நாடுகள் அறிவோம்! மெக்சிகோ
சுற்றிலும் மிக உயரமான மலைகளையும் நாட்டின் மத்தியில் மிக ஆழமான பள்ளத்தாக்குகளையும் வடக்கில் நீண்ட பாலைவனங்களையும் கிழக்கிலும் தெற்கிலும் அடர்ந்த மழைக் காடுகளையும் கொண்ட கலவைதான் மெக்சிகோ! நாட்டின் பெர


சுற்றிலும் மிக உயரமான மலைகளையும் நாட்டின் மத்தியில் மிக ஆழமான பள்ளத்தாக்குகளையும் வடக்கில் நீண்ட பாலைவனங்களையும் கிழக்கிலும் தெற்கிலும் அடர்ந்த மழைக் காடுகளையும் கொண்ட கலவைதான் மெக்சிகோ!
நாட்டின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருப்பவை மலைகள். மேற்கில் சீயெரா மேட்ரே மலைத்தொடரையும் கிழக்கில் சிறிய மலைத் தொடர்களையும் கொண்டது மத்திய பீடபூமி. இங்கு வெள்ளி மற்றும் செம்பு தாதுக்கள் மிக அதிகமாகக் கிடைக்கின்றன.
மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் யுகாடான் தீபகற்பம் செழிப்பாக நீண்டு அமைந்துள்ளது. இங்குதான் புகழ்பெற்ற மாயன் நாகரிகம் வளர்ச்சி பெற்றது. மாயன் மக்களின் கலைநயம் மிக்க கட்டடங்கள் இன்றும் அழியாமல் அவர்களின் சிறப்பைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
வேறெங்கும் காணப்படாத செடி இனங்களைக் கொண்ட வனங்களும் விலங்குகளும் மெக்சிகோவின் சிறப்பு அம்சங்கள். பூமத்திய ரேகைக்கும் ஆர்க்டிக் பகுதிக்கும் நடுவே அமைந்திருப்பதால் வடக்குப் பகுதி கடுங்குளிர்ப் பிரதேசமாகவும் தெற்குப் பகுதி கடுமையான வெப்பப் பிரதேசமாக அமைந்துள்ளதால் இரண்டு வகைப் பிரதேச விலங்குகளும் (சிறுத்தைகள்) இங்கே அதிகமாக காணப்படுகின்றன.
வடக்கு மெக்சிகோவிலுள்ள பாலைவனங்கள், வித்தியாசமான செடி,கொடி வகைகளைக் கொண்டுள்ளன. கடும் வெப்பத்தைத் தாங்கும் விதத்தில் பரிணாம வளர்ச்சி கண்ட விலங்குகளும் பறவைகளும் இங்குள்ளன. மெக்சிகோவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதியிலிருந்து (அலாஸ்கா) பஜா கலிஃபோர்னியாவுக்கு, பிரமாண்டமான சாம்பல் திமிங்கிலங்கள், குட்டிகள் போடுவதற்காக, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நீந்திச் செல்கின்றன என்பது ஓர் அதிசயம்!
கி.மு. 1200-ம் ஆண்டுகளில் இங்கு மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சி பெற்றது என்கிறது வரலாறு. ஆல்மெக் இனம் என்று முதலில் அழைக்கப்பட்டவர்களின் வழிவந்த மாயன், டோல்டெக் மற்றும் அஸ்டெக் இன மக்கள் மாறுபட்ட கலாசார வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
இவர்கள்தான் மெக்சிகோவில் இன்றும் காணப்படும் பெரும் நகரங்களையும் உயர்ந்த பிரமிடுகளையும் அமைத்தவர்கள். நட்சத்திரங்களையும் கிரகங்களையும் உற்றுநோக்கி வயல்களில் நாற்று நடுவதற்கும் விழாக் காலங்களுக்கும் ஏற்ற நேரத்தை இவர்கள் கணக்கிட்டனர்.
1500-ம் ஆண்டுகளில் ஸ்பானியர்கள் மெக்சிகோவில் தடம் பதித்தனர். ஸ்பானியர்கள் தங்களோடு கொண்டு வந்த சிற்றம்மை மற்றும் பலவித புதிய நோய்களால் இங்கிருந்த அஸ்டெக் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, வலுவிழந்த மக்களை அடிமைப்படுத்தி டெனோக்டிலான் என்ற அவர்களது தலைநகரை ஸ்பானியர்கள் கைப்பற்றி, தங்களின் ஆட்சியை நிலைநாட்டினார்கள். 1821-ம் ஆண்டு வரை ஸ்பானியர்கள் மெக்சிகோவை ஆண்டனர்.
மெக்சிகோவின் செவ்விந்திய கலாசாரம் மிகவும் பழைமை வாய்ந்தது. இக் கலாசாரம் 300 ஆண்டுக்கால ஸ்பானியர்களின் பாதிப்பையும் நாட்டு எல்லையிலுள்ள உலகின் பணக்கார நாடான அமெரிக்க ஐக்கியக் குடியரசின் பாதிப்பையும் கொண்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது. செவ்விந்திய ஸ்பானியக் கலப்பால் இவர்கள் "மெஸ்டிஜோஸ்' என்றழைக்கப்படுகின்றனர். உலகின் புகழ்பெற்ற ஓவியர்களையும் சிற்பக் கலைஞர்களையும் நகை வடிவமைப்பாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட நாடு மெக்சிகோ.
விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர்கள். விளையாட்டுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள். விளையாட்டில் தோல்வியுறுபவர்களைக் கொன்றுவிடும் பழக்கம் கூட இவர்களின் முன்னோர்கள் காலத்தில் இருந்தது. உலகப் புகழ்பெற்ற காளைச் சண்டை மற்றும் குதிரையை அடக்குதல் போன்ற வீர விளையாட்டுகள் இவர்களின் உயிர்!
விவசாயத்திலும் கனிமப் பொருட்கள் ஏற்றுமதியிலும் சிறந்து விளங்கிய போதும் அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் பரிதாபம்! இதனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்பு தேடி அருகிலுள்ள அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிடுகின்றனர் என்பது மற்றொரு சோகம்!
மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ பெயர்: ஐக்கிய மெக்சிகோ பிரதேசங்கள்.
ஆட்சிமுறை: பிரதேசத் தனித்துவம் வாய்ந்த குடியரசு.
தலைநகரம்: மெக்சிகோ நகர்.
மக்கள் தொகை: 10 கோடிக்கு மேல்.
ஆட்சிமொழி: ஸ்பானிஷ்.
நாணயம்: பெúஸô.
பரப்பளவு: 19,64,375 சதுர கிலோமீட்டர்கள்.
முக்கிய மலைத்தொடர்: சீயெரா மேட்ரே.
முக்கிய நதிகள்: ரியோ கிராண்டே, யக்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...