அரங்கம்: "புல் புல்' மல்−கா!ஓரங்க நாடகம்!


ஓரங்க நாடகம்!
இடம் - பாலாஜி வீடு
மாந்தர் - கோபால், கீதா, மல்லிகா, பாலாஜி.
கோபால்: மல்லிகா!....பாலாஜி!
மல்லிகா: வா கோபால்!....வா கீதா!
பாலாஜி: என்ன கோபால்?
கோபால்: இந்தாங்க எல்லோருக்கும் இனிப்பு!
பாலாஜி: எதுக்கு?
கீதா: எங்க நேதாஜி சாரணர் சங்கத்துக்கு இந்த வருஷம் விருது கிடைச்சிருக்கு....
மல்லிகா, பாலாஜி: வாழ்த்துக்கள்!
மல்லிகா: கோபால், இந்த சாரணர் இயக்கத்தைப் பத்தி விரிவா தெரிஞ்சுக்க ஆசைப் படறோம்....எப்ப சொல்ல முடியும்?
கோபால்: இதோ இப்பவே சொல்றோம்...
பாலாஜி: சரி, இப்படி உட்காருங்க....முதல்லே இந்த இயக்கத்தோட நோக்கம் என்ன?
கீதா: நான் சொல்றேன்.....உன்னத மனிதனாகச் சிறந்து விளங்க. நல்ல பயிற்சிகளைத் தருவதே சாரணர் இயக்கம்! சிறுவர் சிறுமிகளையெல்லாம் தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்தவர்களாக, பொறுப்புணர்ச்சி, கடமை, பணிவு, அன்பு, பண்பு, சகோதரத்துவம் நிறைஞ்ச குடிமக்களை உருவாக்கும் இயக்கமே சாரணர் இயக்கம்! இதைச் சாரணியம்னு சொல்லுவாங்க.....சரியா அண்ணா?.....
கோபால்: சரியா சொல்லிட்டே கீதா!
மல்லிகா: இது எப்படி உருவாச்சு?
கோபால்: 1899-இல் தென்னாப்பிரிக்காவிலே "போயர் போர்' வந்தது! ...அப்ப லண்டனைச் சேர்ந்த "பேடன் பவல்' என்பவர் சிறுவர்களைக் கொண்டு பல அணிகள் ஏற்படுத்தினார். ஒவ்வொரு அணிக்கும் ஒரு விலங்கு, மற்றும் பறவையோட பெயரை வைத்தார். முதலுதவி செய்தல், தேசப்படத்தில் இடங்களை அடையாளம் காணுதல், சைககள் மூலம் செய்திகளை தொலைவில் இருப்போருக்கு அறிவித்தல்...,இப்படிப் பல பணிகளில் சிறுவரைப் பழக்கினார். இவர்கள் மூலமாகவே
எதிரிகளின் விவரங்களை அறிந்து கொண்டார். இறுதியில் எதிரிகளை ஓடச் செய்து வெற்றியும் பெற்றார் பேடன் பவல்!
கீதா: இந்த அனுபவம்தான் பேடன் பவலைச் சாரணர் இயக்கத்தைத் துவங்க ஊக்குவித்தது! 1907-ஆம் வருடம் பேடன் பவல் இருபது இளைஞர்களுடன் பிரெüன் சித் எனும் ஒரு கடல் தீவிற்குப் போனார். அங்கே பத்து நாட்கள் அந்த இருபது இளைஞர்களுக்கும், ஒழுக்கம், கட்டுப்பாடு, குழுவுணர்ச்சி, கூட்டுப் பொறுப்பு, கடமையுணர்ச்சி, தோழமையுணர்வு, சூழ்நிலைக்கேற்ப வாழப்பழகுதல்..., ஆகிய ஆக்க மனோநிலைகளைப் பின்பற்றப் பயிற்சியளித்தார். இதுதான் சாரணர் உலகின் முதல் பாசறைப் பயிற்சி. இதுதான் உலகின் முதல் சாரணர் படை. இந்த இருபது பேர்கள்தான் உலகின் முதல் சாரணர்கள்!
பாலாஜி: அப்புறம் இந்த இயக்கம் எப்படித் தொடர்ந்தது?
கோபால்: பேடன் பவல் தான் வகித்திருந்த லெப்டினென்ட் பதவியை விட்டு விலகினார். சாரணர் இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
மல்லிகா: அதற்காக எப்படிச் செயலாற்றினார்?
கீதா: அவர் ஒரு புத்தகம் எழுதினார். அதைப் படிச்ச பல நாட்டுக்காரங்க தங்கள் நாட்டிலே இந்த இயக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிச்சாங்க....
மல்லிகா: பெண்களும் இதிலே சேர்ந்தாங்களா?
கீதா: சேர்ந்தாங்களே.....! 1909 லேர்ந்து பெண் வழிகாட்டியர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது! பேடன் பவல் அவர்களின் சகோதரி செல்வி அக்னல் பேடன் பவல்தான் முதல் பெண் தலைவர்.
பாலாஜி: நல்ல துவக்கம்தான்!.....ஆமாம்,....இந்த இயக்கத்தை நம்ம இந்தியாவிலே எப்போ துவங்கினாங்க?...
கோபால்: 1916-இல் இலங்கை நாட்டுச் சாரணர் இயக்கத்தின் ஆணையராக எம்.ஜி.பியர்ஸ் என்பவர் இருந்தார். அவர் இயக்கத்துலே ஓர் திறமையான மாணவர் இருந்தார். அவர் பெயர் ஜி.பி. ஆரிய ரத்னம். நல்ல பயிற்சி பெற்றவர். அவரை சித்தூர் மாவட்டத்திலே மதனப்பள்ளி என்கிற இடத்துலே, ஒரு கல்லூரியில் சேர்ந்தார். அவர் அங்கே ஒரு சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார். சிறப்பாக அதை நடத்தினார். இதை அங்கீகரிக்க பேடன் பவலுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
மல்லிகா: அங்கீகாரம் கிடைச்சுதா?
கோபால்: சாரணர் இயக்கத்தைத் திறம்பட நடத்தக்கூடிய ஆங்கில அதிகாரிகள் யாரும் இந்தியாவில் இல்லைன்னு சொல்லிட்டாங்க!.........
மல்லிகா: அப்படியானா இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட திறமை இல்லைன்னு அவங்களாவே நினைச்சுட்டாங்க.....இல்லையா?
கோபால்: இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலம்.....அதனால இப்படித் தவறா முடிவு பண்ணியிருக்கலாம்!
பாலாஜி: அப்புறம் என்ன ஆச்சு?
கீதா: இந்தச் செய்தி "அன்னிபெசன்ட்' அம்மையாருக்குத் தெரிஞ்சுது....அவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அம்மையார்தான்.....இருந்தாலும் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கருத்துடையவர்! அதற்காக இந்தியாவில் தங்கி தீவிரமாகச் செயல்பட்டவர். அதனால இந்தியாவில் சாரணர் இயக்கத்தையும் ஊக்கப்படுத்த எண்ணினார்.
மல்லிகா: எப்படிச் செயல்பட்டார்?
கோபால்: பல நண்பர்கள் துணையோடு சென்னை பிராட்வேயில் சாரணர் சிறுவர் சங்கத்தைத் தோற்றுவித்தார்! இதே சமயத்திலே வட இந்தியாவிலே பண்டித மதன் மோகன் மாளவியாவும், பண்டித "இருதயநாத குன்கசுரு'வும் ஒரு சாரணர் சிறுவர் சங்கத்தை நடத்திக்கிட்டு வந்தாங்க.....அதுக்குப் பேரு " சேவா சமிதி சாரணர் இயக்கம்!'
பாலாஜி: பரவாயில்லையே....., அப்புறம் இந்த இந்திய சாரண இயக்கங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சுதா?
கீதா: சொல்லப்போறதைக் கேளுங்க.....1921-இல் பேடன் பவல் இந்தியாவுக்கு வந்திருந்தார். அது தெரிஞ்சு இந்திய சாரணர் இயக்கங்கள் ஒண்ணா சேர்ந்தாங்க......சாரணர்கள் பெருந்திரளா கூடினாங்க....ஒரு விழாவையும் ஏற்பாடு பண்ணினாங்க! பேடன் பவலை விழா நிகழ்ச்சிக்கு அழைச்சாங்க!.....
மல்லிகா: அவரு சம்மதிச்சாரா?
கோபால்: சம்மதிச்சார்! விழாவுக்கு வந்தார். சாரணர்கள் அளித்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஊன்றிக் கவனித்தார்!
பாலாஜி: அப்புறம்?
கீதா: இந்திய சாரணர்களின் தோற்றத்தைப் பார்த்தார்...., திறமையைக் கண்டு வியந்தார்!....அப்புறம் என்ன?.....இந்திய சாரணர் இயக்கத்திற்கு தனது அங்கீகாரத்தையும், ஆதரவையும் தர சம்மதித்தார்!
மல்லிகா: சபாஷ்! விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் பொறுமையும் ஜெயிச்சுட்டுது!
பாலாஜி: அப்புறம்/
கோபால்; இதற்குப் பிறகு, பல சாரண இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் ஏற்பட்டன....., கடைசியா 1947-இல் நம்ம நாடு சுதந்திரம் அடைஞ்சதும் "பாரத சாரண சாரணியர் இயக்கம்' னு ஓர் அமைப்பை ஏற்படுத்தினாங்க....இதுலே எல்லா சாரண இயக்கங்களும் ஒண்ணா சேர்ந்து இயக்கத்தை பலப்படுத்தினாங்க...!
மல்லிகா: இதைப் பத்தி தெரிஞ்சுக்க இன்னும் இருக்கா?
கீதா: ம்.....இருக்கே!....சொல்றேன்....இந்த சாரணர் இயக்கத்திலே ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவுன்னு தனித்தனியா இருக்கு!
கோபால்: ஆமாம்! ஆண்கள் பகுதியிலே ஆறு முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இளஞ்சாரணர் அல்லது குருளையர்னு பேரு. பத்து முதல் பதினெட்டு வயதுக்குட்பட்டவங்களுக்கு சாரணர்னு பேரு. பதினெட்டுக்கும் மேலே உள்ளவங்களைப் பெருஞ்சாரணர்னு சொல்வாங்க!......
கீதா: இதே போல பெண்கள் பிரிவிலும், "புல்புல்' பறவையர்..., சாரணி...., பெருஞ்சாரணின்னு மூன்று பிரிவுகள் உண்டு.
மல்லிகா: புல்புல் பறவைன்னா?
கீதா: இனிமையாகப் பாடும் பறவைன்னு அர்த்தம்!
பாலாஜி: புதுசா சேரும்போது எதைச் சொல்லித் தருவாங்க?....
கோபால்: ஓர் உறுதிமொழியைச் சொல்லச் சொல்வாங்க....."கடவுளுக்கும் நாட்டுக்கும் உண்மை உடையவனாகக் கடமையைச் செய்வேன்....பிறருக்காக எந்த நேரமும் உதவி செய்வேன்....சாரணர் விதிகளைப் பின் பற்றுவேன்'இதுதான் அந்த வாக்குறுதி.
கீதா: தூய்மை, விலங்குகளிடம் அன்பு, சிக்கனம், அன்பு, கட்டுப்பாடு, நம்பிக்கை...இந்த குணங்களை வளர்க்கத்தான் நம் "பாரத சாரண சாரணியர் இயக்கம்!'
பாலாஜி: அருமையான இயக்கம்!.....எல்லா மாணவர்களும் சேரவேண்டிய நல்ல இயக்கம்!
மல்லிகா: ஏய்!....என்ன மாணவர்கள் மட்டுமில்லே...., மாணவிகளும் சேர வேண்டிய இயக்கம்னு சொல்லு!
பாலாஜி: (கிண்டலாக) அப்படியே ஆகட்டும் "புல் புல்' மல்லிகா!
......சிரிப்பலைகள்!......
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...