காட்டுக்குள்ளே கொண்டாட்டம்! - 9
உள்காட்டில் நடந்து கொண்டிருந்தோம். என் மகன்கள் குறளமுதன், இளங்கோ இருவரும் உடன் வந்தனர். வழிகாட்டியாக நீலன் முன்னால் நடந்து சென்றான். மரம், செடிகள், கொடிகள், புதர்கள், புல்வெளிகள் இடையிடையே விலங்குகள்


உள்காட்டில் நடந்து கொண்டிருந்தோம். என் மகன்கள் குறளமுதன், இளங்கோ இருவரும் உடன் வந்தனர். வழிகாட்டியாக நீலன் முன்னால் நடந்து சென்றான்.
மரம், செடிகள், கொடிகள், புதர்கள், புல்வெளிகள் இடையிடையே விலங்குகள் போலிருக்கும் பாறைகள். மயில், ஆந்தை, கிளிகள், கழுகு மற்றும் பல காட்டுப் பறவைகள், யானை, புலி, கரடி, செந்நாய், ஓநாய், பன்றி முதலிய விலங்குகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் அடர்வனம்.
வெயிலே கீழே விழாது. மஞ்சு மூட்டங்கள் மரங்களில் படுத்து ஓய்வெடுக்கும், தூறலாக விழுந்து மறையும். அந்த வனத்தில் கல், முள், வேர்கள், நிரம்பி சருகுகள் மறைத்த
ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தோம்.
ஏதோ சத்தம்.
""சாமி மேல பாருங்க! கருமந்திகள் அங்குமிங்கும் கிளைகளில் தாவி ஓடிக்கிட்டு இருக்குதுங்க!''
குரங்கு போன்ற உடலமைப்பு, சப்பை முகம், கருப்பு நிற கருமந்திகள் ஓடி மறைந்து விட்டன.
""இது நெறைய இருக்கா நீலா?''
""சாமி முன்னால மருந்துக்குன்னு ரொம்ப பேரு வந்து, கருமந்திகளை சுட்டுக்கொன்னு எடுத்துட்டுப் போவாங்க, இப்ப ஆபிஸருங்க யாரையும் விடுறது இல்லே''
""ஆமாப்பா... முன்னால தேக்கு, கருங்காலி மரங்களை வெட்டி உள் வனத்துலேயே ஒரு சதுர அடி கனத்துல, பத்தடி நீளத்துல, ரெண்டு பேரு தூக்கிட்டு வருவாங்க... அப்படிப் போன மரங்கள் பல லட்சம் ரூபா பெறும்! ரெம்ப நாள், இது நடந்துகிட்டு இருந்தது. புகார் செய்தவங்களையும் கொன்னு போடுவாங்க. இப்ப இல்ல, வனப் பாதுகாப்பு உணர்வு அரசுக்கு உண்மையிலேயே வந்துடிச்சில்ல!''
""அய்யா, நீங்க காட்டைப்பற்றி நானூறுக்கு மேலே கதைகள் எழுதீட்டீங்க! ஆனா ஒரு கதையிலயும் சிங்கம் வரலியே எதுக்குப்பா?'' குறளமுதன் கேட்டான்.
""நான் சிவசைலம், குற்றாலம், புளியங்குடி, சிவகிரி, தேவதானம், சேத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சேர்ந்த மலைகள், கொடைக்கானல், ஏற்காடு மலைகளுக்கும் போயிருக்கேன். பொதுவா, அதிகக் கற்பனை இல்லாம எதார்த்தத்தை வச்சே நான் எழுதி வருகிறேன். தமிழ்நாட்டு மலைகளில் சிங்கம், காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் இல்லை. ஆகையால் நான் அவைகளைப்பற்றி எழுதவில்லை. பெரும்பாலும் பார்த்த, கேட்ட அனுபவங்களை வைத்தே எழுதுகிறேன்.''
சலசலத்தோடும் நீரோடை அருகில் பாறையில் அமர்ந்து, கொண்டு சென்ற உணவை சாப்பிட்டோம். இளங்கோ தன்னிடமுள்ள டேப்ரிக்கார்டரில் கேஸட்டைப் போட்டுவிட்டான். பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பதிவு செய்திருந்தான். தமிழ் மொழி பற்றிய பாடல்கள், ""தமிழுக்கும் அமுதென்று பேர்'' பாடல்... இனிமையாக இருந்தது! ரசித்துக்கொண்டே சாப்பிட்டோம். பாடல் முடிந்து, நடக்கும்போது இளங்கோ கேட்டான், ""இந்த மலையைப்பற்றி ஏதேனும் சொல்லுங்கப்பா!''
""மலையைப் பார்த்தா, நமக்கு வெறும் கல்லும் மண்ணும் மட்டுமே தெரியுது. ஆனா இது செல்வம் கொழிக்கும் தங்கத்தைப் போன்றது. உயர்தரமான வலுவான மரங்கள், வாசனைப் பொருள்கள், மூலிகைப் பொருள்கள், காய்கனி, கிழங்குகள் அத்தனையும் செல்வம். நாட்டை வளப்படுத்தும் மழை, தண்ணீர். இத்தனையும் தருகின்ற மலைவனம். உயிர் காக்கும் மூலிகைகள், விஷச் செடிகள் யாவும் விளைகின்றன!
நமது பகுதியிருக்கே, 99 சதவிதம் மலைகள், வனங்கள், கேரளாவுக்கு! ஒரே ஒரு சதவீதம் மட்டும் தமிழ்நாட்டுக்கு. வடக்கே போனால் 98 சதவிதம் கர்நாடகாவுக்கு... 2 சதவீதமே நமக்கு. மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அறியாமையில் எல்லாமேவிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
வெற்றுநிலம் மட்டுமே நமக்கு! தண்ணீருக்கு மற்றவர்களை எதிர்பார்த்து கைநீட்டி வாழும் நிலை. அரிசி, பருப்பு, தானியங்கள் யாவும் தந்தாலும் தண்ணீர் தர மட்டும் அவர்களுக்கு மனமில்லை. ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பங்கேனும் வனங்கள் இருந்தால்தான் நாடு
வளமுடையதாக இருக்கும். நாமோ இருக்கும் வனங்களையும், விலங்குகளையும் அழித்துக்கொண்டே வருகிறோம். நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்!''
நாங்கள் நடந்து சென்றபோது குறுக்காக ஒரு முயல் பாய்ந்து சென்றது. ஒரு நரி துரத்திக்கொண்டு காற்றாக அதன் பின்னை ஓடியது.
""என்னப்பா நீலா, முயல் பிடிபட்டுவிட்டுமா?''
""அது சொல்ல முடியாது சாமி, அததுக்கு உடல்நிலை, பாதை, நேரம் எல்லா சரியா இருந்தா அமையும். இல்லேன்ன ஏமாந்து திரும்பும். இதெல்லாம் அதுகளுக்கு சகஜம். நாலு முயலை விரட்டுனா ஒன்னு கிடைக்கும் சாமி.''
ஏதோ சத்தம் கேட்டது. எங்களை இருக்கச் சொல்லிவிட்டு நீலன் சென்றான். நேரம் கழித்தே வந்தான்.
இளங்கோவிடம் ""அந்த பாட்டுப் பாடறதைத் தாங்க சாமி'' என்று, பாட வைத்து, வாங்கிச் சென்றான்.
சிறிது நேரம் கழித்து வந்து எங்களையும் அழைத்துச் சென்றான். ஒரு பாறையின் மீது டேப்ரிக்கார்டர் பாடிக்கொண்டிருந்தது.
தூரத்தில் ஒரு முரட்டு மிளாமான் தன்குட்டியை நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
""என்னப்பா நீலா'' என்று கேட்டான்.
""சாமி இந்த மிளாமான் இப்பதான் குட்டி போட்டது. பிரசவ வலியால ரொம்ப நேரம் கஷ்டப்பட்டிருக்கு. குட்டி பிறந்ததும் "இதாலதானே நமக்கு இந்தக் கஷ்டம்' என்று
நினைத்து, குட்டிய பால் குடிக்கவிடாமல் காலால் எட்டி எட்டி உதைத்து. என்ன செய்யலாமென்று பார்த்த நான், உங்களிடம் டேப்ரிக்கார்டர் வாங்கிப் போனேன். இந்தப் பாட்டு சுகத்துல எல்லாம் மறந்து, குட்டிய பால் குடிக்க விட்டிருச்சி. அந்தக்
கஷ்டங்களைப் பாக்க வேண்டாமுன்னுதான் உங்கள அப்பாலேயே கூப்புடல!''
""சரிப்பா இசையால செடி, கொடிகள் வளருமுன்னு விஞ்ஞானிகள் கண்டுபுடிச்சிருக்காங்க. நீ என்னடான்னா இசையாலே தாய்மையையே உணரவச்சிட்டே! நீ கூட ஒரு காட்டு விஞ்ஞானிதான்!''
""சரி, சாமி போகலாம் நேரமாச்சி'' என்றான்.
அவனைவிட்டுப் பிரியும்போது இளங்கோ தன்னிடமிருந்த சிறுவர் அறிவியல் நூல்களை அவனிடம் தந்து உங்க பையன்களுக்குத் தந்து சொல்லிக் கொடுங்க'' என்றான்.
குறளமுதன் கடலை மிட்டாய், பிஸ்கெட் பாக்கெட்டுகள் தந்தான்.
நாங்கள் திரும்பி நடந்தோம்.
-தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...