பேறுகால எதிர்கொள்ளல்: 10,000  பேருக்கு பயிற்சி

"வாழ்க வளமுடன்' என்ற மங்கல வார்த்தைகளை உச்சரித்தவாறு கண்களை மூடி தியானத்தில் இருக்கிறார்கள் சில பெண்கள். இவர்கள் அனைவரும் கர்ப்பிணிகள்.
பேறுகால எதிர்கொள்ளல்: 10,000  பேருக்கு பயிற்சி
Updated on
3 min read

"வாழ்க வளமுடன்' என்ற மங்கல வார்த்தைகளை உச்சரித்தவாறு கண்களை மூடி தியானத்தில் இருக்கிறார்கள் சில பெண்கள். இவர்கள் அனைவரும் கர்ப்பிணிகள். கண்கள் மூடி இருந்தாலும் அவர்களின் மனமோ கற்பனையில் பறந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கற்பனைக்கு சிறகு விரித்து இருப்பவர் குமுதவள்ளி சிவ்குமார்.

"நான் மிகவும் மகிழ்ச்சியானவள். நான் இந்த உலகின் சிறந்த குழந்தையை எனது வயிற்றில் தாங்கி இருக்கிறேன். எனது கணவர், எனது உறவினர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். என் குழந்தை எனது கருவில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதோ விரைவில் என் குழந்தை இந்த உலகத்தை பார்க்கப்போகிற தருணம் இது. என்னைச்சுற்றி எனது உறவினர்கள் இருக்கிறார்கள். எனது பிரசவ வலி எனக்கு தெரியவில்லை. என் குழந்தை பிறக்கிறது. அனைவரும் மகிழ்கிறார்கள்' என்று கண்களை மூடிக்கொண்டு இருக்கும், கருதாங்கிய தாய்மாருக்கு வார்த்தைகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுக்கிறார் குமுதவள்ளி. அவற்றை அப்படியே திரும்பச் சொல்லி கர்ப்பிணிகள் தங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வருடிக் கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு சில யோகாசன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியாளர் கூறக்கூற, சிரிப்பும், புன்னகையுமாக அந்த பெண்கள் யோகாசனங்களை செய்து முடிக்கின்றனர். சுமார் 15 நிமிடங்கள் நடக்கும் இந்த பயிற்சி கர்ப்பகாலத்தில் தங்களுக்கு நம்பிக்கையை தருவதாக கூறுகிறார்கள் பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள். இது எதற்காக? சொல்கிறார் குமுதவள்ளி சிவ்குமார்:

""தாய்மை பெண்களுக்கு கிடைக்கும் வரம். வரத்தை பெற வேண்டும் என்றால் தவம் மிகவும் முக்கியம். நான் பெற்ற தவத்தின் மகிழ்ச்சியை, எனது தவத்தால் பெற்ற வலிமையை பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பியதால் ஏற்பட்டதுதான் இந்த "சிருஷ்டி' அமைப்பு.10 மாதங்கள் மகவை சுமந்து பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயும் தெய்வத்துக்கு சமமானவர்கள். அவர்கள் படைப்பவர்கள். உயிரை சிருஷ்டிப்பவர்கள். வெறும் உயிரை மட்டுமா சிருஷ்டிக்கிறார்கள். இந்த உலகத்தின் எதிர்காலத்தையும் படைக்கிறார்கள்.

ஒரு பெண் கருதாங்கும்போது அவளுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும், மரியாதையும் இரட்டிப்பாகிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி குழந்தை பெறுவதில் இல்லை. அந்த குழந்தையை சிறந்த குழந்தையாக உருவாக்குவதில்தான் இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பதை அறிவியல் விளக்கியுள்ளது. அறிவியல் விளக்கும் முன்பே அபிமன்யு கதையையும், பிரகலாதன் கதையையும் நமது புராணங்கள் சொல்லிக் கொடுத்து உள்ளன.

அதாவது ஒரு கரு உருவாகி 6-ஆவது மாதத்தில் இருந்தே காதுகள் கேட்கத் தொடங்கும். இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு சிறந்த பயிற்சிகளை, நற்சிந்தனைகளை அளிக்க வேண்டியது கட்டாயம். இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், குழந்தையின் மூளை செல்களை தூண்டி ஊக்குவிப்பது. எந்த அளவுக்கு குழந்தையின் மூளையை தூண்டி, புதிய நரம்புமண்டல பாதைகளை உருவாக்குகிறோமோ, அந்த அளவுக்கு குழந்தையின் ஆற்றல் பெருகும்.

இசை, விளையாட்டு, பேச்சு, சிந்தனை, ஆளுமை என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வழிப்பாதை. இதை இணைக்கும் காலகட்டம்தான் கருவில் 9 மாதம் முதல் பிறந்து 2 வயதுவரை.

இந்த தகவலை நான் படித்தபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. வருங்காலத்தில் மிகவும் புத்திசாலி குழந்தைகளை உருவாக்க இந்த காலக்கட்டம் மிகவும் உதவும் என்று நினைத்தேன்.

நான் ஈரோட்டில் பிறந்தவள்.

மூத்த வழக்குரைஞராக திகழும் வெங்கடாசலபதி எனது தந்தை. அவரிடம் இருந்து எளிமையும், வாசிக்கும் பழக்கமும் எனக்கு வந்தது. எனது மாமனார் பிரபல தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன்.

19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தபோது சிருஷ்டி குறித்த எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் நான் கருவுற்றபோது என்மீது பிறர் கொண்ட அக்கறை என்னைப்பற்றி சிந்திக்க வைக்கத் தொடங்கியது. அப்போது எங்கள் வீட்டுக்கு ஆன்மிக பெரியவர்கள் அதிகம் வருவார்கள். நான் கருவுற்று இருக்கிறேன் என்றதும், எனக்கு ஏராளமான நல்ல விஷயங்களை போதித்தார்கள்.

சுவாமி ஓம்காரானந்தா கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்றை சொல்லிக் கொடுத்தார். அதை நான் திருப்பி சொல்லியபோது எனக்கு அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது.

சுவாமி குருபரானந்தா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கற்றுக் கொடுக்கப்படும் கர்ப்பகால பயிற்சி குறித்து கற்றுத் தந்தார். ஆக எனது கர்ப்பகாலம் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுத்தேன். ஆனால், அத்துடன் என்னுடைய கற்றல் முடிந்து விடவில்லை. எங்கே முடிந்ததோ, அங்கிருந்து மீண்டும் தேடல் தொடங்கியது.

எனது கணவர் சிவ்குமார் கணினியை கையாளுவது பற்றி கற்றுக்கொடுத்தார். நான் கையால் எழுதி வைத்திருந்த குறிப்புகளை கணினியில் பதிவு செய்யவும் சொல்லிக் கொடுத்தார்.

இதற்கிடையே உளவியலில் முதுகலை படித்தேன். உளவியல் மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், குழந்தை பேறு மருத்துவர்கள் என்று நான் பார்க்கும் அனைவரிடமிருந்தும் குழந்தை வளர்ப்பு, பிரசவகால செயல்பாடுகள், கர்ப்பத்தின்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டேன். சுமார் 5 ஆண்டுகள் எனது ஆராய்ச்சி நீண்டது.

நான் பிரசவ காலத்தில் கேட்ட நல்ல விஷயங்கள், எனது மகனின் வளர்ச்சியில் தெரிந்தது. அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது. எனக்கு இத்தனை விஷயங்கள் கற்றுத்தர பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால், இன்றைய கால பெண்களுக்கு யார் இருக்கிறார்கள்? ஏன் நாமே அதை கற்றுத்தரக்கூடாது? என்ற கேள்விகள் எழுந்தபோது, அதனை என் குடும்பத்தினரிடம் வெளியிட்டேன். எந்த மறுப்பும் இல்லாமல், எங்கள் வீட்டின் ஒரு பகுதியையே எனக்காக ஒதுக்கினார்கள்.

2003-ஆம் ஆண்டு ஈரோடு பெரியார் நகரில் "சிருஷ்டி' என்ற பெயருடன் கர்ப்பிணி பெண்களுக்கான பயிற்சி நிலையம் தொடங்கினேன். முதன் முதலில் நான் இதுபற்றி பேசியது ஈரோட்டில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர்களிடம்தான். அவர்களும் எனது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது தொடங்கிய இந்த பயணத்தில் இதுவரை பல டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அதிகாரிகளின் மனைவிகள் என அனைத்து வகையான குடும்ப பெண்கள் என சுமார் 10 ஆயிரம் பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களின் குழந்தைகளை நாங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். அனைவரும் சுறுசுறுப்பும் துறு துறுப்பும் கொண்ட மாணவர்களாக, அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சுகப்பிரசவம் அடைந்து இருக்கிறார்கள். அதே நேரம் அறுவை சிகிச்சையையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும் பக்குவத்தை அளிக்கிறோம்.
மொத்தம் 21 நாட்கள் பயிற்சி. கருத்தரித்த 4-ஆவது மாதத்தில் இருந்து பயிற்சியை தொடங்கினால் மிகச்சிறந்த மாற்றம் அவர்களுக்கு கிடைக்கும்''.

சிருஷ்டியை தாண்டி குமுதவள்ளிக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது எஸ்.கே.எம் சித்த மருத்துவ நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பு. ""நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தொழிலதிபராக தொடர் பயணங்கள் இருந்தாலும், ஒரு இந்திய குடிமகளாக சிறந்த குடிமக்களை உருவாக்கும் சிருஷ்டியின் பயணம்தான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது'' என்கிறார் குமுதவள்ளி சிவ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com