
கேரளத் தமிழ் மகள்!
'திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலையும், திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தையும் இளம்வயது முதலே அருகிலிருந்து பார்த்து வளர்ந்தேன்.
'திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலையும், திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தையும் இளம்வயது முதலே அருகிலிருந்து பார்த்து வளர்ந்தேன். இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஏராளமான ஓலைச்சுவடிகளைப் படித்து, அவற்றுக்குள் மறைந்திருக்கும் வரலாற்றை வெளிக்கொணரவேண்டும் என்பதே எனது லட்சியம்.
அவற்றில் 99 சதவீதம் இன்னும் வாசித்து விளக்கப்படவில்லை. அவற்றை வெளிப்படுத்தினால், வரலாறு, பண்பாடு போன்றவற்றை வெளிக் கொணரமுடியும். அதற்காகவே என் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளேன்' என்கிறார் உமா மகேஸ்வரி.
கேரளப் பல்கலைக்கழக அலுவலகத்தில் பணியாற்றி, 2017-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற உமா மகேஸ்வரிக்கு வரலாற்று ஆர்வமும், பத்திரிகைப் பணியும் இணைந்திருந்தன. இவர் திருவிதாங்கூர் வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களைத் தேடி, பழைய ஆவணங்களையும் ஓலைச்சுவடிகளையும் ஆராய்ந்து, அவற்றை நூல்களாக வெளியிட்டு வருகிறார். மலையாளம், ஆங்கிலத்தில் 18 நூல்களை எழுதியுள்ள இவரது முதல் நூலுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அணிந்துரை அளித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் வசித்து வரும் தமிழ்ப் பெண்ணான உமா மகேஸ்வரியிடம் பேசியபோது:
'எனது தாயார் ரவணசமுத்திரத்தைச் சேர்ந்தவர். தந்தை திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இருவரும் தமிழ் பிராமணக் குடும்பங்களைச் சேர்ந்தோர். இன்றைய தமிழ்நாட்டின் சில பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் அரசின் எல்லைக்குள் இருந்தன. அப்போது எங்கள் முன்னோர் திருவனந்தபுரத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
அவர்கள் பத்மநாபசுவாமி கோயிலில் பணியாற்றியவர்கள். கோயில் அருகேயே வசித்தனர். இதனால் திருவிதாங்கூரையும், ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலையும் பற்றிய ஏராளமான கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் இளம்வயதில் மகாராஜாவை பலமுறை காணும் வாய்ப்பு கிடைத்தது.
தொடக்கக் காலத்தில், திருவிதாங்கூரின் பண்பாடு, பாரம்பரியம், வரலாறு, தொல்லியல் போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதினேன்.
முதன்மை ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து, அவற்றை ஆராய்ந்து, உண்மைகளை உறுதிப்படுத்திய பிறகே எழுதினேன். ஒவ்வொரு முறையும் புதிய தகவல்கள் வெளிப்பட்டபோது நான் வியந்துபோனேன்.
திருவிதாங்கூர் மன்னர்களின் நிர்வாகப் பார்வை, மக்கள் நல நடவடிக்கைகள், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையெல்லாம் புத்தக வடிவில் பதிவு செய்துவருகிறேன். என்னுடைய வரலாற்று ஆய்வுப் பயணத்தில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கிழக்கே மடம் கோவிந்தன் நாயர், ஆர். பி. ராஜா உள்ளிட்டோருக்கு முக்கியப் பங்குண்டு.
மன்னருடனான சந்திப்பு
2004-ஆம் ஆண்டில் ஸ்ரீ பத்மநாபதாச உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவைச் சந்தித்தேன். ஆங்கிலேயர்கள் ஆண்ட இந்தியாவையும், அதிகார மாற்றத்தையும், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தையும் நேரடியாகக் கண்ட அவருடைய அனுபவங்களைப் பதிவு செய்தேன். பல்கலைக்கழகப் பணியுடன் இணைந்து இந்த ஆய்வுப் பணியையும் மேற்கொண்டேன். அப்போது அரசக் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகும் அனுபவங்கள் வந்தன. அவர்கள் மிகவும் எளிமையானவர்கள், உண்மையானவர்கள், அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள்.
அவர்கள் மோசமான வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. பணியாளர்களையோ கீழ்நிலை ஊழியர்களையோ, திட்டுவதையோ நான் எப்போதும் பார்த்ததில்லை. ஒருபோதும் குரலை உயர்த்திப் பேசுவதில்லை. ஆனால், தாங்கள் கூற வேண்டியதைத் தெளிவாகவும் எந்தவிதமான குழப்பமும் இல்லாமலும் தெரிவிப்பார்கள்.
திருவிதாங்கூர் அரசின் வாரிசு உரிமை தனித்துவமானது. மகாராணி என்பது ஆட்சியாளரின் மனைவி அல்ல; ஆட்சியாளரின் தாயாரே மகாராணி. இளவரசிகள் ஆட்சியாளரின் சகோதரிகளின் மகள்கள். இளவரசர்கள் ஆட்சியாளரின் சகோதரிகளின் மகன்கள். அடுத்த வாரிசு ஆட்சியாளரின் இளைய சகோதரர்களில் ஒருவராக இருப்பார்.
ஆட்சியாளருக்கு சகோதரர் இல்லையென்றால், அவரது சகோதரியின் மகன் குடும்பத்தின் தலைவராக வருவார்.
ஒரு கோடி ஓலைச்சுவடிகள்
திருவனந்தபுரத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் நான் பல நாள்களைச் செலவிட்டிருக்கிறேன். சுமார் ஒரு கோடி ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த ஆவணக் காப்பகம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஓலைச்சுவடி சேகரிப்பாகும். இந்த இடத்தில் தகவல்களைச் சேகரித்த பிறகு, அவற்றை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்வேன். இந்த ஈடுபாடே பின்னர் எனக்குக் காப்பாட்சியராகப் பொறுப்புக் கிடைக்கும் அளவுக்கு வளர்ந்தது.
திருவிதாங்கூர் அரசு ஆவணங்களுக்கான மதிலகம் அகராதியைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு, 2022-ஆம் ஆண்டில் இந்நூலும் வெளிவந்துள்ளது.
வரலாறு என்பது பழைய நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவு. அந்த நினைவுகளைப் பாதுகாக்கும் ஆவணங்களும், அவற்றைத் தேடிப் படிக்கும் ஆய்வாளர்களும் இல்லையென்றால், காலத்தின் அடுக்குகளுக்குள் பல உண்மைகள் மறைந்து போய்விடும். பல லட்சம் ஓலைச்
சுவடிகளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வரலாற்றை வாசித்து, அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் பணியைத் தொடர வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் பயணிக்கிறேன்.
தமிழும், மலையாளமும்..
தமிழ் நூல்கள், வார இதழ்கள் பருவ இதழ்களின் மிகப்பெரிய வாசகியான நான், மலையாளம், தமிழ் என இருமொழிகளின் ஓலைச் சுவடிகளின் பொருள் எளிதாக அறிவேன்.
'தமிழ் மற்றும் மலையாள இலக்கியங்களை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு எழுத்தாளரும், அவர் எந்த மொழியில் எழுதினாலும், அவருக்கெனத் தனி அடையாளம் உள்ளது.
பெண்களின் திறமைகள்
பெண்கள் அரிதான, தனித்துவமான துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு முன்னேறும்போது, அவர்களின் திறமையைப் பார்த்து வியக்கிறேன். அதே நேரத்தில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வதையே நான் விரும்புகிறேன். எனது சகோதர சகோதரிகள்தான் எனது பலம்' என்கிறார் உமா மகேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




