பச்சரிசி மாவு  - 300 கிராம், வெல்லம்  -  200கிராம், நெய் - தேவைக்கேற்ப.
இந்த தீபாவளிக்கு  புதிய  பலகாரங்களை ட்ரை பண்ணுங்க ...!  தீபாவளி ஸ்பெஷல்
Updated on
2 min read

தேங்காய்  அதிரசம் 

தேவையானவை:

முற்றிய  தேங்காய்  பெரியது -1, பச்சரிசி மாவு  - 300 கிராம், வெல்லம்  -  200கிராம், நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:  பச்சரிசியை ஊற வைத்து மாவாக  திரித்து  சலித்து எடுக்க வேண்டும்.  தேங்காயை  துருவி  வைக்க வேண்டும்.  ஒரு கனமான பாத்திரத்தில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து கொதிக்கும்போது தேங்காய்த் துருவலைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.  பாகு கம்பி பதம்  வரும்போது கீழே இறக்கி மாவை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கிளறி வைக்க வேண்டும். மாவு நன்கு ஆறியதும் இலையில் வைக்க வேண்டும். மாவு ஆறிய பிறகு இலையில் சிறிது நெய் தடவி கால் அங்குல கனத்திற்கு  தட்டி  அடுப்பில்  வாணலியில் நெய் வைத்து காய்ந்தவுடன் தட்டிய அதிரசத்தைப் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக பொரித்து எடுத்து வைக்க வேண்டும். சூடு ஆறிய பின்பு எடுத்து வைக்க வேண்டும்.

வென்னிலா  பர்ஃபி 

தேவையானவை:

முந்திரி பருப்பு - 100 கிராம், தேங்காய்த் துருவல் -  1 கிண்ணம், சர்க்கரை  - 200 கிராம், நெய் - 100  கிராம், வென்னிலா  எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை: முந்திரி பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து பின்னர், தேங்காய்த் துருவலையும்,  முந்திரி பருப்பையும்  நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான தண்ணீர்விட்டு சர்க்கரைப் பாகு பதத்திற்கு காய்ச்சவும்.  பின்னர், அரைத்த விழுதைப்  போட்டு நன்கு கிளற வேண்டும்.   அடுப்பை  சிம்மில் வைக்க வேண்டும். பின்னர், நெய்யை சிறிது சிறிதாக விட்டு கிளற வேண்டும். பாத்திரத்தில்  ஒட்டாமல்  வரும் போது வென்னிலா எசன்ஸை விட்டு கிளறி இறக்கி,  நெய் தடவிய  தட்டில்  கொட்டி ஆறிய பின்  துண்டுகளாக்கவும்.


கோகனட்  மைசூர்பாகு 

தேவையானவை:

தேங்காய்  - 1, சர்க்கரை  - 500 கிராம், நெய் - 200 கிராம், முந்திரி -  25, கடலைமாவு - 200 கிராம், ஏலப்பொடி - 1 தேக்கரண்டி.

செய்முறை: முந்திரி, கடலைமாவு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை நெய்யில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையில் கொஞ்சமாக தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு கொதிக்கும்போது தேங்காய்த் துருவலைப்  போட்டு  கிளற வேண்டும். பொங்கி வரும்போது  கடலைமாவு  சிறிது  சிறிதாக சேர்த்து பாதி நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும். நுரைவரும்போது மீதி நெய், ஏலப்பொடி முந்திரி போட்டு கிளற வேண்டும். பின்பு  நெய் தடவிய  தட்டில்  கொட்டிப் பரப்பி  துண்டுகள் போட வேண்டும்.

வசந்த லாடு

தேவையானவை:

கடலை மாவு  - 100 கிராம், பாசிப் பருப்பு மாவு - 100 கிராம், ரவை - 200 கிராம், சர்க்கரை  -  300 கிராம், நெய்  - 100 கிராம், தேங்காய்  - 1 மூடி, ஏலக்காய்  - 4

செய்முறை: தேங்காயைத் துருவி  நெய்விட்டு வதக்க வேண்டும். பிறகு ரவையை  வறுத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் கடலைமாவை நெய்விட்டு வறுக்க வேண்டும். பாசிப்பருப்பு மாவையும் நெய்விட்டு வறுக்க வேண்டும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில்  போட்டு தண்ணீர்  விட்டு  அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சி எல்லாப் பொருட்களையும் போட்டு  நெய்  விட்டுகிளறி கீழே இறக்கி ஆறியவுடன்  உருண்டைகளாக  உருட்ட  வேண்டும்.

வேர்க்கடலைப்  பக்கோடா 

தேவையானவை:

வேர்க்கடலை  - 300 கிராம்
கடலைமாவு  - 150 கிராம்
அரிசி மாவு  -  1 தேக்கரண்டி
சமையல் சோடா - 1 சிட்டிகை
கறிவேப்பிலை,   கொத்துமல்லி  - 1 பிடி
உப்பு,  எண்ணெய் -  தேவையானது.

செய்முறை: உப்பு நீருடன்  கடலைமாவு, அரிசிமாவு, சமையல் சோடா, கறிவேப்பிலை, கொத்துமல்லி கிள்ளிப் போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதில் வேர்க்கடலையைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் வேர்க்கடலை கலவையை கையில் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக போட வேண்டும்.  பொன்னிறமாக  பொரித்து  எடுக்க  வேண்டும்.

இஞ்சி  மருந்து ஸ்வீட் 

தேவையானவை:

இஞ்சி - 50  கிராம், வெல்லம்  -  300 கிராம், மிளகு -  10 கிராம், திப்பிலி  -  10 கிராம், தனியா  -  10 கிராம், கசகசா  - 10 கிராம், ஓமம் -  10 கிராம், ஏலக்காய் -  10, நெய்  -

தேவையானது.

செய்முறை:  இஞ்சி,  வெல்லம்  தவிர  மற்றபொருட்களை வாணலியில் லேசாக வறுத்துப்  பொடி செய்து கொள்ள வேண்டும். அடுப்பில்  வாணலியை வைத்து தேவையான தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகாகக் காய்ச்சி இஞ்சியை சாறெடுத்து  அதில் சேர்த்து  கெட்டிப் பதம்  வரும் வரை காய்ச்ச வேண்டும். பின்னர் வறுத்துப் பொடி செய்ததை  கலந்து  நிறைய  நெய்விட்டுக் கிளற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com