/

பறவையைத் தொடர்வோம்...

கருந்தலை சிலம்பனின் பெயர்க் காரணம் அதன் பெயரிலேயே இருக்கிறது. தலை மட்டும் கருப்பு.

News image
Updated On :24 மே 2013, 8:11 am

அபி

• கருந்தலை சிலம்பன்

கருந்தலை சிலம்பனின் பெயர்க் காரணம் அதன் பெயரிலேயே இருக்கிறது. தலை மட்டும் கருப்பு. உடல் பகுதி செம்பழுப்பு நிறம். வயிற்றுப் பகுதி வெண்ணிறம். கண்ணைச் சுற்றி வெளிறிய மஞ்சள் நிற வளையம்.
13 செ.மீ. நீளப் பறவை. சிறிய குட்டையான வால். சற்றே குண்டு உருவம். சிறிய உறுதியான சாம்பல் நிற அலகு.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்ரீலங்கா காடுகளிலும் இந்தச் சிலம்பனைக் காணலாம். மிகவும் பழமையான பறவைகளில் இதுவும் ஒன்று என்று கூறுகிறார்கள். அடர்ந்த வனப் பகுதிகளில் மிகுதியாக வசிக்கும். எப்போதும் கூட்டமாகத்தான் திரியும்.
நீண்டதூரம் இந்தப் பறவையால் பறக்க முடியது. மரங்களின் உச்சியிலிருந்து இரைக்காக கீழே குதிக்கும். புழு பூச்சிகளை விரும்பி உண்ணும். அடர்ந்த காடுகளில் இந்தப் பறவையை எளிதில் அடையாளம் காண முடியாது. ஆனால் இதன் குரல் இந்தப் பறவை இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுக்கும். அவ்வளவு இரைச்சலை ஏற்படுத்தும்.
புதர்களில் தனது கூட்டைக் கட்டும். மூங்கில் இலைகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கூடு பார்ப்பதற்கு பந்து போல இருக்கும். ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகளை இடும்.
 

• வெண்தொண்டை சிலம்பன்

வெண்தொண்டை சிலம்பனின் தொண்டைப் பகுதி மட்டும் வெண்மையாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும். உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தலை கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். சிறிய உறுதியான அலகையும் குட்டையான வாலையும் சற்றே நீண்ட கால்களையும் கொண்டிருக்கும்.
இதுவும் 13 செ.மீ. நீளப் பறவைதான். ஆனால் சற்றே குண்டுப் பறவை.
இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் முக்கியமாக குஜராத், ஸ்ரீலங்கா மற்றும் தென்மேற்கு நேபாளத்திலும் இப் பறவையைப் பார்க்கலாம்.
அடர்ந்த புதர்களிலும் உயர்ந்த புல்வெளிகளிலும் வசிக்கும். அங்கேயே புதருக்குள் மறைவாகத் தனது கூட்டை அமைத்துக் கொள்ளும். இதுவும் ரொம்பவும் பறக்காது. வெகு தூரத்துக்கும் பயணிக்காது. புழு பூச்சிகளையும் பூவின் தேனையும் விரும்பிச் சாப்பிடும். ஒரு சமயத்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும்.

• வளைந்த அலகு சிலம்பன்

வளைந்த அலகு சிலம்பன் 22 செ.மீ. நீளப் பறவை. இதன் முக்கிய அம்சம் நீண்டு கீழ்நோக்கி வளைந்த மஞ்சள் நிற அலகு. உடல் முழுவதும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்களுக்கு மேல் பகுதியில் நீண்ட வெள்ளைப் பட்டை ஒன்று காணப்படும். கழுத்துப் பகுதியும் வெண்ணிறத்தில் இருக்கும். சற்று நீண்ட சாம்பல் நிறக் கால்கள். வால் பகுதி பட்டையாக அகலமாக நீண்டு இருக்கும்.
ஜோடியாகவோ குழுக்களாகவோ காணப்படும். அடர்ந்த வனப் பகுதிகளில் வசிக்கும். எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இந்தப் பறவையின் இருப்பிடத்தையும் இதன் குரல்தான் காட்டிக் கொடுக்கும்.
இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் ஒரிஸô மாநிலங்களில் அதிகம் காணப்படும்.
இதுவும் நீண்ட தூரம் பறக்காது. புழு பூச்சிகளையும் சிறு இலைகளையும் விரும்பிச் சாப்பிடும். தரையில் துள்ளித் துள்ளிக் குதித்தோடும். சற்றே பெரிய கூடுகளைக் காட்டும். கூடுகள் அடர்ந்த புதர்களில் இருப்பதால் அவற்றைப் பார்க்க இயலாது.
ஒரு சமயத்தில் 2 முதல் 4 வெண்ணிற முட்டைகளை இடும்.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.