/

பறவையைத் தொடர்வோம்...

 சிறகுகள் செம்பஞ்சுக் குழம்பு நிறத்தில் இருப்பதால் செவ்விறகுக் கொண்டை குயில் என்ற பெயர் வந்தது.

News image
Updated On :8 டிசம்பர் 2012, 10:07 am

அபி

செவ்விறகுக் கொண்டை குயில்
 
 சிறகுகள் செம்பஞ்சுக் குழம்பு நிறத்தில் இருப்பதால் செவ்விறகுக் கொண்டை குயில் என்ற பெயர் வந்தது.
 கருப்பாக பளபளப்பான மேற்பகுதியும், கருப்புத் தலையும் நீண்ட செந்நிற சிறகுகளும் நீண்டு கருத்த வாலும் கொண்டது. வயிற்றுப் பகுதி மட்டுமே சற்றே வெள்ளையாக இருக்கும்.
 இமயமலைப் பகுதிகளில் வாழும் இந்தப் பறவை அங்கிருந்து குளிர் காலத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதி வந்து, ஸ்ரீலங்கா சென்று அங்கிருந்து இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் செல்கிறது.
 47 செ.மீ. நீளமுள்ள பறவை. பெரும்பாலும் தனிமையாகக் காணப்படும். கோடைகாலத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். முட்டைகள் கோள வடிவில் இருக்கும். குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
 
 குயில்
 
 இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா, சீனா மற்றும் ரஷ்யாவில் குயிலை அதிகம் பார்க்கலாம். தனிமை விரும்பும் பறவை. பெரும்பாலும் காடுகளில் காணப்படும்.
 கருஞ்சாம்பல் நிறப் பறவை. சிறகுகளின் இறுதியில் சற்றே வெண்மை நிறம் காணப்படும்.
 கண்களைச் சுற்றி மஞ்சள் வளையம் காணப்படும்.
 இதன் குரல் மிகவும் இனிமையாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
 இது கம்பளிப் பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும்.
 தனது முட்டைகளை காகத்தின் கூடுகளில் போட்டுவிட்டுச் சென்று விடும். பெரும்பாலான சமயங்களில் காகங்கள் தங்களுடைய முட்டை என்று எண்ணிக் கொண்டு குயிலின் முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும். 12 நாட்களில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.
 
 அக்கா குயில்
 
 அக்கா குயில் தெற்காசியப் பறவை. பார்ப்பதற்கு சிறிய கழுகைப் போல இருக்கும். இதன் பறக்கும் தன்மையும் பூமியில் வந்து இறங்கும் விதமும் கூட கழுகைப் போலவே இருக்கும். இதனால் இந்தப் பறவையைப் பார்க்கும் சிறிய பறவைகளும் அணில் குஞ்சுகளும் பயந்து ஓடும். நாள் முழுவதும் நீண்ட வேதனையான குரலால் பாடிக் கொண்டே இருக்கும். யாரையோ எதிர்பார்த்துப் பாடுவது போல இருக்கும்.
 34 செ.மீ. நீளம் இருக்கும். சாம்பல் நிற மேல் பகுதியும் பழுப்பு நிற வரிகளைக் கொண்ட வெண்மை வயிற்றுப் பகுதியையும் கொண்டது. சிறகுகள் நீண்டு, சற்றே விரிந்திருக்கும்.
 சிறிய பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும். கம்பளிப் பூச்சிகளைக் கூட அப்படியே சாப்பிட்டு விடும். வயிற்றுக்குள் சென்ற கம்பளிப் பூச்சியின் ரோமங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு விடும்.
 பாகிஸ்தான், இமயமலையின் அடிவாரங்கள், வங்காளதேசம் மற்றும் ஸ்ரீலங்காவில் இந்தப் பறவையை அதிகம் காணலாம். பெரும்பாலான நேரம் விண்ணிலேயே இருக்கும். தோட்டங்களிலும் மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் வசிக்கும்.
 ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டைதான் இடும். அது நீல நிறத்தில் இருக்கும்.
 
 செங்குயில்
 
 சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்குயில் என்று பெயர். அளவில் சிறிய பறவை. 22 செ.மீ. நீளம் இருக்கும். அலகு சற்றே நீளமாக இருக்கும். அலகின் முனை மெல்லியதாக வளைந்து காணப்படும். கண்களுக்கு அருகில் வெண்மை நிறம் காணப்படும். சிறகுகள் செந்நிறமாகவும் வால் பகுதி கரும்பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
 நிறைய மரங்கள் உள்ள நிலப் பகுதிகளில் இதை அதிகம் பார்க்கலாம். இது எப்போது முட்டை இடுகிறது, எப்போது குஞ்சு பொறிக்கிறது என்பது பற்றி அதிகமான தகவல்கள் இல்லை.
 இந்தியாவில் பருவமழைக் காலங்களில் இதைப் பார்க்கலாம். சிறிய புழு பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
 இதன் குரல் நீண்டதாக விசிலடிப்பது போல இருக்கும்.
 
 
 கரிச்சான் குயில்
 
 கரிச்சான் குயிலும் தோற்றத்தில் சக்களத்திக் குயிலைப் போலவே இருக்கும். இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகம் வசிக்கும் பறவை. இதுவும் சிறிய பறவைதான். வாலின் முனை மீனின் வாலைப் போல பிளவுபட்டு இருக்கும்.
 இதன் குரலும் இனிமையாக இருக்கும். இதன் மற்ற குணங்கள் எல்லாம் சாதாரணக் குயிலைப் போலவே இருக்கும்.
 
 சக்களத்திக் குயில்

குயில் இனத்தைச் சேர்ந்தது இந்த சக்களத்திக் குயில் ஆசியா, இந்தியா, சீனா மற்றும் இந்தோனேஷியாவில் அதிகம் காணப்படும்.
 மிகவும் சிறிய பறவை 23 செ.மீ. நீளமே இருக்கும். சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும். உடம்பின் கீழ்ப் பகுதியில் சற்றே ஆரஞ்சு நீறம் காணப்படும். தலையின் நிறம் சாம்பல். வாலில் வெண்மை நிறம் பட்டை பட்டையாகக் காணப்படும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்கள் சிவப்பாக இருக்கும். அலகு கருப்பும் மஞ்சளும் கலந்த கலவையில் இருக்கும்.
 இதன் குரலும் இனிமையாக இருக்கும். காடுகளின் வெளிப் பகுதியில் வசிக்கும். பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பதால் இந்தப் பறவையை அவ்வளவாகப் பார்க்க முடியாது. சிறிய புழு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்.
 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.