கருவூலம்: எலிபன்டா குகைப் பயணம்!
மும்பைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் பார்க்க வேண்டிய, இடம் எலிபன்டா குகைகள்! "கேட் வே ஆஃப் இந்தியா'வில் இருந்து விசைப்படகில் செல்ல வேண்டும். போக மற்றும் திரும்பி வர ஒரே கட்டணமாக வசூலித்து விடுகிறார்கள்.


மும்பைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் பார்க்க வேண்டிய, இடம் எலிபன்டா குகைகள்! "கேட் வே ஆஃப் இந்தியா'வில் இருந்து விசைப்படகில் செல்ல வேண்டும். போக மற்றும் திரும்பி வர ஒரே கட்டணமாக வசூலித்து விடுகிறார்கள்.
சுமார் ஒரு மணி நேரப்பயணம். தூரம் பத்து கிலோ மீட்டர்! திரும்பி வரும்போது எந்த விசைப் படகில் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். டிக்கட்டைக் காண்பித்தால் போதும்!
ஏறக்குறைய வருடம் முழுவதும் மிகுந்த மழை உள்ள நாட்களைத் தவிர இந்த விசைப்படகு சேவை நடத்தப்படுகிறது. அரபிக் கடலில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் அற்புதமாக இருக்கும்! விசைப்படகில் ஏறும் பலரும் ஜன்னல் ஓரத்திலேயே அமர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்! (பின்னே...?வேடிக்கை பார்க்க வேணாமா?) சில விசைப்படகுகளில் மேல் தளமும் உண்டு! அதில் சில தைரியசாலிகள் அமர்ந்து பயணம் செய்கிறார்கள்!
படகு செல்ல ஆரம்பித்ததும் நம் எதிரே தெரியும் "கேட் வே ஆஃப் இந்தியா' நினைவுச் சின்னக் கட்டிடமும் மிகவும் பிரம்மாண்டமாகத் தெரியும் தாஜ் ஹோட்டலும் சிறிது சிறிதாக அளவில் குறைந்து வருவதைப் பார்த்து ரசிக்கலாம்!
படகில் ஏறும்போது இருந்த தைரியம் கடலில் படகு செல்லும்போது சற்று குறைந்து காணப்படுவதை பலரும் உணருவார்கள்! கடலை ரசிக்கத் தொடங்கினால் பயம் குறைந்து உற்சாகம் ஏற்படும். விசைப்படகு புறப்படும்போது சுற்றிலும் கலங்கலாக பழுப்பு நிறத்தில் காணப்படும் கடல்நீர் சற்று தூரம் சென்றதும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இன்னும் சற்று தூரம் சென்றதும் அதே கடல்நீர் கரு நீலமாகத் தெரிகிறது! படகு சிறிது அலைகளில் இடையில் அங்கும் இங்கும் ஆடுகிறது. சுற்றிலும் பல இடங்களில் கப்பல்கள் வந்துகொண்டிருப்பதையும் சென்று கொண்டிருப்பதையும் பார்க்கலாம்! சில இடங்களில் போர்க்கப்பல்கள் நங்கூரம் இடப்பட்டு நின்று கொண்டிருக்கின்றன. விசைப்படகில் செல்லும்போது படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. அவசரமாக டாய்லெட் போக வேண்டுமென்றால் விசைப்படகின் இரண்டு மூலைகளிலும் வசதி உண்டு.
சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இறங்க வேண்டிய இடத்தை படகு அடையும். அங்கிருந்து நாம் பார்க்க வேண்டிய எலிபன்டா குகைகளுக்குச் செல்ல டிரெயின் சர்வீஸ் உண்டு. சுற்றிலும் கடலையும், சற்று தூரத்தில் தெரியும் மலைகளையும் மரங்களையும் செடிகளையும் பார்த்துக்கொண்டு சிறிய ரயில் வண்டியில் பயணம் செய்வது இனிமையான அனுபவமாகும். ஐந்து நிமிடப் பயணம்.
நம்மை எலிபன்டா குகைக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளை வந்தடைகிறோம். படிக்கட்டுகளில் இரண்டு புறமும் ஏராளமான கடைகள். பல மொழிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் பேசி பொருட்களை விற்பனை செய்யும் திறமை படைத்த வியாபாரிகள்! ஆங்காங்கே நம்மைப் பார்த்து சிரிக்கும், பயமுறுத்தும் குரங்குக் கூட்டங்கள்!
படிகளின் வழியாகச் செல்லும்போது மாக்கல்லால் செய்யப்பட்ட பல சிறிய சிற்பங்கள் பல இடங்களில் நம்மை வாங்கத் தூண்டுகின்றன. ஒரு யானையின் சிற்பத்திற்குள் இன்னொரு முழு வடிவமுள்ள யானையின் சிற்பம் நம்மை அதிசயிக்கவைக்கிறது! இதைப்போலவே ஒரு மிருகத்தின் சிற்பத்திற்குள் இன்னொரு சிறிய அதே மிருகத்தின் சிற்பம்! வெளியில் காணப்படும் சிற்பத்தில் பல துவாரங்கள் காணப்படுகின்றன. அதனுள்ளே பல பாகங்கள் குடைந்தெடுக்கப்பட்டு இன்னொரு சிறிய உருவம் செதுக்கப்பட்டு இருப்பதைப் போல காணப்படுகிறது. அற்புதமான கலைப்படைப்பு!
இந்தக் குகைகளைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு. திங்கட்கிழமை விடுமுறை. அனுமதி நேரம் காலை 9.30மணி முதல் மாலை 5.30 மணி வரை.
எலிபன்டா குகைகள் என்று இந்த குகைகளுக்குப் பெயர் வரக்காரணம், 1534ஆம் ஆண்டு இந்த தீவில் வந்திறங்கிய போர்த்துகீசியர்கள் அங்கே காணப்பட்ட ஒரு பெரிய கல்யானை சிற்பத்தைப் பார்த்து இந்த இடத்திற்கு "எலிபன்டா' என்று பெயர் வைத்தார்கள். தற்போது அந்தச் சிற்பம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
இங்கே ஏழு குகைகள் காணப்டுகின்றன. பெரியதாக மூன்று குகைகள். அதிலும் நாம் பார்க்கச் செல்லும் முதல் குகையே மிகவும் முக்கியமானது. இந்தக் குகைக்குள் செல்ல மூன்று வாசல்கள் உண்டு. இங்குதான் எலிபன்டா என்றதும் நம் நினைவுக்கு வரும் மும்மூர்த்திகள் சிற்பம் இருக்கிறது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று காரியங்களைச் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளும் அடங்கிய ஒரு தோற்றம். பீடத்திலிருந்து சுமார் 15அடி உயரம் உள்ள சிலை மூன்று முகங்களிலும் மூன்று வித்தியாசமான முகத் தோற்றங்கள் தெளிவாகத் தெரிவதைக் காணலாம். நடுவில் உள்ள முகம் மிகவும் சாந்தமானது. கழுத்தில் ஆபரணங்கள் அணிந்து காணப்படுகிறது.
அதன் வலது பக்கத்தில் உள்ள முகத்தில் கோபம் தெறிப்பதைக் காணலாம். இடது பக்கத்தில் தெரியும் முகத்தில் சற்று பெண் தன்மையைக் காணலாம். தாண்டவ நடனம் ஆடும் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த திருமணக்காட்சி! கங்கையைத் தாங்கி நிற்கும் சிவன், தாயக்கட்டை ஆடும் சிவன், பார்வதி அர்த்தநாரீஸ்வரர், தவம் செய்யும் கோலத்தில் சிவன் போன்று பல சிற்பங்களும் காணப்படுகின்றன.
கூடவே வரும் வழிகாட்டி ஒவ்வொரு சிற்பத்தைப் பற்றியும் கூறும்போது அந்த சிற்பங்களைச் செய்த சிற்பிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே சமயத்தில் பல சிற்பங்கள் கால்கைகள் உடைந்து சிதிலமடைந்து காணப்படுவதைப் பார்த்து அதற்குக் காரணமாக இருந்தவர்களை சபிக்கவும் தோன்றுகிறது.
இந்த மண்டபங்களில் காணப்படும் தூண்கள் மிகவும் பருமனானவை! அருகில் உள்ள ஒரு இடத்தில் பெரியலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. சிவராத்திரி சமயத்தில் விசேஷ பூஜைகள் இங்கு நடக்குமாம்!
சிற்பங்களைப் பார்த்துவிட்டு மலைப்பாதையின் வழியே கடந்து சென்றால் சுமார் 20 நிமிடங்கள் மலையின் உச்சியை அடையலாம். சிலர் பாதையைத் தவிர்த்து மலையேறுதல் பயிற்சியை இங்கே அரங்கேற்றுகிறார்கள். மலை உச்சியில் ஒரு பீரங்கி உள்ளது. அங்கிருந்து தூரத்தில் தெரியும் மும்பை நகரத்தின் பல கட்டிடங்கள் பைனாகுலர் மூலம் அருகில் வரவழைத்து பார்த்து ரசிக்கலாம். சில்லென்று வீசும் காற்று இதமாக இருக்கும்.
மறுபடியும் மலைப்பாதையில் இறங்கி டிரெயினில் ஏறி விசைப்படகில் ஏறி பல நிறங்களில் காணப்பட்ட நீரை ரசித்துப் பார்த்துக்கொண்டே வரும்போது நம் பார்வையில் ஹோட்டல் தாஜும், "கேட் வே ஆஃப் இந்தியா'வும் சிறிது சிறிதாக நம்மை நெருங்கும். இறங்க வேண்டிய இடமும் வந்து சேரும்.
"கேட் வே ஆஃப் இந்தியா'வின் அருகில் காணப்படும் ஏராளமான புறாக்களுக்கு கோதுமை தானியம் வாங்கி தரையில் இறைத்து அவை கூட்டமாக வந்து சாப்பிடுவதை ரசிக்கலாம்!
இந்தப் பயணம் நமது நினைவில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...