/

சிறுகதை: சூட்சுமம்!

எதிர்வீட்டு ஹேமாவையும் அவளோட பையன் மகேஷையும் பார்த்தாலே கிருத்திகாவுக்கு பற்றி எரியும் பொறாமைத் தீ.   கிருத்திகாவோட பையன் கார்த்திக்கும் மகேஷும் ஒரே பள்ளிக் கூடத்தில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:07 am

மயிலை.சிவ.மாசிலாமணி

திர்வீட்டு ஹேமாவையும் அவளோட பையன் மகேஷையும் பார்த்தாலே கிருத்திகாவுக்கு பற்றி எரியும் பொறாமைத் தீ.

  கிருத்திகாவோட பையன் கார்த்திக்கும் மகேஷும் ஒரே பள்ளிக் கூடத்தில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். காலாண்டு தேர்வில் கார்த்திக் 5-வது ரேங்க்கும் மகேஷ் 4-வது ரேங்கும் வாங்கியிருந்தார்கள். ஆனால் நடந்துமுடிந்த அரையாண்டு தேர்வில் மகேஷ் 2-வது ரேங்க் எடுத்து முன்னேறியிருந்தான். ஆனால் தன் பையன் கார்த்திக் 10-வது ரேங்கிற்கு சரசரவென சரிந்துவிட்டதில் கிருத்திகாவுக்கு ரொம்பவும் கவலையாகிவிட்டது. இந்தக் கவலை அவர்கள் மீது பொறாமையையும் வளர்த்துவிட்டிருந்தது. இதனால் ஹேமாவை பார்ப்பதையும், பேசுவதையும் கூடத் தவிர்த்து வந்தாள் கிருத்திகா.

  ""நான் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தவள். ஹேமா வெறும் பி.ஏ., வரலாறு. அவளும் தன் பையனுக்கு டியூஷன் சொல்லித் தர்றா. நானும்தான் என் பையனுக்கு எல்லா பாடத்தையும் சொல்லிக் கொடுக்கறேன். அப்படி இருந்தும் எப்படி இப்படி நடந்தது? ஒருவேளை இப்படி இருக்குமோ? ஹேமா, கிளாஸ் டீச்சர்கிட்ட ரொம்பவும் வலிந்து வலிந்து குழைந்து குழைந்து பேசுவா! காக்கா பிடிப்பதில் அவள் கில்லாடி. அதனால அந்த டீச்சர் அவ பையனுக்கு மார்க்கை அள்ளி வழங்குறாளோ..? நான் கிளாஸ் டீச்சர்கிட்டே தேவையில்லாம பேசமாட்டேன்.. எனக்கு கரண்டி பிடிக்கவே நேரம் போதல. இதுல எங்கே காக்கா பிடிக்கிறது.''

--இப்படியாக கிருத்திகாவின் எண்ணங்கள் அவளை சுழன்றடித்துக் கொண்டிருந்தது.

  இதோ அடுத்த ஒன்றரை மாதத்தில் ஆண்டு இறுதித் தேர்வு வந்துடப் போகிறது. ரேங்க் எடுக்கலனாலும் பரவாயில்ல.. குறைந்தபட்ச மார்க்காவது வாங்கி கார்த்திக் பாஸ் ஆவானா? என்ற பயங்கர சந்தேகம் வேறு கிருத்திகாவை ஆட்டிப் படைத்தது.

  வெட்கத்தை விட்டாவது ஹேமாவிடம் வலியப் போய் பேச வேண்டும். மகேஷ் ரேங்கில் முன்னேறிய சூட்சுமத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.

  அடுத்த வாரம் கார்த்திக்கின் பிறந்த நாள். அதை சாக்காக வைத்துக்கொண்டு ஹேமாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் கிருத்திகா.

  ""வா..கிருத்திகா..''

  ""அடுத்த ஞாயிற்றுக்கிழமை கார்த்திக் பிறந்த நாள். மகேஷையும் கூட்டிக்கிட்டு வா ஹேமா.''

  ""அதற்கென்ன? எதிர்வீடாச்சே வராமல் இருக்க முடியுமா? அதுசரி.. கார்த்திக் எப்படி படிக்கறான்?''

  ""அதையேன் கேக்கற ஹேமா..என் கவலையே அதுதானே..வீட்ல நல்லாதான் படிக்கறான். நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றான். ஆனா பரீட்சையிலதான் ஏன் சொதப்பறான்னே தெரியல்ல..''

  ""பையன் மேல குறை ஒண்ணும் இல்ல..''

  ""பின்னே..!'

  ""உங்கிட்டதான் தப்பே இருக்கு..''

  ""என்ன சொல்றே ஹேமா?''

  -சற்றே அதிர்ச்சியுடன் கேட்டாள் கிருத்திகா.

  ஹேமா சொல்ல ஆரம்பித்தாள்:

  ""கிருத்திகா.. நீ என்னைப் பார்த்தும் பாக்காதது மாதிரி போனாலும்..நான் உன்னை கவனிக்கத் தவறுவதில்லை.. குழந்தைகளிடம் பரீட்சை குறித்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடாது. நீ என்ன செய்யறே? பரீட்சை முடிந்ததும், ஹாலை விட்டு வெளியே வந்ததுமே கார்த்திக்கிடம் கொஸ்ட்டின் பேப்பரை வாங்கி வைத்துக்கொண்டு இந்த கேள்வியை நல்லா எழுதினியா? அந்தக் கேள்விக்கு எப்படி பதில் எழுதினே? இந்தக் கணக்கை எப்படி செஞ்சே..?

இப்படி எல்லாம் நீ கேட்கறதை நானே கவனிச்சிருக்கேன்..

  பரீட்சையை அப்பதான் முடிச்சிட்டு களைப்பா வந்திருக்கற குழந்தை கிட்டே இப்படி கேட்டா எப்பிடி? இதனால் அவன் நல்லா எழுதியிருக்கிற பதிலை கூட சோர்வு காரணமா உங்கிட்டே சரியா சொல்ல முடியாமா போகலாம். நீ உடனே என்ன செய்வே? அய்யய்யோ நீ நல்லாவே எழுதல போலிருக்கேன்னு..அவனை திட்டுவே..அதனாலே அவன் மனசு உடைஞ்சு போயிடுவான்..அடுத்த பரீட்சையிலும் சரியா கவனம் செலுத்த முடியாது..

  அதனால் ஒரு பரீட்சை முடிஞ்சுதா..அத்தோட அதை மறந்துடு..அடுத்த பரீட்சைக்கு அவன உற்சாகத்தோட தயார் பண்ணு.. எப்பவும் படி படின்னு நச்சரிக்காம..இடையிடையே கொஞ்சம் விளையாட விடு..அல்லது அவனுக்குப் பிடிச்ச டோரா மாதிரியான குழந்தைகள் டி.வி. சீரியலை பார்க்க விடு.. குழந்தைகள் இயல்பாகவே உற்சாகமாக இருப்பாங்க.. அவங்க உற்சாகம் எதிலும் குறையாம பார்த்துக்க வேண்டியது நமது கடமை..என்ன கிருத்திகா.. நான் சொல்றதுல தப்பிருந்தா மன்னிச்சுக்க..''

  அதுவரை அவள் சொல்வதை கண்ணிமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்த கிருத்திகா, ஹேமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""என் கண்ணைத் திறந்துவிட்டுட்ட ஹேமா'' என்றாள் நன்றிப் பெருக்குடன்.

  நேரே வீட்டுக்கு வந்தாள்.

  கையில் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு "பொயட்ரி'யை மனப்பாடம் செய்துகொண்டிருந்த கார்த்திக் அருகே சென்றாள்.

  புத்தகத்தை அவனிடமிருந்து வாங்கி பையில் வைத்தாள். அவனைச் செல்லமாக கட்டி அணைத்தாள்.

  ""படிச்சது போதும். நாளைக்கு காலையில் எழுந்து படி. சாப்பிட்டுக்கிட்டே டோரா பாக்கலாம்..''

  கார்த்திக்குக்கு ஆச்சர்யமாக இருந்தது.

  ""அம்மா நீங்க சும்மா சொல்லலையை...'' என்றான். அவன் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு எரிவது போன்ற பிரகாசம்.

  அவன் முகத்தை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு.. கிருத்திகாவுக்கு இப்போது கண்களில் நீர்ப்பெருக்கு. அது அழுகையா? அல்லது ஆனந்தமா என்று அவளுக்கே புரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.