/

சாதனை மணிகள்!

அனன்யாவுக்கு வயது 8. ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் செஸ் விளையாட்டுப் போட்டிகளில் முறைப்படி கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

News image
Updated On :7 ஜூன் 2013, 5:22 am

அபி

அனன்யா குப்தா
 

அனன்யாவுக்கு வயது 8. ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் செஸ் விளையாட்டுப் போட்டிகளில் முறைப்படி கலந்து கொள்ள ஆரம்பித்தார். ஒரே ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு முன்னேற்றம் தெரிந்தது இவருடைய விளையாட்டில்.
 படிப்பது மும்பை ஓர்லியிலுள்ள டி.ஒய்.படீல் பள்ளியில்.
 கிரீஸில் நடந்த உலகப் பள்ளிச் சிறுவர்களுக்கான செஸ் போட்டியில் (மே 2013) பிரான்ஸ் நாட்டு மாணவர் ஒருவரைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
 இந்த வயதிலேயே இவ்வளவு திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இவர் எதிர்காலத்தில் பெரிய செஸ் விளையாட்டு வீராங்கனையாக வருவார் என்பதில் சந்தேகமில்லை என்று இவருக்குப் பயிற்சியளித்தவர் கூறுகிறார்.
 மிக இளவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்று பெயர் பெற வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியமாம். சாதனைச் சிகரத்தை அடைய நமது வாழ்த்துகள்!
 
 சாத்விக் கர்னிக்
 

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான நேஷனல் ஜியோக்ராஃபிக் அமெரிக்காவில் ஆண்டுதோறும் "நேஷனல் ஜியோக்ராஃபிக் பீ' என்ற போட்டியை நடத்தி வருகிறது.
 இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் உலகெங்கிலும் இருந்து 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதிப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
 இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவன் சாத்விக் கர்னிக் முதல் இடத்தைப் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 இந்தப் போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்து இந்தப் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறார்.
 இவருக்குப் பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
 கூடுதல் பரிசாக ஈகுவடார் நாட்டிலுள்ள கலாபகோஸ் தீவுகளைச் சுற்றிப் பார்க்கவும் இவருக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நேஷனல் ஜியோக்ராஃபிக் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் என்ற அங்கீகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இவரின் பெற்றோர் கடந்த 2002-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
 அமெரிக்காவில் நடைபெறும் இதுபோன்ற போட்டிகளில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது ஒரு நல்ல விஷயம்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.