விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரங்கம்: மனித நேயம்!

சாலையில் சென்ற ஒரு பெண்ணின் உதவியுடன் கண் விழித்த அந்தப் பெண்மணியை ஆதரவாகப் பற்றி அருகில் உள்ள ஒரு வீட்டின் வாயிற்படியில் அமர

News image
Updated On :19 டிசம்பர் 2015, 11:34 am

பூதலூர் முத்து

காட்சி-1

இடம்-சாலையோரம்

மாந்தர்-மாணவன் இரமணன், மாணவி விமலா, அலமு என்ற பெண்மணி.

(மாணவர் மன்றத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் இரமணனும் விமலாவும் சாலையில் நடந்து வருதல். அவர்களுக்கு முன்னால் மெதுவாக நடந்து சென்ற ஒரு பெண்மணி சாலையோரத்தில் விழுந்து விடுகிறாள். அதைக் கண்ட அவர்கள் ஓடிப்போய் அவளைத் தூக்குகிறார்கள்.)

விமலா:  அண்ணா, என்னுடைய பையில் தண்ணீர் பாட்டில் இருக்கிறது. முகத்தில் தண்ணீர் தெளியுங்கள், நான் பிஸ்கட்டும் தேநீரும் வாங்கி வருகிறேன்.

 (அவள் வருவதற்குள் இரமணன், சாலையில் சென்ற ஒரு பெண்ணின் உதவியுடன் கண் விழித்த அந்தப் பெண்மணியை ஆதரவாகப் பற்றி அருகில் உள்ள ஒரு வீட்டின் வாயிற்படியில் அமர வைக்கிறான். விமலா பிஸ்கட்டும் தேநீரும் கொண்டு வந்து தருகிறாள். அவள் அதைக் குடித்துவிட்டு அவர்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்)

விமலா: அந்த மரத்தடியில் ஒரு சிமென்ட்  பலகை உள்ளது. அங்கே அமர வைப்போம்.

அலமு: வேண்டாம் பாப்பா! என் குடிசை பக்கத்தில்தான் உள்ளது. அங்கே என்னை விட்டால் போதும்.

(அலமுவின் குடிசையில் கொண்டு விடுகிறார்கள்)

காட்சி-2

இடம்- அலமுவின் குடிசை

மாந்தர்- இரமணன், விமலா, அலமு.

விமலா: அம்மா..., காலையில் நீங்கள் சாப்பிடவில்லையா?

அலமு:  ஆமாம்.

(இரமணன் அருகில் உள்ள உணவகத்துக்குச் சென்று உணவுப் பொட்டலத்துடன் வருகிறான். அலமுவும் அதனை வாங்கி உண்கிறாள்)

இரமணன்: நீங்கள் ஏன் இப்படி வெறும் வயிற்றோடு வெய்யிலில் நடந்து வந்தீர்கள்?

அலமு: தம்பி, எனக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை...., வாழவும் பிடிக்கவில்லை.

விமலா: அம்மா, உங்களுக்கு அப்படி என்ன துன்பம்?

(அதைக் கேட்டதும் அலமு தலையில் அடித்துக்கொண்டு அழுகிறாள். விமலா அவள் கையை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறாள்.)

விமலா: அம்மா உங்கள் துன்பம் என்னவென்று சொல்லுங்கள். எங்களால் முடிந்த உதவியை நிச்சயம் செய்கிறோம்.

(அலமு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நடந்ததைச் சொல்கிறாள்)

அலமு: இந்தக் குடிசையிலே நானும் என் பிள்ளை சரவணனும் இருக்கிறோம். உறவு என்று சொல்ல வேறு யாரும் இல்லை...., இப்போது அதற்கும் சோதனை வந்துவிட்டது.

இரமணன், விமலா: (திகைப்புடன்) என்ன சோதனை?

அலமு: சரவணன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். கண்ட பிள்ளைகளோடு சேர்ந்து கோலிக்குண்டு விளையாடுவது, பட்டம் விடுவது...,ஏரிக்கரையைச் சுற்றுவது இப்படித் திரிந்தான். பள்ளிக் கூடம் போய் ஒரு வாரம் ஆகிறது....,கண்டித்தேன்...,முதுகில் ஒரு அடி வைத்தேன். அதற்காகக் கோபித்துக்கொண்டு போய்விட்டான்....மூன்று நாட்களாக அவனைத்தேடி அலைகிறேன்.

இரமணன்: காவல் நிலையத்தில் சொன்னீர்களா?

அலமு: இல்லை...நான் ஏற்கனவே ஒரு வீட்டில் வேலை பார்த்தேன். அவர்களிடம் சொன்னேன்..."பொறுப்பில்லாமல் வளர்த்தால் இப்படித்தான் ஓடுவான்' என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள்.

விமலா: சிலர் இப்படி இருப்பார்கள்...அதற்காகக் கவலைப்படவேண்டாம்.

இரமணன்: விமலா...சரவணனுடைய அடையாளத்தைக் கேட்டு நம் நண்பர்களிடம் சொல்வோம். இன்றே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடலாம்.

Story image

காட்சி-3

இடம்- காவல் நிலையம்.

மாந்தர்: உதவி ஆய்வாளர், விமலா, இரமணன்.

விமலா: ஐயா,ஒரு சிறுவûனைக் காணவில்லை! அது விஷயமாகப் புகார் ஒன்று அளிக்க வந்திருக்கிறோம்.

உதவி ஆய்வாளர்: பெரியவர்கள் யாரும் வரவில்லையா?

இரமணன்: இல்லை  ஐயா! காணாமல் போன சிறுவனுக்கு அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவரும் மிக சோர்வாக இருக்கிறார்.

உதவி ஆய்வாளர்: சரி, எழுதித் தாருங்கள்.

(விமலா, சரவணன் இருவரும் காவல் நிலையத்தில் புகார் எழுதி அளிக்கிறார்கள்.  ஆய்வாளர் மேஜையில்  அன்றைய செய்தித்தாள் இருப்பதை விமலா கவனிக்கிறாள்...அதில் ஒரு சிறுவனுடைய படம் இருக்கிறது. "இரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் திரிந்த ஒரு சிறுவனை காவலர்கள் மீட்டு செங்கற்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள்' என்று எழுதியிருந்தது. மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணும் இருந்தது.)

விமலா: அந்த அம்மாவின் நல்ல நேரம்...,இவன் சரவணனாக இருந்தால்...ஐயா!...,ஒருவேளை இந்தச் செய்தித்தாளில் உள்ள சிறுவனாகக் கூட இருக்கலாம்...ஏனென்றால் அவன் காணாமல் போயும் ஒரு வாரம்தான் ஆகிறது. வயதும் கிட்டத்திட்ட ஒத்துப் போகிறது.

இரமணன்: நானும் அதைத்தான் நினைக்கிறேன்.

உதவி ஆய்வாளர்: நிச்சயம் தொடர்பு கொள்கிறோம். நீங்கள் அந்த அம்மாவிடம் காணமல் போன சிறுவன் அவர் மகனே என்பதற்கான சான்றுகள் தயார் செய்து கொள்ளுங்கள். எதற்கும் அது நல்லது!

விமலா: நன்றி ஐயா! நாங்கள் வருகிறோம்.

(இரமணன் அன்றைய செய்தித் தாள் ஒன்றை கடையில் வாங்கிக் கொள்கிறான்)

காட்சி-4

இடம்- அலமுவின் குடிசை

மாந்தர்- இரமணன், விமலா, அலமு.

(விமலாவும், இரமணனும் அலமுவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள்)

அலமு: வாங்க..., ஏதாவது செய்தி தெரிந்ததா?

இரமணன்: இதுவரைக்கும் இல்லை...கொஞ்சம் இந்த செய்தித் தாளைப் பாருங்க....இந்த பையன் படத்தைப் பாருங்க...

அலமு: ஆ! ஆமாம்..., இவன்தான் என் மகன் தம்பி!

(இரமணன் விவரம் கூறுகிறான். அவள் அவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விடுகிறாள்)

அலமு: என் பிள்ளையை எப்படியாவது கொண்டு வாருங்கள்...உங்களுக்குக் கோடி புண்ணியம்!

இரமணன்: அவனை அழைத்து வருவது எங்கள் பொறுப்பு! கவலைப்படாதீங்க..., உங்க வாக்காளர் அட்டையையும்..., ரேஷன் அட்டையையும் கொடுங்க நகல் எடுக்கணும். அட! நீங்களும் உங்க மகனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ கூட ஒண்ணு அவற்றில் இருக்குதே!

(காவல் நிலையத்திற்கு ஒரு விண்ணப்பமும் எழுதி அதில் அலமுவின் கையெழுத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள். ரேஷன் அட்டை, மற்றும் வாக்காளர் அட்டை நகல்களையும், எடுத்துக் கொண்டு  அலமுவின் வீட்டிற்கு வருகிறான்)

விமலா: அண்ணா! அடுத்த பணி என்ன?

இரமணன்: நீ சற்று இந்த அம்மாவை கவனித்துக்கொள். என் நண்பன் சங்கரின் அண்ணன் இராம்குமார், காவல் நிலையத்தில் பணி புரிகிறார். அவரிடம் தொடர்பு கொண்டு அங்கே போகிறேன். உரிய உதவிகளை அவர் செய்வார்....., தேவைப்பட்டால் மட்டும் அலமு அம்மாவை காவல் நிலையம் அழைத்துச் செல்வோம்.

காட்சி-5

இடம்: செங்கற்பட்டு காவல் நிலையம்

மாந்தர்: இராம்குமார், இரமணன்,

உதவி ஆய்வாளர், காவலர்.

(இக்காட்சியை மெளன நடிப்பாக இசையுடன் காட்டிவிடுக)

(இராம்குமார் உதவி ஆய்வாளரிடம் சான்றுகளுடன் செய்திகளைக் கூறுகிறார். அவர் ஒரு காவலரை அலமுவின் வீட்டிற்கு அனுப்பி உண்மையை அறிகிறார்.....சரவணனை விடுவிக்கிறார்.)

காட்சி-6

இடம்-அலமுவின் குடிசை

மாந்தர்- இரமணன், விமலா, சரவணன், அலமு.

(அலமு சரவணனைக் கண்டதும் பாசத்தோடு அரவணைக்கிறாள்.)

அலமு:(அவர்களிடம்) உணவு கொடுத்து என் பசியைப் போக்கினீர்கள். இப்போது என் பிள்ளையை என்னிடம் சேர்த்து என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்.....நீங்கள்தான் என் கண் கண்ட தெய்வம். (அவர்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்)

இரமணன்: ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம்.

அலமு: படித்தவர்கள் எல்லோருமா இப்படி இருக்கிறார்கள்?

இரமணன்: தேர்வுக்கும், வேலை பெறுவதற்கும் மட்டுமா கல்வி? இரக்கம் காட்டும் மனித நேயத்தையும் கற்கத்தானே!

விமலா: அம்மா..., சரவணனைப் பற்றிக் கவலைப்படாதீங்க..., அவனுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். இனிமேல் அவன் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பான்! உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வோம்.

(அலமு விமலாவை அணைக்கிறாள். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.