மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்! 2

மலையடிவார ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். காற்று சிலுசிலுவென வீச, மரத்தின் இலைகளிலிருந்த மழை நீர் சொட்டுக்கள் சடசடவென விழுந்தன.  நடந்த களைப்பில், அய்யனார் கோவில் அருகே ஒரு பாறையில் அமர்ந்தே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:18 am

கொ.மா.கோதண்டம்

மலையடிவார ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். காற்று சிலுசிலுவென வீச, மரத்தின் இலைகளிலிருந்த மழை நீர் சொட்டுக்கள் சடசடவென விழுந்தன.

 நடந்த களைப்பில், அய்யனார் கோவில் அருகே ஒரு பாறையில் அமர்ந்தேன்.

 அப்போது அந்தப் பக்கமாக வந்த சிலர், என்னைப் பார்த்ததும், "ஐயா, நாங்கள் மலை மேலுள்ள மாவரசியம்மன் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களுடன் வாருங்களேன்'என்று அழைத்தனர். தலையாட்டிக் கொண்டே, ஆனந்தமாக அவர்களுடன் புறப்பட்டேன்.

 "என்னய்யா, செடிகளைப் பார்த்துக்கிட்டே வர்றீங்களே' அவர்களில் ஒருவர் என்னைக் கேட்டார்.

 "இந்தச் செடிகளில் பூக்கள் அழகாகப் பூத்திருக்கின்றன அல்லவா? அதனால தென்றலுக்குப் பாசம் வந்து, இந்தப் பூக்குழந்தைகளை வாஞ்சையாகத் தடவிக் கொண்டு போகுது! இதப் பார்த்த மேகம், நீர்த் துளிகளை தெளிக்கின்றது. அது காற்று பட்ட இடத்தைக் கழுவி விடுகிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதைப் பார்த்த மரங்கள் சிலிர்த்துப் போய் இலைகளிலிருந்த மழை நீர் சொட்டுகளைப் பூவாளி போலத் தெளிக்கின்றது. ""சிரித்தால் முத்துதிரும், வாய் திறந்தா தேன் சிதறும்'' என்ற பாடல் எனக்கு நினைவுக்கு வருகின்றது' என்றேன்.

 "கவிஞரய்யாகூட பேசிக்கிட்டிருந்தா, நாம வந்த வேலை மறந்து போயிடும் வாங்கப்பா!' என்றார் கூட்டத்தில் ஒருவர்.

 நாங்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.

 "ஐயா, இப்ப இந்த ஆற்றைக் கடக்கிறோமில்லையா? இந்த மாதிரி இன்னும் 6 ஆறுகளைக் கடந்தாத்தான் மாவரசியம்மன் கோவிலு வரும்!'

 ஆற்றின் நடுவே இருந்த சிறு சிறு பாறைகளைத் தாண்டிச் சென்றோம்.

 "அப்ப... இன்னும் இங்கே ஆறு நதிகள் இருக்குதுன்னு சொல்றீங்களா?'

 "இல்லீங்க... ஒரே ஆறுதான்... அது வளஞ்சி வளஞ்சி வருது. நாம சுத்தி சுத்திப் போறோம். அதால, ஒரே நதியை ஆறு இடங்கள்ல நாம கடந்து போறோம்!'

 வழியெல்லாம் மரங்களின் மேல், சாம்பல் நிறப் பெரிய மலையணில்கள் டிக்ரிய.. டிக்ரிய... என சத்தமிட்டவாறே தாவி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றின் நீண்ட வால்கள் கிளைகளில் தட்டிச் செல்கையில் பிரஷ்ஷால் துடைத்து விடுவது போல இருந்தன.

 மேலே நடந்தோம்.

 பெரும்பாறைகள் நிறைந்த குறுகிய பாதைகளில் செல்வது சிரமமாகவே இருந்தது.

 முதல் நாளே அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி வகைகளுடன் சமையற்காரர்கள் கோவிலுக்குச் சென்றுவிட்டார்களாம். அதிகாலையிலேயே கோவில் சம்பந்தப்பட்டவர்கள் நாலு பேரும் சென்றுவிட்டார்களாம்.

 எல்லாம் கடந்து கோவில் பக்கம் வந்துவிட்டோம்!

 ஆற்றில் குளித்து, பூஜை முடித்து, சாப்பாடு போட்டார்கள்.

 கோட்டை போல சுற்றிலும் மலைகள். சுற்றிலும் அடர்நத வனமாக இருந்த பகுதியில் பாறையில் படுத்துக் கொண்டு இயற்கை அழகை எண்ணி வியந்து கொண்டிருந்தேன்.

 என்னருகில் வந்து அமர்ந்த ஒருவர், "ஐயா! கோவிலுக்குப் பின்னால் உள்ள கிடங்குல சாமியைக் குளிப்பாட்ட தண்ணீர் எடுக்கறதால, அங்கே யாரும் குளிப்பதில்லை. அந்த இடத்துத் தண்ணீர் மட்டும் ரொம்ப இனிப்பா இருக்கும்!' என்றார்.

 "மூலிகைச் செடி இருக்குல்லே... அதனால இனிப்பாக இருக்கலாம்' என்றேன்.

 "அதெப்படி பச்சிலை பட்டா இனிக்குமா?'

 நான் எழுந்து சென்று, அருகிலிருந்த சிறியாநங்கை செடியின் இலைகளைப் பறித்து அவரிடம் கொடுத்து, மென்று பார்க்கச் சொன்னேன்.

 "அடடா.. படு கசப்பால்ல இருக்குது' என்றவர் வாயிலிருந்ததைத் துப்பினார்.

 "இது கசப்பது போல வேற சில மூலிகைகள் இனிக்கலாமில்லையா?' என்றேன்.

 "சரிதான் ஐயா!' என்றவர் என்னைவிட்டு அகன்று போனார்.

 மாலையில் சிற்றுண்டி முடித்து மரக்கட்டைகளைச் சேகரித்து, கோபுரம் போல அடுக்கி தீ வைத்துவிட்டு அவர்கள் கோவிலுக்குச் சென்று பஜனை செய்ய ஆரம்பித்தனர்.

 மிருகங்கள் வராமல் இருப்பதற்காக போடப்பட்ட தீயருகே அமர்ந்திருந்தேன். குளிருக்கு இதமாக

 இருந்தது.

 தூரத்தில் வேறு வேறு விலங்குகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

 நடு இரவுக்குப் பின் அவர்கள் கோவிலுக்கு முன்பு படுத்துக் கொண்டார்கள். நான் தீ இருந்த இடத்தின் அருகே சற்றுத் தள்ளி படுத்துக் கொண்டேன்.

 காலையில் பூஜை முடித்து, சுண்டல், வடை தயாரித்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட திட்டம். என்னோடு வந்தவர்கள், ஆற்றின் பல இடங்களில் குளித்துக் கொண்டிருந்தனர்.

 நானும் குளித்துவிட்டுச் சற்றுக் காலாற நடக்க ஆரம்பித்தேன். எனக்குப் பின்னால் சிலர் வந்தனர். பாறைகளைக் கடந்து சென்றோம்.

 அப்போது அங்கே ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டோம்.

 ஓர் இடத்தில் தாய்க் கரடியும் இரண்டு குட்டிகளும் விளையாடிக் கொண்டிருந்தன.

 சத்தமில்லாமல் பாறை மறைவில் ஒளிந்து பார்க்குமாறு அவர்களிடம் கூறினேன்.

 கரடி ஒரு குட்டியைத் தூக்கி, நின்றவாறே மரத்தின் மேல் அதை ஏற்றிவிட்டது. கீழே நின்று இதைக் கவனித்துக் கொண்டிருந்த அடுத்த குட்டியையும் அதே போல மரத்தின் மேல் ஏற்றிவிட்டது, தாய்க் கரடி. இரண்டு குட்டிகளும் மரத்தின் கிளைகளில் படர்ந்து சென்று பழங்களைப் பறித்துக் கீழே போட்டன.

 அது என்ன பழம் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை!

 கீழே விழுந்த பழங்களைத் தாய்க் கரடி எடுத்துத் தின்று கொண்டிருந்தது.

 "ஐயா... கரடி மரத்துல தலை கீழா ஏறுமுன்னு சொல்வாங்களே!'

 "நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை.. சரி...சரி... மெல்லப் பேசுங்கள்' என்றேன்.

 "ஐயா, கரடியைப் பற்றி ஏதாச்சும் சொல்லுங்களேன்!'

 "கரடி பலமுள்ள விலங்கு. ஆனா மனசளவுல கோழை! சாதாரணமா மனிதர்களைத் தொந்தரவு செய்யாது. தனக்குத் தொல்லை தரப் போகிறான் என்று சந்தேகப்பட்டால் மட்டுமே மனிதர்களைத் தாக்கும். அது தாவர உணவையே சாப்பிடும் என்றாலும் சில வேளைகளில் மாமிசமும் சாப்பிடும்.

 தேன் அதற்கு மிகவும் பிரியம். எறும்பு, ஈசல், கரையான் புற்றுகளில் வாய் வைத்து உறிஞ்சியே எல்லாவற்றையும் விழுங்கிவிடும். கரடி அறிவுள்ள மிருகம். மகாபாரதத்தில் ஜாம்பவதி என்ற பெண் கரடி பாத்திரம் வருகிறது. இராமாயணத்தில் ஜாம்பவான் என்ற கரடிதான் அனுமனுக்குத் தைரியம் சொல்லி, இலங்கைக்குச் செல்ல ஊக்கமளித்து அனுப்புகிறது' என்று சொல்லி முடிப்பதற்குள்...

 தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது!

 -தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.