மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!: 17

சேத்தூர் மேற்கு மலை உச்சியிலிருந்த, பன்மொழிப் புலவரின் ஏலத்தோட்டத்தில் அவருடன் ஒருமுறை தங்கியிருந்தேன். ""இன்றைக்கு தியானப் பாறைக்குப் போய் வருவோம்''என்றார். புறப்பட்டோம். மலையேறுவது மிகவும் சிரமமாக இ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:15 pm

கொ.மா.கோதண்டம்

சேத்தூர் மேற்கு மலை உச்சியிலிருந்த, பன்மொழிப் புலவரின் ஏலத்தோட்டத்தில் அவருடன் ஒருமுறை தங்கியிருந்தேன்.

""இன்றைக்கு தியானப் பாறைக்குப் போய் வருவோம்''என்றார்.

புறப்பட்டோம்.

மலையேறுவது மிகவும் சிரமமாக இருந்தது. சேத்தூர் ஜமீன்தார் வெட்டிய ஜமீன்தார் ஓடையைக் கடந்து சென்றோம். கடைசியில் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

வெயில் தெரியாத கருங்காடு. மையத்தில் ஓர் இடத்தில் அகன்ற பாறை... அங்கே மட்டும் மரம் இல்லாததால் வெயில் தெரிந்தது. வெகுதூரம் வரை சுற்றிலும் மலைகள். இடையில் பள்ளமான வனம். எங்கும் பச்சை நிறம்! தூரத்து மலைகளில் வெள்ளைக்கோடு கீசியதைப்போல அருவிகள்... அழகின் இருப்பிடம்.

"இப்படி ஓர் இடமா?!' என் வியப்புக்கு அளவில்லை.

""சார் இங்கே ஒரு நாள் இரவில் தங்கலாமா?''எனக் கேட்டேன்.

""யானை, புலி வரும் இடம்... இங்கே உள்காட்டில் தங்க முடியாது''என்றார் தோட்ட ஏஜண்ட்.

""நானே முன்பு கேட்டுப் பார்த்தேன் முடியாதுங்குறாங்களே''என்றார் பன்மொழியார்.

""சார் தயவுசெய்து எனக்காக இன்று இரவு இங்கே துணிகளால் டேரா போட்டு முன்னால தீ போட்டுத் தங்கணும்.''

""சரி பார்ப்போம்.''என்றார்

""சார் இந்த இடத்துக்கு தியானப் பாறைன்னு யார் பேர் வச்சது?''

""நான் தோட்டத்துக்கு வரப்ப எல்லாம் இங்க வந்து ஒரு ரெண்டு மணி நேரமாவது தியானம் செய்துட்டுப் போவேன். அதனால நம்ம தோட்ட ஆளுக இந்தப் பேரை வச்சிட்டாங்க''

மூன்று பக்கமும் பார்த்துக்கொண்டு,"இங்கேயே இருக்கலாமே' என்று என் மனம் அங்கேயே சுற்றியது.

ஏதோ மனிதர்களின் பேச்சு சத்தம் பெரிதாகக் கேட்டது. ஏஜண்ட் எழுந்து சென்றார்.

தோட்டத் தொழிலாளர்கள் பாடிக்கொண்டு கூட்டமாக வந்தனர்.

""என்னப்பா வேலையை விட்டுட்டு

வந்துட்டீங்க?'' அதட்டினார் ஏஜண்ட்.

""சாமி, ஏலம்பழம் எடுத்துகிட்டு இருந்தோம், நம்ம பொன்னுத்தாயி கையில ரெட்டப்பழம் கிடைச்சிருக்கு. முதல்ல முதலாளிகிட்ட காட்டணும்னு வந்துட்டோம்''

""எங்கே கொடு பார்ப்போம்'' இரட்டைப் பழத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில்,""பரவாயில்லையே, பொன்னுத்தாயிக்கு அதிர்ஷ்டம்தான்''என்று சொன்னார்.

பிறகு,""சரி வாங்க எல்லாரும் போகலாம்''என்றார். எல்லோரும் புறப்பட்டனர்.

எனக்கு ஏதும் புரியவில்லை.

அவர் என்னைப் பார்த்தார். ""இதைப் பாரு'' என்றபடியே தந்தார்.

வாழைப்பழத்தில் இரட்டைப் பழம் இருப்பதுபோல ஏலக்காய் இரட்டையாக இருந்தது புதுமையாக இருந்தது.

""ஏலப்பழம் பறிக்கும்போது, எப்போதாவது அரிதாக இப்படி நடக்கும். அப்படி இரட்டைப்பழம் கிடைத்தால் அடுத்த ஆண்டு இரண்டு மடங்கு விளையும் என்ற நம்பிக்கை. ஆண் எடுத்தால் அவனுக்கு இரண்டு பெண்களோடு கல்யாணம் நடக்குமென்றும், பெண் எடுத்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கைகள்.

கிடைத்த அன்று, அதோடு வேலை விட்டுவிடுவார்கள். எல்லோருக்கும் கால்படி அரிசி தர வேண்டும். எடுத்த ஆளுக்குப் பணம் பரிசு தர வேண்டும்... சாமி கும்பிட்டு, சர்க்கரைப் பொங்கல் வைத்து, எல்லோருக்கும் தர வேண்டும். இப்படி ஒரு நடைமுறை தோட்டங்களில்'' என்றார்.

எல்லோரும் ஜாகைக்கு இறங்கிக் கொண்டிருந்தோம். ஜாகைக்கு எதிரிலுள்ள இடத்தில், மரத்தடியில் ஒரு கல், சாமியாக வைக்கப்பட்டிருந்தது.

அங்கே இலையில் சாமிக்கு முன் இரட்டைப் பழம் வைத்து, தேங்காய் உடைத்து, அருகே உள்ள செடிகளிலிருந்து பூக்கள் பறித்து மாலையாக்கிப் போட்டு, கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சர்க்கரைப் பொங்கல் மும்முரமாகத் தயாராகிக்கொண்டிருந்தது.

நானும் புலவரும் மரத்தடியில் நாற்காலிகளில் அமர்ந்தோம். பூஜைகள் நடைபெற்றன.

""இரட்டைப் பழம் எடுத்த பொண்ணு

கெட்டிக்காரிதான்

பட்டணத்து மாப்பிள்ளைய

புடிச்சிக்கப்போறா

ரெட்டப் புள்ள ஆம்புளப்புள்ள

பெத்துக்கப்போறா

ரெட்டை மாடி வீடுகட்டி

வாழத்தான் போறா''

பெண்கள் குலவைப் பாட்டு பாடினார்கள். பூஜை முடிந்து பொங்கல் பறிமாறினார்கள். எல்லோருக்கும் கால்படி அரிசி வீதம் ஏஜண்ட் அளந்து தந்தார். இரட்டைப் பழம் எடுத்த பெண்ணை அழைத்து வந்தனர். பன்மொழியார் காலில் விழுந்து வணங்கினாள். அவர் ஐம்பது ரூபாய் கொடுத்தார். நானும் பத்து ரூபாய் கொடுத்தேன்.

அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். மாலையானதும் பன்மொழியார், நான், ஏஜண்ட், ஒரு பணியாள் ஆகியோர் தியானப்பாறை சென்றோம். கம்பளிகளால் டேரா அமைத்து, கீழே கம்பளி விரித்துத் தங்கினோம். முன்புறம் கட்டைகள் போட்டுத் தீ போட்டனர்.

உச்சிமலை அடர்வனத்தில் பாறையில் இரவில் தங்கினோம். கம்பளி போர்த்தியும்கூட குளிர் அதிகமாக இருந்தது.

யானை மற்றும் பிற மிருகங்கள் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் வரவில்லை, வன விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த இடம் எல்லாம் கேரளாக் காடுகள்.

அதிகாலை நான்கு மணிக்கே, பல்வேறு பறவைகளின் கீச்சுக் குரல்கள் ஒரு பாட்டுக் கச்சேரியாக பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தன.

அதைக் கேட்கவே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மெல்ல வெளிச்சம் பரவியது. எழுந்து தீயை அணைத்துவிட்டு பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

சிறிது தூரத்தில் ஒரு மலைப்பாம்பு மெல்ல வளைந்து போய்கொண்டிருந்தது. எழுந்து பார்த்தோம். எதிரே ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. மலைப் பாம்பு படக்கெனப் பாய்ந்து, வந்த பாம்பின் தலையைக் கவ்விவிட்டது.

மெல்ல மெல்ல முழுப்பாம்பையும் விழுங்கிக்கொண்டிருந்தது.

பணியாள், ""பாம்பை அடிக்கட்டுமா'' என்றான்.

ஏஜண்ட், ""வேண்டாம்பா, பார்த்துக்கொண்டிருப்போம்'' என்றார்.

""இந்த மலையில் ராஜநாகம் இருக்காமே பார்த்திருக்கிறீர்களா'' என்று கேட்டேன்.

""அப்படித்தான் சொல்கிறார்கள் எங்கள் கண்ணில் இதுவரை படவில்லை. சாரைப்பாம்புக்கு விஷம் இருக்கு. அதைப்போல இரண்டு பங்கு விஷம் விரியன் பாம்புக்கும், விரியன் விஷம்போல மூன்று மடங்கு விஷம் நல்ல பாம்புக்கும், அதைவிட இரண்டு மடங்கு கருநாகத்துக்கும் விஷம்! கருநாகத்தை விட இரண்டு மடங்கு விஷம் ராஜநாகத்துக்கு! பொதுவாக மலையில் வாழும் பாம்புகளுக்கு விஷம் கம்மி. இன்னும் பல பாம்புகளுக்கு இங்கே விஷமே இல்லை!''

""அட ஒரு பாம்புப் புராணமே கூறிவிட்டீர்களே'' என்றேன்.

""எல்லாம் அனுபவம்தான். மத்தவங்க சொல்லிக்கேட்டதுதான். சரி, ஜாகைக்குப் புறப்படுவோம்'' என்றார்.

அழகின் இருப்பிடத்தைவிட்டு வர மனமில்லாமல் எழுந்து நடந்தோம்.

-தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.