/

பறவையைத் தொடர்வோம்...

 டிட் என்ற பறவையினத்தைச் சேர்ந்தது இந்த பட்டாணி குருவி. சிறிய, வால் நீண்ட குண்டுப் பறவை. ஐரோப்பா,

News image
Updated On :6 அக்டோபர் 2012, 10:58 am

அபி

பட்டாணிக் குருவி
 
 டிட் என்ற பறவையினத்தைச் சேர்ந்தது இந்த பட்டாணி குருவி. சிறிய, வால் நீண்ட குண்டுப் பறவை. ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய மற்றும் வட ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் இந்தப் பறவை அதிகம் காணப்படும்.
 கருப்புத் தலை - குட்டிக் கழுத்து - வெள்ளைக் கன்னம் கொண்ட பறவை. ஆலிவ் பச்சை நிறத்தின் உடலின் மேற்புறம் இருக்கும். வயிற்றுப் பகுதி மஞ்சள் நிறமாக பஞ்சு போல இருக்கும். புழு பூச்சிகளையும் குட்டி வெளவால்களையும் விரும்பிச் சாப்பிடும். சிறிய பொந்து போன்ற இடங்களில் கூடு கட்டும். சமயங்களில் மரப் பொந்துகளிலும் வசிக்கும். பெண் பறவை ஒரு சமயத்தில் 12 முட்டைகளை இட்டு அடைகாக்கும். மனிதர்களோடு சேர்ந்து வாழத் தெரிந்த பறவை. அதனால் பூங்காக்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் இதைப் பார்க்கலாம்.

மஞ்சள்கண் பட்டாணிக் குருவி
 
 மஞ்சள்கண் பட்டாணியும் டிட் இனத்தைச் சேர்ந்த பறவைதான். இந்தியாவெங்கும் பரவலாகக் காணப்படும் இப் பறவையை இமயமலைப் பகுதியில் சற்று கூடுதலாகக் காணமுடியும். சிறிய காடுகளில் வசிக்கும். சிறிய பூச்சிகளையும் சிலந்திகளையும் சமயங்களில் பழங்களையும் விரும்பிச் சாப்பிடும்.
 இதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். 13 செ.மீ. நீளம் இருக்கும் சிறிய பறவை. மஞ்சள் நிற உடம்பில் கருப்பு வரிகளைக் கொண்டிருக்கும். கன்னப் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலையின் உச்சியில் கிரீடம் வைத்தது போல சிறிய கொண்டையிருக்கும். பார்க்க மிக அழகான பறவை. நன்றாகப் பாடும். குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். மரங்கொத்திப் பறவைகள் விட்டுப் போன மரப்பொந்துகளில் வசிக்கும்.
 வெள்ளை நிறத்தில் சிவப்புப் புள்ளிகளைக் கொண்ட சிறிய முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் 3 முதல் 5 முட்டைகள் இடும்.

வெள்ளைக்கண்ணி
 
 சிறிய புறா வடிவத்தில் இருக்கும் இந்த வெள்ளைக்கண்ணி. இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படும். இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் இதைப் பார்க்கலாம். தென் இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இவை அதிகம் வசிக்கின்றன. பூவிலுள்ள தேனையும் சிறிய பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
 கண்ணைச் சுற்றியிருக்கும் வெள்ளை வளையத்தை வைத்து இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். உடல் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
 8 முதல் 9 செ.மீ. நீளம் இருக்கும்.
 ஒரு சமயத்தில் நீல நிறத்தில் 2 முட்டைகளை இடும். பத்து நாட்களில் குஞ்சுகள் பொறிந்து வெளியே வரும். தாய் தந்தை இருவரும் குஞ்சுகளை பாசத்துடன் வளர்க்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.