சேவையும் செய்வோம்!: அரங்கம்
(செய்தித்தாளைப் பிரித்த அப்பா, அதனுள் இருந்த துண்டு அறிக்கையைப் பார்த்துவிட்டு...)


(செய்தித்தாளைப் பிரித்த அப்பா, அதனுள் இருந்த துண்டு அறிக்கையைப் பார்த்துவிட்டு...)
அப்பா - திலக்!...திலக்!...
ஆனந்த் - திலக், அப்பா உன்னைக் கூப்பிடுறார்!...
திலக் - என்ன அப்பா!...
அப்பா - இந்தா இந்தத் துண்டு அறிக்கையைப் படி!
திலக் - (படிக்கிறான்) காந்தி நகர் சேவா
மையம் : சுற்றறிக்கை. காந்தி நகர வாசிகளே!....மூன்று ஆண்டுகளுக்கு முன் நம் நகரில் நாம் கட்டிய காந்தி மண்டபம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. பழைய அழகையும். தூய்மையையும் இழந்துள்ளது. பல இடங்களில் தூசும் அழுக்கும் சேர்ந்துள்ளது. தோட்டச் செடிகள் குப்பைகள், நடுவில் உலர்ந்து கிடக்கின்றன. இதனைப் பராமரித்து வந்தவர் மூப்பு காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். அதன் பின் சேவை மனப்பான்மை கொண்ட சரியான நபர் கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வாக இருபத்தைந்து சிறுவர்கள் முன்வந்தால் போதும்! நான்கு மணி நேரத்தில் ஒரு முழு மண்டபத்தையும் "பளிச்' என்று ஆக்கிவிடலாம்! எனவே வீட்டிற்கு இரண்டு பிள்ளைகளை அனுப்பி இந்த சேவையில் ஈடுபடச் செய்யுங்கள். சிறுவர்களுக்குள் சேவை மனப்பான்மையை வளர்க்கவே இந்த யோசனை. விருப்பமுள்ளோர் ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணிக்கு மண்டபத்திற்கு வரவும். நன்றி! வணக்கம்!---அன்புடன்....
சிதம்பரம்--சேவா சங்கச் செயலாளர்.
அப்பா - நல்லதுதான்....நம்ம நகர், நம்ம மண்டபம், நாமதான் கவனமா பராமரிக்கணும்!.... நீங்க ரெண்டுபேரும் இந்த சேவையிலே கலந்துக்குங்க!....
திலக் - சரிப்பா!...
திலக் - என்னடா ஆனந்த், மணி ஏழரை ஆச்சு,.... சேவாவுக்கு புறப்படல்லே?....
ஆனந்த் - நீ போ திலக்,.... நான் வரல்லே...
அப்பா - ஏன்,....உனக்கென்ன?...
ஆனந்த் - எனக்கு அதிலே ஆர்வமில்லேப்பா!....
அப்பா - போனா ஆர்வம் தன்னால வந்திடும்!....
ஆனந்த் - பரவாயில்லேப்பா,....நான் மட்டும் போகாட்டா என்ன?...
அப்பா - ம்ஹூம்.....அப்படியே எல்லாரும் நினைச்சா வீட்டிலே உட்கார்ந்துட்டா?....என்ன ஆகும்? யோசிச்சுப் பாரு!....
ஆனந்த் - ஏம்ப்பா சின்னப் பசங்க எங்களை ஏன் கூப்பிடறாங்க.... கூலிக்கு வேலை செய்யறவங்களைப் போட்டா என்ன?....
அப்பா - அப்படிப் போட்டா மாதச் செலவு அதிகமாயிடும்....
ஆனந்த் - போப்பா,.... நான் வரலே....எனக்கு வீட்டு வேலை நிறைய இருக்கு!....
அம்மா - டேய் ஆனந்த், நீ போகாட்டா மத்த நண்பர்கள் உன்னைப்பத்தி தவறாப் பேசமாட்டாங்க?....ஏதாவது குற்றமா சொல்லமாட்டாங்க?....
ஆனந்த் - ஆமாம் திலக்,.... சரி, நானும் வரேன்...
அப்பா - அப்படி வேண்டாம் ஆனந்த்,.... மத்தவங்களுக்காக நாம ஒரு வேலையைச் செய்தா அது சரியா இருக்காது!.... நமக்கே சேவை செய்யணும்னு தோணணும்!....அதுலேதான் மகிழ்ச்சி இருக்கு!.... மகாத்மா சொன்ன வார்த்தை இது!.... இப்போ உனக்கு அந்த மனசு இல்லே.... விட்டுடு போகவேண்டாம்!.... நீ போ திலக்!....
திலக் - சரிப்பா!
தபால்காரர் - ஆனந்த் தம்பி!... தபால் வந்திருக்கு இந்தா!....
ஆனந்த் - (பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு மகிழ்ச்சி பொங்க...) அப்பா!.... நான் வரைஞ்ச காந்தி ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு!...
அப்பா - அப்படியா?... கொண்டா அதை!.... வாழ்த்துகள்!
அம்மா - என்ன அது? ஆனந்திற்கு?.....
அப்பா - படிக்கிறேன் கேளு!.... "சேவா ஒளி' பத்திரிகை காந்திஜி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்திய போட்டியில் உங்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது!.... பாராட்டுகள்!.... ஒருவரது திறமையை அவர் வசிக்கும் பகுதியிலுள்ள மற்றவர்களெல்லாம் அறிந்து கொள்வது அவசியம்! ஆகையால் நாங்கள் பரிசளிப்பு விழாவை வித்தியாசமான முறையில் நடத்த உள்ளோம்!.... உங்கள் பகுதியிலுள்ள காந்தி மண்டபத்திற்கு வந்து பரிசுகளை வழங்க உள்ளோம்!.... நாள், நேரம், விரைவில் அறிவிக்கப்படும். --- அன்புடன்---- ஆசிரியர் -- சேவா ஒளி! (இது பற்றி வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்)
அம்மா - வாழ்த்துகள் ஆனந்த்!
திலக் - ஆனந்த், வாழ்த்துகள்! .... முதல் பரிசு!... அதுவும் நம்ம நகர் காந்தி மண்டபத்திலே!... அப்பா, அம்மா இப்போ காந்தி மண்டபம் "பளிச்' சுன்னு சுத்தமாயிட்டுது!.... நிறையபேர் வந்து சேவை செஞ்சாங்க....
செயலாளர் - சிறுவர்களே!... பெரியோர்களே!...சேவா ஒளி பத்திரிகை ஆசிரியர் சிதம்பரம் அவர்களே வணக்கம்!... ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எங்கள் நகர் சிறுவனுக்கு பரிசளிப்பதற்காக இங்கேயே வந்துள்ள உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!.... பரிசு பெற்ற சிறுவன் யார் என்றுதான் நீங்கள் சொல்லவில்லை!.... தாங்கள் இங்கு ஒருமுறை வந்தபொழுது இங்குள்ள சிறுவர்களையே சேவையில் ஈடுபடுத்தும் ஒரு நல்ல யோசனையையும் சொல்லிவிட்டுச் சென்றீர்கள்!.... அவ்வாறே சுமார் முப்பது சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தி இம்மண்டபத்தைச் சுத்தமாக்கியுள்ளோம்!.... இப்பொழுது சேவை செய்த சிறுவர்களையும் பாராட்டி பரிசளிக்க வந்துள்ளீர்கள்!.... ஐயா, இப்பொழுது நீங்கள் பேசலாம்!.... நன்றி!
சிதம்பரம் - வணக்கம்!.... முதலில் சேவையில் ஈடுபட்ட அத்தனை சிறுவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.... (கரவொலி)...நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய மகாத்மாவின் நூல்களைத்தான் உங்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப் போகிறேன்!.... வரிசையாக வந்து பெற்றுக் கொள்ளுங்கள்!.... பரிசளிப்பு முடிந்த பிறகு,.... சேவையில் ஈடுபட்டவர்களில் ஒரே ஒரு சிறுவனை மட்டும் பேச அழைக்கிறேன்!....
செயலாளர் - வாஞ்சி!.... நீ வாப்பா!....
வாஞ்சி - வணக்கம்! தூசு தட்டி, கண்ணாடி துடைத்து சேவை செய்துவிட்டுப் போவோம் என்று நினைத்துத்தான் நான் இங்கு வந்தேன்.... ஆனால் சேவை செய்யும்போது நல்ல அனுபவங்களும் கிடைத்தன. முதலாவதாக இங்குள்ள அனைத்து வீட்டு நண்பர்களையும் நன்றாக அறிந்து கொண்டேன். இரண்டாவதாக நல்ல செயலைச் செய்கிறோம் என்ற மகிழ்ச்சி கிடைத்தது!.... மூன்றாவதாக உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்து விட்டது!.... நான்காவதாக எதிர்காலத்தில் இந்த நண்பர்களுடன் ஒற்றுமையாக நல்ல பல செயல்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கடைசியாக, இங்குள்ள தூண்களைத் துடைக்கும் போதெல்லாம் அதிலுள்ள காந்திஜியின் பொன்மொழிகளைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனவே சேவை செய்து மகிழ்வோம்!....வணக்கம்!...
(பலத்த கரவொலி!)
சிதம்பரம் - கேட்டீர்களா?.... சேவையின் பலன்களை!..... அது மட்டுமல்ல.... சேவை மனப்பான்மையுடைய மனிதர்களால்தான் ஒரு நாட்டைப் பல வகையிலும் சிறப்புறச் செய்ய முடியும்!.... இந்த மனப்பான்மையை இளம் வயதிலேயே நீங்கள் வளர்த்துக் கொண்டால்தான் பெரியவர்களான பிறகும் அப்பழக்கம் தொடரும்!.... காந்திஜி காலத்தில் இத்தகைய சேவை மனப்பான்மை நிறைந்தவர்கள் இருந்தார்கள். அதனால்தான் ஒற்றுமையாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி விடுதலை பெற முடிந்தது!.... எனவே நீங்களும் படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றையும் தாண்டி, சேவைக்காகச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்!.... அடுத்து ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ள மயிலை குமாரை அழைக்கிறேன்.... வா, குமார்!.... வாழ்த்துகள்!.... (கரவொலி)... அடுத்து முதல் பரிசு பெற்றுள்ள உங்கள் நகர் ஆனந்தை அழைக்கிறேன். வா, ஆனந்த்!
பல குரல்கள் - வாழ்த்துகள்!.... வாழ்த்துகள்!.... ஆனந்த்!...
சிதம்பரம் - ஆனந்த், சேவைக்கு ஒரு சிறந்த உதாரணமாக வாழ்ந்த காந்திஜியை மிக அற்புதமாக வரைந்திருக்கிறாய்!.... இந்தா பரிசுகள்!.... சிறு பொன்முடிப்பாக ரூபாய் ஆயிரமும், காந்திஜி படம் போட்ட இந்த சுவர்க்கடிகாரமும்!....
(கரவொலி)....
ஆனந்த் - ஐயா, நான் கொஞ்சம்
பேசலாமா?....
சிதம்பரம் - ம்.... பேசுப்பா!...
ஆனந்த் - பரிசுகள் கிடைத்ததற்கு நன்றி!.... மகிழ்ச்சி!.... ஆனால் வாஞ்சியின் பேச்சையும், உங்கள் பேச்சையும் கேட்டபிறகு எனக்கு வருத்தம்தான் ஏற்பட்டுள்ளது.... காந்திஜியின் படம் வரைந்த எனக்கு, அவரது சேவை மனப்பான்மை இல்லாமல் போய்விட்டது!.... இப்பொழுது சேவையின் அவசியத் தேவை பற்றித் தெரிந்து கொண்டேன்.... அதற்கு அடையாளமாக இந்த சுவர்க்கடிகாரத்தை நம் காந்தி மண்டபத்திற்கு அளிக்க விரும்புகிறேன்.... ஐயா செயலாளர் அவர்களே, பெற்றுக்கொள்ளுங்கள்!.... (பலத்த கரவொலி).... இனிமேல் மண்டப சேவைக்கு நான் முதலில் வந்து நிற்பேன்!.... வணக்கம்!...
(கரவொலி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...