சிங்கப் பெண்ணே...!

"ஃபிட் இந்தியா' திட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
சிங்கப் பெண்ணே...!
Updated on
2 min read


"ஃபிட் இந்தியா' திட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அதில் இடம் பெற்றவர்களில் ஒருவர் அப்ஷான் ஆஷிக். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த கால்பந்து வீராங்கனையான இவரது விளையாட்டுத் திறனை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். "பெக்காம் போல் விளையாட வேண்டும் எனக் கூறியவர்கள், தற்போது அப்ஷான் போல விளையாட வேண்டும் எனச் சொல்கிறார்கள்' என்ற பிரதமரின் வார்த்தைகள் ஊக்கப்படுத்துதலின் உச்சமாக அமைந்தது.

25 வயது நிரம்பிய அப்ஷான் இன்று கால்பந்து வீராங்கனையாகப் புகழ்பெற்றிருந்தாலும், 2017-ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அப்ஷான் கல்லை வீசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்ஷான் போராட்டக்காரர் அல்ல. அதன் பின்னணியில் வேறு ஒரு விஷயம் இருந்தது.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்ஷான் 20 பேர் கொண்ட தனது கால்பந்து அணியை ஸ்ரீநகரின் கோதி பாக் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இளைஞர்கள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை எறிந்துகொண்டிருந்தனர். அப்ஷான் அணியினரையும் கல் எறியும் கும்பலை சேர்ந்தவர்கள்தான் எனத் தவறுதலாகக் கருதிய பாதுகாப்புப் படை காவலர் ஒருவர், அப்ஷான் அணியைச் சேர்ந்த ஒருவரை தாக்கினார். இதைக் கண்டு கோபமடைந்த அப்ஷானும், அவரது குழுவினரும் பாதுகாப்புப் படையினரை நோக்கி கற்களை வீசினர். அப்போது ஊடகத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அப்ஷான் சிக்க, அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு கால்பந்து வீராங்கனையே பாதுகாப்புப் படையினரை நோக்கி கல் எறிகிறார் என கல் எறிபவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை கேள்விக்குள்ளாக்கியது.

ஆனால், சில நாள்கள் கழித்து அப்போதைய முதல்வர் மெகபூபா முஃப்தியை சந்தித்த அப்ஷான், தன் தரப்பு விளக்கத்தை எடுத்துரைத்தார். மேலும், விளையாட்டு வீரர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்று அப்ஷான் ஜம்மு காஷ்மீர் கால்பந்து அணியின் கோல் கீப்பராகவும் கேப்டனாகவும் உள்ளார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பெண்கள் லீக் கால்பந்து போட்டியில் எஃப்.சி. கோலாபூர் சிட்டி அணியில் இடம்பெற்று விளையாடினார். கால்பந்து போட்டியில் ஆர்வம் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஆர்வத்துடன் பயிற்சி அளித்து வருகிறார்.

17 வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கினார் அப்ஷான். கால்பந்து விளையாட்டை தொடங்க அந்த வயதே தாமதமான ஒன்றுதான்.

ஜம்மு காஷ்மீரில் பெண்கள் விளையாட்டுக்கு சிறந்த வாய்ப்பு இல்லாதபோதும் தனது கடினமான உழைப்பால் இன்று மாநில அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் கால்பந்து பயிற்சியாளராகவும் மாறியுள்ளார் அப்ஷான்.

"இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக கடினமாக உழைத்து வருகிறேன். ஒருநாள் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை உள்ளது' என்கிறார் அப்ஷான். சிங்கப் பெண்ணே வா...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com