காட்டுக்குள்ளே கொண்டாட்டம்! - 10
மேற்குமலை ராஜபாளையம் பகுதி அடர் காட்டுக்குள் சில மாணவர்களுடன், நீலன் வழிகாட்டச் சென்றோம். ஒற்றையடிப் பாதை ஓரங்களில் கிண்டம் முள் செடிகள் சட்டைகளைப் பிடித்துக் கொள்ள, எடுத்துவிட்டுச் செல்வது சிரமமாக இர


மேற்குமலை ராஜபாளையம் பகுதி அடர் காட்டுக்குள் சில மாணவர்களுடன், நீலன் வழிகாட்டச் சென்றோம். ஒற்றையடிப் பாதை ஓரங்களில் கிண்டம் முள் செடிகள் சட்டைகளைப் பிடித்துக் கொள்ள, எடுத்துவிட்டுச் செல்வது சிரமமாக இருந்தது. முள்ளின் நுனி கொக்கிபோல இருப்பதால் பார்த்து மெல்ல எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டையைக் கிழித்துவிடும்.
அனுபவமில்லாத பையன்கள்...
பாதையில் கற்கள், வேர்களில் தடுக்கி விழுந்து, எழுந்து நடந்து வந்தனர்.
இடையில் நதி குறுக்கிட்டது. தண்ணீர் சலசலத்துப் போய்க் கொண்டிருந்தது. கரையில் மூங்கில் மரங்கள் நிறைய இருந்தன. நதியில் குளித்துவிட்டு, வழக்கம்போல, பாறையில் அமர்ந்து சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு, தண்ணீர் குடித்தோம்.
""நீலா... இந்த மூங்கிலைப் பத்தி ஏதேனும் சொல்லேன்'' என்றதும் அவன் ஆரம்பித்தான்...
""சாமி இது வேகமா வளரும். வெயிலடிக்கும்போது கிளைகள் சாய்ந்து இருக்கும். வெயில் போனதும் நேரா நிமிர்ந்து நிற்கும். மூங்கில் அரிசியை நாங்க சமைச்சி சாப்புடுவோம். இப்பபோயி, நான் மூங்கிலரிசியைப் பறிச்சிட்டு வாரேன். இன்னொரு இடத்துல, மரத்துல தேன் எடுத்து அரிசி மாவுல கலந்து தாரேன், சாப்புட்டுப் பாருங்க'' என்று கூறிவிட்டு தாழ்ந்த கிளைகளில் அரிசி சேகரிக்கச் சென்றான்.
""சார் மூங்கில் பற்றி நீங்க ஏதேனும் சொல்லுங்க'' மாணவர்கள் கேட்டனர்.
""புராண காலத்தில் கண்ணுசாமி என்ற முனிவர் தவமிருக்கையில், தன்னைச் சுற்றி வளர்ந்த மூங்கிலில் மூன்று பெரிய வில்கள் செய்து விஷ்ணுவுக்கும், சிவனுக்கும், பிரம்மனுக்கும் தந்ததாகக் கதை. குழந்தைத் தொட்டில், நாற்காலிகள், மேஜைகள், சோபாக்கள், வீட்டுத்தூண்கள், குடிசை வேய சட்டங்கள், விளையாட்டுப் பொருள்கள் இப்படி எத்தனையோ வகையில் பயன்படுகிறது மூங்கில்! இது புல்வகை தாவரம்!''
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மூங்கில் அரிசியைத் தவிடு நீக்கி, பாறையில் அறைத்து, மாவாக்கி, தேன் கலந்து, தேக்கு இலைகளில் வைத்து, நீலன் தந்தான்.
ஆகா! என்ன சுவை! எல்லோரும் பிரியமுடன் சாப்பிட்டோம்.
நடக்கும்போது ஒரு பையனுக்கு மரத்தில் நீட்டியிருந்த சிராய் கீச்சி, கையில் தோள்பட்டைக்கு கீழே சதை பிய்ந்துவிட்டது. நீலன் சென்று அத்தாவொட்டி என்ற பச்சிலையைக் கொண்டுவந்து அறைத்துப் பூசி, துணியால் கட்டிவிட்டான்.
""சாமி இது தையல் போடாமலேயே சேர்ந்துக்கிடும். நாலு நாள் தண்ணிபடாம பார்த்துக்கிடனும்'' என்றவன் ஓர் இலையை இரண்டாகக் கிழித்தான். பின் ஓட்டவைத்தான். இலை மீண்டும் ஒட்டிக் கொண்டது. மாணவர்கள் வியந்து பார்த்தனர்.
திடீரென மரத்திலிருந்த குரங்குகள் கூட்டமாக கத்தின. நீலன் எச்சரிக்கை செய்தான். நாங்கள் பாறை மறைவில் ஒளிந்து கொண்டோம்.
சிறிது தூரத்தில் இரண்டு மான்களை விரட்டிக் கொண்டு புலி ஒன்று வேகமாக பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. மான்கள் காற்றாய் பறப்பது போலச் சென்றன. மாணவர்கள் புலியைக் கண்டதும் பயந்துவிட்டனர்.
""சாமி, புலி போயிடிச்சி பயம் வேண்டாம். இனி இந்தப்பக்கம் வராது.''
""சரிப்பா... புலிகிட்ட மான் அகப்பட்டுவிடுமா?''
""சாமி, புலி பசிக்காக ஓடுது... மான் உயிர் காக்க ஓடுது... பெரும்பாலும் மான் தப்பிச்சிடும். இடையில் மான் தடுக்கி விழுந்திட்டா போச்சு!''
சட்டென்று பஞ்சு மூட்டம் வந்து எங்களை மறைத்துக் கொண்டது. கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. இப்படியே சில கணங்கள் சென்றன. பிறகு சிலுசிலுவென தூரல் விழ ஆரம்பித்தது. காற்றடித்ததும் மஞ்சு மூட்டம் விலகியது. எங்கள் வாய்களிலிருந்து புகைபோல வந்தது.
""டேய் சிகரெட் பிடிச்சியா?'' என்றான் ஒரு பையன்.
""நீ தான் பிடிச்சிருப்ப, உன் வாயிலும் புகை வருதே!''
""சாமி, இப்ப இங்க எல்லார் வாயிலிருந்தும் புகை வரும்... நம்ம உடம்புல உள்ள வெப்பமும் வெளியேறும்.''
ஏதோ ஒரு பறவை எச்சம் பட்டு, ஒரு மாணவனின் சட்டையெல்லாம் அசிங்கமாகிவிட்டது.
சட்டையைக் கழற்றித் தரச் சொல்லி, நீலன் வாங்கிக் கொண்டான். சிறிது தூரம் சென்றதும் ஒரு மரத்தில் ஏறி அதன் கோலிக்குண்டு அளவு பழங்களைப் பறித்து வந்து தட்டினான். அதை ஒரு பாறைக் குழியில் போட்டு, தண்ணீர்விட்டு கவட்டைக் கம்பால் கடைந்தான். சோப் நுரைபோல வந்தது. சட்டையை அதில் நனைத்து, ஓடையில் அலசிக் காய வைத்துத் தந்தான்.
""இந்த காய்க்கு பேரென்ன சார்?'' மாணவர்கள் கேட்டனர்.
""இது நெக்கட்டான் காய். நகை செய்றவங்க, இதாலதான் நகைகளைச் சுத்தம் செய்வாங்க''
கீழே கிடந்த சில காய்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
தூரத்துப் பாதையில் ஒரு கரடி சென்று கொண்டிருந்தது. மரக்கிளையிலிருந்து ஒரு கரடி அதன் மீது குதித்தது. இரண்டும் கடுமையாக சண்டையிட்டன. நாங்கள் பாறை மறைவில் ஒளிந்து பார்த்தோம். சண்டை நீண்ட நேரம் நீடித்தது.
""என்ன நீலா?'' என்றேன். ""சாமி, கரடிங்க பெரும்பாலும் விளையாட்டாதான் சண்டை போடும். இப்படி கோபமான சண்டை வந்தா, ஒன்னாவது கடிபட்ட காயத்துல செத்துடும்!''
அவன் ஒரு பெரிய கல்லைத் தூக்கினான். அதை ஒரு பாறையில் படீரென்று போட்டான். சத்தம் கேட்ட கரடிகள் இரண்டும் வெவ்வேறு திசைகளில் வேகமாக ஓடின.
""சாமி, இப்ப... இதை விரட்டலேன்னா... ரெண்டும் கடிச்சிக்கிட்டு உடம்பெல்லாம் ரத்தமாகிடும். அதான் கல் போட்டு விரட்டினேன்.
பொதுவா கரடி, மனுசங்களைக் கண்டா விலகிப் போயிடும். தனக்கு இடைஞ்சல் செய்ய வந்திருக்காருன்னு நெனச்சா, அடிச்சே கொன்னு போடும். முன் காலால அடிச்சதுன்னா, அதன் கையிலே சதையோடுதான் பிச்சி எடுக்கும். அடிச்சிப் போட்டுட்டுப் போயிடும். புலிதான் உடம்பைத் தின்னும். கரடிக்கு ரொம்ப பசிச்சாதான் கொஞ்சம் சாப்பிடும்... இல்லேன்னா போட்டுட்டு போயிடும்.''
""ஒருசமயம், எங்க மாமன் கிழங்கு தோண்டும்போது பின்னால வந்த கரடி அப்படியே கட்டிப்புடிச்சிருக்கு. மாமன் யாரோ கூட்டாளின்னு நெனச்சி "விடுடா கையை'ன்னுருக்காரு! அப்புறம், கரடியைப் பார்த்ததும் பயந்துட்டாரு. உடனே தனது ரெண்டு முழங்கையாலயும் கரடியின் அடி வயித்துலே, பின்பக்கமாக இருந்துகொண்டு "நங் நங்'குன்னு குத்துனாரு. அது வலி பொறுக்காம, அவரை விட்டு ஓடிடுச்சி சாமி!''
""அடேயப்பா இன்னைக்கி ரொம்ப பயமான காட்சிகள்! ரொம்ப செய்திகள்
தெரிஞ்சிக்கிட்டோம்'' மாணவர்கள் கூறினார்கள்.
நேரமாகவே, திரும்பி நடந்தோம்.
-தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...