/

பறவையைத் தொடர்வோம்...

சிறகுகளில் மட்டும் ஆங்காங்கே கருப்பு வண்ணம் காணப்படும்

News image
Updated On :9 நவம்பர் 2012, 11:03 am

அபி

கருங்கொண்டை வல்லூறு
 
அளவில் சிறியது இந்தக் கருங்கொண்டை வல்லூறு. கருப்பு நிறத்தில் இடையே இடையே வெண்ணிற வரிகளுடன், தலையில் சிறிய கொண்டையுடன் பார்ப்பதற்கு மிக அழகான பறவை. சிறிய தடித்த கால்களைக் கொண்டிருக்கும். வளைந்த சிறிய உறுதியான அலகு. சிறகை விரித்துப் பறப்பதும் ஓர் அழகுதான். குரல் கீச்சு கீச்சென்று மெல்லியதாக இருக்கும்.
 தெற்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் அதிகம் இதைப் பார்க்கலாம். சில சமயங்களில் சென்னையிலுள்ள கிண்டி வனவிலங்குக் காட்சியகத்திலும் இதைக் காணமுடியும்.
 வானிலிருந்து பறந்து கீழே வந்து புழு பூச்சிகளைக் கொத்திச் சாப்பிடும்.
 முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர 26 முதல் 27 நாட்கள் ஆகும்.
 
 கள்ளப் பருந்து
 

கள்ளப் பருந்து, அளவில் சற்றே பெரியது. பெரும்பாலும் பழுப்பு நிறம் இதன் நிறமாகும். சிறகுகளில் மட்டும் ஆங்காங்கே கருப்பு வண்ணம் காணப்படும். கால்கள் மஞ்சள் நிறத்திலிருக்கும். வால் பகுதி சற்றே குட்டையாக இருக்கும். சிறிய, வளைந்த அலகு.
 ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் பறவையினம்.
 வானில் பறக்கும்போது பார்த்தால் மிதப்பது போல இருக்கும். அங்கிருந்தபடியே தனது இரையைச் சரியாகக் கணித்து டைவ் அடித்துக் கீழே இறங்கிப் பிடித்து விடும். மீன் மற்றும் சிறு பிராணிகளை உணவாகக் கொள்ளும். இந்தியாவில் நகரங்களிலேயே இதைப் பார்க்கலாம்.
 ஒரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். 34 நாட்களில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.
 
 தேன் பருந்து
 
தேனின் நிறத்தில் இதன் சிறகுகள் இருப்பதால் இதற்குத் தேன் பருந்து என்ற பெயர். கழுத்து சற்றே நீண்டு இருக்கும். இதற்கும் சிறிய அளவான அலகுதான். வால் சற்றே நீளமாக இருக்கும்.
 ஆசியா, சைபீரியா மற்றும் ஜப்பானில் அதிகம் காணப்படும் பறவை. மரங்கள் அடர்ந்த பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கும்.
 சிறிய புழுக்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும். கூட்டுக்குள் இருக்கும் சிறிய உயிரினங்களைக் கூடச் சரியாகத் தேர்வு செய்து சாப்பிட்டு விடும்.
 பொருள்காட்சிகளில் ரோலர் கோஸ்டர்களில் பயணித்து இருப்பீர்கள். திடீரென்று கீழே இறங்கி சட்டென்று மேலெழும்பிச் செல்லும் அந்த ரயிலில் பயணிப்பது ரொம்ப ஜாலியாக இருக்குமல்லவா? இந்தத் தேன் பருந்தும் அப்படித்தான் விண்ணில் பறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.