

காட்சி-1
இடம்-வீடு
மாந்தர்-சுந்தர், அவன் தாய், தந்தை.
தந்தை: வீட்டுப்பாடம் எழுதிட்டியா, எழுதலைன்னா ஆசிரியர் நாளைக்கு என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வரச் சொல்வார். எதற்கு வீண் பிரச்னை? எவ்வளவு நேரம் இருக்கு...ஒரு அரை மணி நேரம் வீட்டுப்பாடத்திற்கு ஒதுக்கு...,எனக்கும் புகார் வராது. ஆமா..., இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கே? நோட்டைக் காண்பி!
(சுந்தர் தயங்காமல் நோட்டைத் தந்தையிடம் கொடுக்கிறான். நோட்டில் பாடம் எதுவும் எழுதப்படாமல் படம் வரையப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார்.)
தந்தை: இதுதான் நீ வீட்டுப்பாடம் எழுதற லட்சணமா? பாடத்தை எழுதுன்னா படம் போட்டிருக்கிறே? பாடத்தை யார் வந்து எழுதுவாங்க?
சுந்தர்: பாடம் எழுதணும்னு நோட்டை எடுத்தாலே படம் வரையத்தான் தோணுது. பாடம் எழுதணுங்கிற எண்ணமே வர மாட்டேங்குது.
தாய்: மனது அப்படித்தான் கண்டபடி அலைபாயும்! எது முக்கியமான வேலைன்னு பார்த்து முதல்ல அதைத்தான் செய்யணும். அப்புறம் எவ்வளவு படம் வேணும்னாலும் போடு! உன்னை யாரும் கேட்க மாட்டாங்க..., ஆமா, உனக்கு எப்படி படம் போடறதுல இவ்வளவு ஆர்வம் வந்தது?
சுந்தர்: நம் வீட்டு முன் போர்ஷன்ல ஒரு ஓவியருக்கு வாடகைக்கு இடம் விட்டிருந்தீங்க...,நான் சும்மா இருக்கறப்போ அவர் எப்படி வரையறார்னு வேடிக்கை பார்க்கப் போவேன். ஒரு நாள் அவர் என்னை வரைஞ்சு காண்பித்தார். அப்படியே அச்சு அடையாளம் என்னை மாதிரியே இருந்தது! இவ்வளவுக்கும் அதிக நேரம் எடுத்துக்கலே. ஐந்து நிமிஷத்திலே போட்டுட்டார். ஆச்சரியமா இருந்தது! எனக்கும் அதுபோல வரையணும்னு ஆசை வந்தது! அன்று முதல் கையிலே பேப்பர் பென்ஸில் கிடைத்தால் உடனே ஏதாவது படம் வரையணும்னு தோணும். எனக்கும் படம் போட சுலபமா வந்தது. ஈடுபாட்டோட வரைவேன். இப்ப எதைப் பார்த்தாலும் உடனே வரைய முடியுது! நாய், பூனை,காக்கை, குருவி இதையெல்லாம் வரைஞ்சு பழகினேன். இப்ப உங்களைக் கூட வரைஞ்சிருக்கேன். பார்க்கறீங்களா?
தந்தை: உன் ஓவிய ஆர்வத்தைப் பாராட்டுறேன். ஆனால் அதனால உன் படிப்பு எந்த வகையிலும் பாதிக்காம பார்த்துக்க. டிராயிங் மாஸ்டர் வேலைக்குப் போகணும்னாலும் குறைந்தது எஸ்.எஸ்.எல்.சி படிச்சிருக்கணும். அப்புறம் ஓவியத்துல டிப்ளமா வாங்கியிருக்கணும். படிப்பு இல்லைன்னா எந்த வேலைக்கும் எடுத்துக்க மாட்டாங்க. படிப்புதான் முக்கியம்! அதை மனசுல வச்சுக்க. உன் படத்தை பார்க்க இப்ப நேரமில்லை. இன்னொரு நாள் நிதானமா பார்த்துக்கறேன். இப்ப எனக்கு நிறைய வேலை இருக்கு.
காட்சி-2
இடம்-வகுப்பறை
மாந்தர்-சுந்தர், சகமாணவர்கள், வகுப்பாசிரியர்
ஆசிரியர்: சுந்தர், பாடத்தைக் கவனிக்காம என்ன செய்திட்டிருக்கே?
(சுந்தர் படம் வரைந்து கொண்டிருப்பதை ஆசிரியர் கவனித்து விடுகிறார்)
ஆசிரியர்: நான் தொண்டைத் தண்ணி வத்த பாடம் நடத்திக்கிட்டு இருக்கேன்...,நீ என்னடான்னா அதைப்பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாம படம் வரைஞ்சுக்கிட்டிருக்கே.
(படத்தை எடுத்துப் பார்க்கிறார். சுந்தர் தன்னையே வரைந்திருப்பதைப் பார்க்கிறார். படம் நன்றாக இருந்தது. ஆனால் ஆசிரியர் கோபப்படுகிறார். அவருக்கு அவனைப் பாராட்டத் தோன்றவில்லை.)
ஆசிரியர்: கெட் அவுட்! வெளியே நில்லு..., அப்பதான் உனக்கு புத்தி வரும்.
(சுந்தர் பேப்பர் பென்ஸிலோடு வெளியேறினான். கவலைப் படவில்லை. வகுப்பில் செய்த அதே தவற்றை வெளியில் நிற்கும்போதும் செய்தான். எதிரே காணப்பட்ட மரத்தை வரைய ஆரம்பித்து விட்டான். அப்போது ரவுண்ட்ஸ் வந்த தலைமை ஆசிரியர் சுந்தரைப் பார்த்துவிட்டார்.)
தலைமை ஆசிரியர்: ஏன் தம்பி வெளியே நிற்கிறே?
(சுந்தர் பதில் சொல்லத் தொடங்குமுன் வகுப்பாசிரியர் வெளியே வந்துவிட்டார்.)
வகுப்பாசிரியர்: பாடத்தைக் கவனிக்காம படம் வரைஞ்சுக்கிட்டு இருந்தான் சார். பல தடவை சொல்லிட்டேன் கேட்கலை. அதனால்தான் வெளியே நிற்க வெச்சிருக்கேன். இன்னிக்கு என்னையே வரைஞ்சிருக்கான் சார்.
(படத்தை தலைமை ஆசிரியரிடம் காட்டுகிறார். அதைப் பார்த்த தலைமை ஆசிரியருக்கு கோபமே வரவில்லை. வியந்தார்!)
தலைமை ஆசிரியர்: நான் இவனை கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் வகுப்பை கவனியுங்கள்...
காட்சி-3
தலைமை ஆசிரியர் அறை
மாந்தர்-சுந்தர், தலைமை ஆசிரியர்.
(தலைமை ஆசிரியர் சுந்தரை தன் அறைக்கு அழைத்து வந்து அவனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து, தன்னை வரையச் சொல்கிறார். சுந்தர் ஐந்து நிமிடங்களில் தலைமை ஆசிரியரை அப்படியே வரைந்து விடுகிறான். தலைமை ஆசிரியருக்கு வியப்பு தாங்கவில்லை.)
தலைமை ஆசிரியர்: கண்ணாடியில் பார்ப்பது போல் உள்ளதே...,இந்தா, நீ என்னை தத்ரூபமாக வரைந்ததற்குப் பரிசு. (பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்கிறார்.) வைத்துக் கொள்! பேப்பரோ பென்சிலோ வாங்கிக் கொள்! ஆனால் நான் ஒன்று சொல்வேன் நீ கேட்கணும்.
சுந்தர்: சரி சார்.
தலைமை ஆசிரியர்: உன் கிட்டே அபாரத் திறமை இருக்கு. அதை வளர்த்து உன்னைப் பெரிய ஓவியனா ஆக்கறது என் பொறுப்பு. என்னதான் படம் வரைஞ்சாலும் படிப்பும் வேணும். வகுப்பிலே பாடத்தைக் கவனிக்காம படம் வரையாதே. வீட்டிலே கூட வீட்டுப் பாடம் முடிச்சுட்டு அப்புறமா கிடைக்கிற நேரத்திலே நிறைய வரைஞ்சு பழகு. உனக்கு படம் வரைய என்ன என்ன மெட்டீரியல்ஸ் தேவையோ லிஸ்ட் கொடு..., வாங்கித்தரேன்.
(சுந்தருக்கு இனிய அதிர்ச்சி.)
சுந்தர்: சார் இனிமே வகுப்பில் பாடவேளையில் படம் வரைய மாட்டேன் சார். என்னை மன்னிச்சுடுங்க சார்.
காட்சி-4
இடம்- பள்ளியின் வெளிப்புறம்
மாந்தர்-சுந்தர், மற்றும் பள்ளித் தோழர்கள்.
(பள்ளி முடிந்ததும் வகுப்பு மாணவர்கள் சுந்தரைச் சூழ்ந்து கொண்டனர்.)
மாணவர்கள்: ஹெட்மாஸ்டர் என்னடா சொன்னார்? ஏதாவது பனிஷ்மென்ட் குடுத்தாரா?
சுந்தர்: நான்கூட என்ன நடக்குமோன்னு பயந்துகிட்டேதான் போனேன். ஆனா அவர் என்னைப் பாராட்டி பத்து ரூபாய் பரிசு கொடுத்தார்! (மேலும் நடந்ததை விவரிக்கிறான்)
மாணவர்கள்: சபாஷ் சுந்தர்! வாழ்த்துகள்!
(திரை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

