நன்மை செய்வதே அழகு!

சென்னையின் மிகப் பிரபலமான மருத்துவக் கல்லூரி, மருதநாயகம் மருத்துவக் கல்லூரியாக இருந்தது. பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின்
நன்மை செய்வதே அழகு!

சென்னையின் மிகப் பிரபலமான மருத்துவக் கல்லூரி, மருதநாயகம் மருத்துவக் கல்லூரியாக இருந்தது. பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும், மெரிட்டில் பாஸ் செய்து கவர்மெண்ட் கோட்டா மூலம் இங்கே வந்து படிக்கும் ஏழை மாணவர்களும் உண்டு.
லஞ்ச் பிரேக்குக்கான நேரம் என்பதால், மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியே குவியத் தொடங்கினர்.

எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் ஒருவன் ரமேஷ். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். திருவண்ணாமலை அருகே தேவப்பட்டினம் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவன். கிராமத்து நடை உடை பாவனைகள். ஆனால் படிப்பில் சூரன். மெரிட்டில் சீட் கிடைத்து இங்கே வந்து படிக்கிறான்.
""டேய் ரமேஷ்'' என்று அழைத்துக் கொண்டே அவனுடைய ரூம்மேட் செங்குட்டுவன் ரமேஷின் தோளைத் தட்டி நின்றான்.
""ஏண்டா இப்படித் தோள்பட்டை கழண்டு விழறாப்போல அடிக்கறே''.
""டேய், இன்னைக்கு சாப்பிட வெளியிலே போகலாமா? இந்த ஹாஸ்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. நம்ம கிளாஸ்மேட் காந்தன் கூட இப்பத்தான் தன்னுடைய கேர்ள்பிரண்ட் மோகனாவுடன் சாப்பிட வெளியே போனான்''.


""அவன் போவான்டா. அவன் சீமை வீட்டு கன்றுக்குட்டி, கையிலே காசு ஏகமா புழங்குது, வேளைக்கு ஒரு கார்லே வரான், விதவிதமா டிரஸ் செய்யறான், பெயருக்கு ஏற்றார்போலக் காந்தமா தன்னுடைய அழகாலே எல்லாரையும் தன் பக்கம் இழுத்துக்கிறான்''.
ஏனோ தெரியவில்லை ரமேஷுக்கு; காந்தனைக் கண்டாலே அடி வயிறு பற்றிக் கொள்ளும். என்ன ஸ்டைலு காட்டறான். அவனுடைய ஹேர் கட்டுக்கே நாலாயிரம் ரூபாய் செலவு செய்வானாமே. எப்பப் பார்த்தாலும் அவனைச் சுற்றி ஒரு பட்டாளம். ஏன் சேரமாட்டார்கள், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், அவர்களுக்குத் தீனி வாங்கித் தரான். விதவிதமான காரில் ஓசி சவாரி, சினிமா என்று செலவு செய்யறான். நம்மக் கிட்ட எவன் வருவான்?
மோகனா மீது உயிரையே வெச்சிருந்தேன். அழகு தேவதையான அவள் எனக்கு எப்படிக் கிடைப்பாள்? நான் ஒரு கிராமத்தான், அவளும் பெரிய பணக்காரி,  மார்டன் கேர்ள், எண்ணெய் வடியும் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க எனக்கே சகிக்கவில்லை.
""டேய் ரமேஷ், உன் அறிவும், படிப்பில் நீ முதன்மையாக இருப்பதும், மோகனாவுக்குத் தெரியவில்லையா?'' சில சமயங்களில் ரமேஷின் மனசாட்சி கேள்வி கேட்கும்.
"ஆமாம், தெரியாதாக்கும்; அறிவை யார் பார்க்கிறார்கள்? வெளித்
தோற்றம்தானே முக்கியமாக இந்தப் பெண்களுக்கு வேண்டியிருக்கிறது. மோகனா தன் பக்கத்தில் காந்தனையும், என்னையும் வைத்துப் பார்த்தால், யாரைத் தேர்ந்தெடுப்பாள் என்னையா, காந்தனையா?'
இதற்கு ரமேஷின் மனசாட்சி வாயை மூடிக்கொள்ளும்.
அன்று ரமேஷின் வகுப்பறையே அல்லோலகல்லோலப்பட்டது. ஒரே கூச்சல், கொண்டாட்டம். என்னவென்று விசாரித்ததில் காந்தன் புத்தம் புதிய பெராரி காரை ஓட்டி வந்திருக்கிறான், இன்றைக்கு அவனுக்குப் பிறந்தநாள், அவனுடைய அப்பா அந்த மிக விலை உயர்ந்தக் காரை அவனுக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்கி இருக்கிறார், என்றான் செங்குட்டுவன்.
""ரமேஷ், வாடா நாமும் போய் அந்தக் காரைப் பார்க்கலாம். காந்தன் நண்பர்கள் கேட்டால் அந்தக் காரில் அழைத்துச் சென்று ஒரு ரவுண்ட் அடிக்கிறானாம். நாம் எந்த ஜென்மத்தில் பெராரி வாங்கப் போகிறோம், அவனோடு ஒரு சவாரி செய்யலாம்''.
""போடா அல்பா, எனக்கு அதுபோல ஆசை எல்லாம் கிடையாது. நீ வேணும்னா போ. வீண் பந்தாக் காட்டறான், தலைக்கனம் புடிச்சவன்''.
""டேய் நிறுத்து, அவன் நல்லவண்டா, அவன் பணக்காரனாப் பொறந்தது அவன் தப்பா. ஆனால் அவன்மேல் உனக்குப் பொறாமை அதிகம்''.
ரமேஷ், செங்குட்டுவனை வெறித்துப் பார்க்க, அந்தப் பார்வையின் உஷ்ணம் தாங்க முடியாமல், செங்குட்டுவன் மெதுவாக நழுவி விட்டான். 
கடந்த ஒரு மாத காலமாக, காந்தனும் மோகனாவும் அவர்களுடைய நண்பர்களுடன் பெராரி காரில் வலம் வருவதைப் பார்த்துப் பார்த்து மனது வெம்பி, வயிறு எரிந்து, உள்ளத்தின் கறுப்பு முகத்திலும் ஏற ரமேஷ் மேலும் கறுத்து சோகமாக உலா வந்தான்.
மருதநாயகம் மருத்துவக் கல்லூரியே சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. விஷயம் இதுதான். காந்தன் ஓட்டிச் சென்ற பெராரி, பிரேக் பிடிக்காமல் ஓடிக் கவிழ்ந்ததில், காருக்குப் பெருத்த சேதம். தெய்வாதீனமாகக் காந்தன் வலது
கால் முறிவோடு தப்பித்துக் கொண்டான். காருக்கான இன்ஷுரன்ஸ் அதை வாங்கும்பொழுதே செய்திருந்ததால், வேறு புதிய கார் வாங்குவதில் பிரச்னை இல்லை என்றனர்.

ஒரு மாதத்திற்குப் பிறகு காந்தன் நொண்டியபடி, கல்லூரிக்கு வரத் தொடங்கி விட்டான். கல்லூரியில் நடந்த ஜெனரல் செக்ரட்டரி தேர்தலில் ரமேஷும், காந்தனும் மோதிக் கொள்ள, வெற்றி காந்தனுக்கே வாய்த்தது. மருத
நாயகம் கல்லூரியே அதிரும்படிக் கொண்டாட்டங்கள் அரங்கேறின.
காலச்சக்கரம் சுழன்றது. மருத்துவப் படிப்பின் கடைசி வருடம். பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. இதில் வெற்றி பெற்றால் மருத்துவர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்து விடும். மாணவர்கள் தங்கள் பொழுதுபோக்குகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, சீரியஸôகப் படிக்கத் தொடங்கியிருந்தனர்.
""ரமேஷ், என்னடா பிரச்னை? இப்படி இடிந்துபோய் உட்கார்ந்து இருக்கே''.
""இல்லேடா, என்னத்தைச் சொல்வேன். பரீட்சைக்குப் பணம் கட்ட முடியாது. இந்த வருஷம் சரியான விளைச்சல் இல்லையாம். என் படிப்புக்காக இருந்த ஒரு வீடு, ஐந்து ஏக்கர் நிலம் என்று எல்லாமே அடமானத்தில் இருக்கு, அதனால் அப்பா தவிக்கிறாராம். யாரும் கடன் தர முன் வரலையாம். தெரிந்தவங்க கிட்ட எல்லாம் ஏற்கெனவே கடன் பாக்கி இருக்காம். என்னை உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்றாரு, அடுத்த வருஷம் பரீட்சையை எழுதிக்கலாம் என்கிறாரு''.
பதில் சொல்லத் தெரியாமல் செங்குட்டுவன் வாய் அடைத்து நின்றான்.
மறுநாள் ரமேஷ் கல்லூரிக்குச் 
செல்லவில்லை. விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். அவன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி வழிந்து தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. இரவு கிராமத்திற்குச் செல்ல மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்திருந்தான்.
""டொக் டொக்'' என்று கதவு தட்டப்பட்டது.
ரமேஷ் கதவைத் திறந்தான்.
காந்தன் ஒரு காந்தச் சிரிப்போடு நின்றுக் கொண்டிருந்தான்.
""ரமேஷ் உள்ளே வரலாமா?''
""வா காந்தா, வா''
""சரி வந்துவிட்டேன், இந்தா இத பிடிடா''
ரமேஷ் தயங்கியபடி, ""என்னது காந்தா?'' வார்த்தைகள் வராமல் ரமேஷ் தடுமாறினான்.
""பணம்தான். போய் பரீட்சைக்கான ஃபீûஸக் கட்டு. செங்குட்டுவன் மூலம் விஷயத்தைக் 
கேள்விப்பட்டேன். நீ மிகப் பெரிய 
அறிவாளி. எதிர்காலத்தில் மிகச்சிறந்த டாக்டராக வரவேண்டியவன். மருத்துவ உலகத்தில் பெரிய மறுமலர்ச்சி உன்னால வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான்  உனக்குப் பணம் கொடுத்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம், இந்தப் பணத்தைத் திருப்பியும் தரவேண்டாம்''.
""காந்தன்'' என்று பெரும் குரல் கொடுத்துக் கதறி, அவன் கால்களில் சரிந்தான் ரமேஷ்.

""என்னை மன்னித்துவிடு'' என்று மன்றாடினான்.
""ஏன், எதற்கு என்றான் காந்தன்?''
""உன் பெராரி கார் பிரேக் பிடிக்காமல் ஆக்ஸிடென்ட் ஆனதே, எதனால் தெரியுமா? இந்தப் பாவிதான் உன் மேல் இருந்த பொறாமையால் காரின் பிரேக் ஒயரைத் துண்டித்து விட்டேன். உனக்கு காயம் பட்டதையும், கார் சேதமானதையும் கண்டும், கேட்டும் குதூகலித்தேன். இந்தக் கேடு கெட்டவனுக்கு நீ  உதவுகிறாயே. இமயமாக உயர்ந்து நிற்கும் நீ எங்கே? கீழ்த்தரமான நான் எங்கே? இந்தப் பணத்தைத் திருப்பி எடுத்துச் சென்று விடு. இதைத் தொடக்கூட எனக்கு அருகதை இல்லை''.
""நண்பா'' என்று காந்தன் வாஞ்சையுடன் கூப்பிட்டான். நீதான் என் காரின் பிரேக்கைச் செயலிழக்க வைத்தவன் என்பது எனக்கு ஒரு வாரத்திலேயே தெரிந்துவிட்டது. உன் ரூம் மேட் செங்குட்டுவன், நீ உன் மேஜையின் டிராயரில், கட்டிங் பிளேயரை வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறான். ஆவல் கொண்டு, உன்னைப் பின்தொடர்ந்த பொழுது, நீ செய்த காரியத்தைப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து, அதைப்பற்றி என்னிடம் சொல்லி என்னை உஷார் படுத்து
வதற்குள், நான் காரை எடுத்துச் சென்று இருக்கிறேன். போலீஸிடம் சொல்லலாம் என்றவனை நான்தான் தடுத்துவிட்டேன். இப்படிச் செய்தால் உன் எதிர்காலம் பாழாகிவிடும். ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த உன்னைப் பற்றிய கனவுகளோடு உன்னைப் பெற்றவர்கள் காத்திருப்பார்கள் என்று சொல்லிவிட்டேன். அதை நான் மறந்தும்விட்டேன். நீயும் மறந்துவிடு''.
இந்தக் கொடூரமானச் செயலைப் பற்றி அறிந்தபிறகும் எனக்கு உதவ முன் வந்தாயா'' என்று சொல்லிக் கதறிய ரமேஷைத் தேற்றக் காந்தன் முயன்றுக் கொண்டிருக்கிறான்.
இன்னா செய்தாரை நாணச் செய்துவிட்டக் காந்தன் சரித்திரத்தில் இடம்பெறப் போவதில்லை, ஆனால் ரமேஷ் மனதில் அழியாதச் சித்திரமாய், அவனின் குலதெய்வமாக அவன் உயிர் 
உள்ளவரை வாழ்வான் என்பதில் சந்தேகம் இல்லைதானே?
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
(குறள் எண்: 314)
பொருள் : நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com