/

முத்துக் கதை: எது விரதம்?

துறவி ஒருவர் கடுமையான விரதங்களை மேற்கொண்டிருப்பவர். சூரியன் உதயமான பிறகு தண்ணீர்கூட அருந்த மாட்டார். சிறந்த தவசீலர்.

News image
Updated On :20 மே 2016, 3:30 pm

நெ. இராமன்

துறவி ஒருவர் கடுமையான விரதங்களை மேற்கொண்டிருப்பவர். சூரியன் உதயமான பிறகு தண்ணீர்கூட அருந்த மாட்டார். சிறந்த தவசீலர். அவரது சிறப்பைப் போற்றும் வகையில் வானத்தில் ஒரு விண்மீன் பகல் நேரத்திலே தோன்றியது.

ஒருமுறை துறவி ஒரு மலையின் உச்சிக்குச் சென்று தியானம் பண்ண விரும்பினார். நண்பகலில் பயணத்தை ஆரம்பித்தார்.

அப்போது அவ்வூரில் இருந்த சிறுமி ஒருத்தி தானும் மலை உச்சிக்கு வருவேன் என்று அடம்பிடித்தாள். துறவியும் "சரி... வா'' என்று அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

இருவரின் பயணமும் தொடர்ந்தது. சிறிது தூரம் சென்றது. வெயில் அதிகம் என்பதால் சிறுமிக்குத் தாகம் எடுத்தது.

""தண்ணீர் வேண்டும்'' என்றாள் சிறுமி.

துறவியும் அருகிலிருந்த சுனையில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்.

""நீங்க குடிச்சாத்தான் நானும் குடிப்பேன்!'' என்று சிறுமி பிடிவாதம் பிடித்தாள். துறவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். சிறுமி கேட்கவில்லை.

ஒருபுறம் விரதம். மறுபுறம் சிறுமியின் தாகம். இறுதியாக ஒரு வாய் தண்ணீர் பருகினார். சிறுமியும் பருகினாள். பயணம் தொடர்ந்தது.

தலைகுனிந்தபடியே துறவி நடந்தார். வானில் நட்சத்திரம் மறைந்திருக்குமென நினைத்தார். சங்கடத்துடனே தலைநிமிர்ந்து வானை நோக்கினார். அங்கே இரண்டு விண்மீன்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.