விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரங்கம்: அந்த ஒருவன்!

இரண்டு மணி நேரம் காக்க வைத்தார்கள். யாரையுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை. இப்போது இங்கே என்ன செய்யப் போகிறார்கள்?

News image
Updated On :28 நவம்பர் 2015, 10:18 am

பூதலூர் முத்து

காட்சி - 1

இடம் - ஒரு தொழில் நிறுவனம்

மாந்தர் - நிர்வாகிகள், நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞர்கள் பத்துப்பேர்.

(வரவேற்பறையில் காத்திருந்த இளைஞர்களை ஓர் அரங்குக்கு அழைத்துச் செல்கிறார்கள்.)

பாலு: இரண்டு மணி நேரம் காக்க வைத்தார்கள். யாரையுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை. இப்போது இங்கே என்ன செய்யப் போகிறார்கள்?

வேலு: அங்கே பார்  திரை. ஏதோ படம் காட்டப் போகிறார்கள்!

பாலு: பழைய படமாக இல்லாமல் புதிய படமாக இருந்தால் சரி.

காட்சி - 2

இடம் - அரங்கு

மாந்தர் - இளைஞர்கள், நிர்வாகி.

நிர்வாகி: இப்போது உங்களுக்குச் சில காட்சிகளைக் காட்டுகிறோம். பாருங்கள்.

(படம் தொடங்குகிறது. ஒருவன் ஆடிக்கொண்டே வருகிறான். அவன் பெயர் கோபி! அதைப் பார்த்த மற்றவர்களுக்கு திகைப்பு!

வரவேற்பு அறையில் இளைஞர்கள் அமர்கிறார்கள்.

பாலு: ஏ.சி யெல்லாம் நல்லாத்தான் இருக்கு. சேர்ந்த பின்னால அவங்க வைக்கப்போற சூட்டை நம்மால தாங்க முடியாது.

வேலு: ஏற்கெனவே வேற இடத்தில் சூடுபட்ட அனுபவத்தைச் சொல்றியா?

பாலு: பல இடத்திலே அதுதானே கிடைக்குது.

(ஊழியர் சூடான தேநீரும் பிஸ்கட்டும் கொண்டு வருகிறார்)

கோபி: (தேநீரை எடுத்ததும்) வெந்நீரைக் கொடுத்து விட்டு தேநீர் என்கிறார்களே...

வேலு: இதைப் பற்றி நாம் நேர்முகத்திலே சொல்வோம். பிஸ்கட்டுக்குப் பதிலா "கேக்' கொடுக்கச் சொல்லுவோம்.

(அங்கே செய்தித்தாள்கள் மேசை மீதும் பல நூல்கள் நிலைப்பேழையிலும் அழகாக அடுக்கி வைத்துள்ளனர்)

கோபி: (செய்தித்தாள்களை எடுக்கிறான்...,எடுக்கும்போதே சில தாள்கள் கீழே விழுகின்றன)

வேலு: கீழே விழுந்ததை எடு..

கோபி: உனக்குத் தேவையானால் நீ எடு!

பாலு: (நூல்களை எடுத்து மேசை மீது கலைத்துப் போடுகிறான்) ஒரு கதைப் புத்தகம் கூட இங்கே இல்லை...,மோசம்!

காட்சி - 3

(திரையில் காட்சிகள் தொடர்கின்றன)

கோபி: "சுண்டெலி' படம் சரியாக ஓடவில்லை..., ஏன்?

வேலு: சுண்டெலி ஓடினால் என்ன...? பொந்துக்குள் போனால் என்ன?

கோபி: இதுவும் பொது அறிவுதான்...,கேட்டால் அங்கே போய் விழிக்கக்கூடாது.

பாலு: யாரும் சத்தம் போடாதீங்க...,நான் கொஞ்ச நேரம் தூங்கறேன். இரவெல்லாம் எங்க ஊரில் தெருக்கூத்து. அது முடிஞ்சதும் பஸ் பிடிச்சு வர்றேன்.

கோபி: என்ன தெருக்கூத்து? சொல்லிவிட்டுத் தூங்கு..

பாலு: ஒழுங்கா வந்த வேலையைப் பாருங்க.

வேலு: நேர்முகம் முடிஞ்சதும் இங்கேயே பகல் உணவு கொடுத்தா நல்லா இருக்கும்.

பாலு: அதையும் பிரியாணியாக் குடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்!

வேலு: நீ தூங்கவில்லையா?

பாலு: தூக்கத்திலேயும் விழிப்புணர்வு வேணும்...,இல்லேன்னா...என்னை விட்டுட்டு நீங்க சாப்பிடப் போயிடுவீங்க...

வேலு: எதுக்கு வந்தோம்கறதை மறந்துட்டோம்...,பார்த்தீங்களா?

பாலு: எல்லோருக்கும் வேலை கிடைக்காது. அதனால் பகல் உணவையாவது நல்லாப் போடுங்கன்னு கோரிக்கை வைப்போம்! இங்கே நிறைய மரம் இருக்கு. ஒரு தூக்கம் போட்டுட்டுப் போயிடலாம்.

கோபி: இந்த பாலு எப்போதும் நடப்பதைத்தான் பேசுவான். எதிர்பார்க்காதே....ஏமாற்றம் வராதுங்கற கொள்கை உடையவன்.

வேலு: திருவிழாவில அன்னதானம் நடக்கும். அதை வாங்கிச் சாப்பிட்டுட்டு அங்கேயே ஒரு மரத்தடியிலே தூங்கலாமே...,இங்கே ஏன் வந்தான்?

(அவர்களுள் ஒருவன்...கழுத்தில் அடையாள அட்டை. பெயர் பார்த்திபன். அமைதியாக இருக்கிறான்)

பாலு: இவன் இங்கே வந்ததிலிருந்தே அமைதியாக இருக்கிறானே...,ஊமையா...? "மாற்றுத் திறனாளி'ப்பிரிவில் வந்திருக்கிறானா?

வேலு: ஒருவேளை இவனைச் சிரிக்கவோ பேசவோ வைப்பவருக்கு இங்கே வேலை தருவார்களோ...,என்னவோ!

(அதற்கும் அவன் அமைதியாக இருக்கிறான்)

பாலு: நம்ம படிப்பையும் வேலை அனுபவத்தையும் காட்ட "கத்தை கத்தையாக வைத்திருக்கிறோம். இந்த அமைதிப் புறாவைப் பாரு...எதுவுமே இல்லை!

வேலு: ஒரே குழப்பமா இருக்கே...

(பார்த்திபன் வெளியே போகிறான். மரம், செடி,கொடிகளைப் பார்க்கிறான்)

-நேர்முகத் தேர்வுக்கு வந்த அவர்களுடைய செயல்களைப் படத்தில் பார்த்து அவர்கள் திகைப்போடு வேதனையும் அடைந்தார்கள். வரவேற்பு அறையில் காட்சிப் பதிவுக் கருவி பொருத்தியிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை-
 

காட்சி - 4

இடம் - அரங்கு

மாந்தர் - இளைஞர்கள்

அறிவிப்பு: இப்போது ஓர் இளைஞர் பங்கு பெறும் நேர்முகத்தைப் பாருங்கள்!

-திரையில், நேர்முகம்...பங்கேற்பு: பார்த்திபன் என்ற எழுத்துகள்!

-இளைஞர்களுக்கு திகைப்புக்குமேல் திகைப்பு!-

வேலு: இவனை எப்பொழுது அழைத்தார்கள்? இவன் மரத்தடியில்தானே நின்றான்?

(திரையில் காட்சி தொடர்கிறது-பார்த்திபன் உள்ளே சென்று தேர்வாளர் எதிரே நிற்கிறான். அமரச் சொன்னதும் "நன்றி' என்கிறான்.

தேர்வாளர்: ஏன் நீங்கள் எந்தச் சான்றிதழும் கொண்டு வரவில்லை?

பார்த்திபன்:  ஆன்லைனில் அளித்தால் போதும். நேரில் தேவையில்லை என்று ஒரு குறிப்பைப் பார்த்தேன்.

(மற்றவர்கள் நாம் அந்தக் குறிப்பையே கவனிக்கவில்லையே என்று எரிச்சல் அடைந்தனர்.)

தேர்வாளர்: மேதகு அப்துல்கலாம் மிகவும் விரும்பிய குறள்..., இளைஞர்களிடம் பலமுறை சொன்ன குறள் எது?

பார்த்திபன்:  வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்  உள்ளத்தனையது உயர்வு.

தேர்வாளர்: இதன் பொருள்?

பார்த்திபன்: குளத்தில் நீர் இருக்கும் உயரத்திற்கு, தாமரையின் தண்டு நீண்டு மலர் உயரும். மனிதர்களின் ஊக்கத்துக்கு ஏற்ப அவர்களுக்கு உயர்வு வரும்.

தேர்வாளர்: இங்கே வரும்போது உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று உறுதியாக நினைத்தீர்களா?

பார்த்திபன்:  நம்பிக்கையோடு நினைத்தேன்.

தேர்வாளர்: நாங்கள் வேலை தரவில்லை என்றால்...?

பார்த்திபன்: நம்பிக்கையை இழக்க மாட்டேன். இங்கே கற்றுக்கொண்ட பாடங்கள்..செய்திகள்...என் அனுபவ அறிவோடு சேரும். அது பின்னர் பயன் தரும்.

(நேர்முகம் முடிகிறது)

காட்சி - 5

இடம் - அரங்கு

மாந்தர் - இளைஞர்கள்

அறிவிப்பு: இப்போது வேறு சில காட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறோம். இவையும் இன்று வரவேற்பு அறையில் பதிவு செய்தவைதான்!

(வேறு என்ன புதிதாகக் காட்டப்போகிறார்கள் என்று ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்--வரவேற்பு அறையில் நிகழ்ந்த பார்த்திபன் தொடர்பான காட்சிகளைக் காட்டுகிறார்கள்-)

--தேநீர் தந்தபோது அவன் பணியாளரிடம் நன்றி சொன்னது...மற்றவர்கள் கலைத்துப்போட்ட செய்தித்தாள்களை எடுத்து பக்கங்கள் மாறாமல் இருக்க ஒரு துளை போட்டு நூலால் கட்டியது..., அவற்றுக்குரிய இடத்தில் வைத்தது..., மேசையில் கிடந்த நூல்களைப் பேழையில் முறையாக வைத்தது..., முகம் கழுவும் இடத்தில் இருந்த குழாயை மற்றவர்கள் மூடாமல் வந்தபோது, அவன் சென்று மூடியது...மற்றவர்கள் வீண்பேச்சில் இருந்தபோது அந்த நிறுவனம் தொடர்பான நூலை எடுத்துப் படித்தது...குறிப்புகள் எடுத்தது...பின்னர் மரத்தடிக்குச் சென்றது...பேசியில் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு நேர்முகத்தேர்வு அறைக்குச் சென்றது---

(இளைஞர்கள் மயக்கம் போட்டு விழாத குறையாக அவற்றைப் பார்த்தார்கள்)

காட்சி - 6

மாந்தர் - நிர்வாகி, இளைஞர்கள்.

நிர்வாகி: நாங்கள் பல நேர்முகத்தில் வந்த எல்லோரையுமே திருப்பி அனுப்பி இருக்கிறோம்..., எங்கள் நோக்கம் அதுவல்ல...ஆனால் தகுதியுள்ளவர்களுக்கு வேலை தந்தால்தானே நிறுவனத்திற்கும் வேலை பெறுபவருக்கும் நன்மையாக அமையும்...தகுதியுள்ள ஒருவரை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்...அவர்...,

இளைஞர்கள்: பார்த்திபன்...பார்த்திபன்!

நிர்வாகி: அவர் தொழிற்படிப்பில் முதன்மை பெற்றவர். நாங்கள் இங்கே ஒருவருடைய தொழில் திறமையைவிட அவருடைய பண்புக்கே முதலிடம் கொடுக்கிறோம்..., தொழிலைக் கொடுத்து விடலாம்...ஆனால் பண்பு..!...அது ஒருவருடைய இரத்தத்திலேயே கலந்திருக்க வேண்டும்! ...பார்த்திபன் சொன்ன குறளின் படி, ஊக்கத்தோடு, நற்பண்பும்...விழிப்புணர்வும் உடைய அவருக்கே உயர்வு வருகிறது....நீங்களும் அவரைத் திசைகாட்டியாகக் கொண்டு முன்னேறுங்கள்!...உங்களுக்கு இங்கே பகல் உணவு பிரியாணி உண்டா...தெரியவில்லை!

(எல்லோரும் சிரிக்கிறார்கள். பார்த்திபனுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்)

-திரை-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.