மறதி மின்னாவும், புத்திசாலி புஜியும்!

மறதி மின்னாவும், புத்திசாலி புஜியும்!

அட, நீயேன் இதற்கெல்லாம் வருத்தப்படுகிறாய். நான் இருக்கிறேன் அல்லவா... உன் நண்பன். நீ என் முதுகில் ஏறிக்கொள்.

அரங்கம்
காட்சி -1
இடம் - ஆற்றங்கரை
மாந்தர்கள்: நாய் மின்னா, பூனை புஜி.
(ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல
ஆசைப்பட்டது புஜி. ஆற்றிலோ தண்ணீர் 
அதிகம் ஓடிக்கொண்டிருந்தது. எப்படி
ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்வதென்று
புஜிக்குத் தெரியவில்லை. இதை வருத்தத்துடன் 
தன் நண்பன் மின்னாவிடம் கூறியது)

மின்னா: அட, நீயேன் இதற்கெல்லாம் வருத்தப்படுகிறாய். நான் இருக்கிறேன் அல்லவா... உன் நண்பன். நீ என் முதுகில் ஏறிக்கொள். நான் தண்ணீரில் நீந்திச் சென்று உன்னை அக்கரையில் கொண்டுபோய் விடுகிறேன். 
புஜி: மகிழ்ச்சி நண்பனே! உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை....
மின்னா: நண்பர்களுக்குள் நன்றி எல்லாம் எதற்கு? வா, என் முதுகில் ஏறிக்கொள். உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். 
(மின்னாவின் முதுகில் துள்ளிக் குதித்து ஏறிக்கொண்ட புஜி அக்கரையை அடைந்தது. புஜியும் மின்னாவும் ஆளுக்கொரு பக்கமாக மோப்பம் பிடித்தபடி பிரிந்து சென்றுவிட்டன. புஜி, வழியில் எலி ஒன்றை வயிறுமுட்டத் தின்றுவிட்டு நடக்க முடியாமல் உண்ட மயக்கத்தில் அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டது. அப்போது அக்கரையில் நின்றுகொண்டு தன்னைக் கூப்பிடும் எஜமானரின் குரலைக் கேட்ட மின்னா, புஜியை மறந்துவிட்டு, தண்ணீரில் குதித்து, நீந்தி மறுகரை சென்று எஜமானருடன் வீட்டுக்குப் போய்விட்டது)
புஜி: (நீண்ட நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த புஜி) எங்கே மின்னாவைக் காணோம். அவனுக்கு மறதி அதிகமாயிற்றே... என்னை விட்டுவிட்டுப் போய்விட்டானோ.... அட இறைவா! எப்படி நான் அக்கரைக்குச் செல்வேன். ஏதாவது ஒரு வழி சொல்லேன்... 

காட்சி-2
இடம் - ஆற்றங்கரை
மாந்தர்கள்: காட்டு நாய், புஜி
(மிகுந்த பசியோடு அலைந்து திரிந்து 
கொண்டிருந்த காட்டு நாய் ஒன்று புஜியின்
(பூனை) குரலைக் கேட்டு அதை நெருங்கியது)
காட்டு நாய்: ஆகா! இன்று எனக்கு நல்ல வேட்டை... "கொழுக்மொழுக்'கென்று இருக்கும் உன்னை எப்படியாவது இன்று தின்று என் பயங்கரப் பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறேன்.
புஜி: (காட்டு நாயைப் பார்த்து மிரண்டு போன புஜி), இதோ பார் காட்டு நாயே... நான் ரொம்பச் சிறியவன். உன் பசிக்கு போதமாட்டேன். என்னை நீ அக்கரையில் கொண்டுபோய் விட்டால், என்னைவிடப் பெரிய - பெருத்த - மிகவும் ருசியான உணவை உனக்கு நான் காட்டுகிறேன். அதை சாப்பிட்டால் உனக்கு ஒரு வாரம் அல்ல, ஒரு மாதமானாலும் பசிக்கவே பசிக்காது தெரியுமா?
காட்டு நாய்: (பேராசை பிடித்த அந்தக் காட்டு நாய்) ஓ... அப்படியா? சரி உன்னை அக்கரையில் கொண்டுபோய் விடுகிறேன். சொன்னபடி எனக்கு அந்தப் பெருத்த உணவை நீ காட்ட வேண்டும், சரியா? (காட்டு நாயின் வாயில் எச்சில் ஊறியது)
புஜி: காட்டுகிறேன் காட்டுகிறேன்... முதலில் என்னை அக்கரையில் கொண்டுபோய் விடு.
(காட்டு நாயின் முதுகில் ஏறி அமர்ந்து அக்கரையை வந்து சேர்ந்த புஜி, அருகில் இருந்த மரத்தில் "சட்டென்று' தாவி ஏறி உச்சிக் கிளையில் போய் உட்கார்ந்து கொண்டு "மியாய்... மியாய்' என்று கத்தியது)
காட்டு நாய்: ஏ... பூனையே.... என்ன நீ, எனக்குப் பெருத்த உணவைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டாயே.... என்னை ஏமாற்றுகிறாயா என்ன? உன்னை என்ன செய்கிறேன் பார்! (காட்டு நாயின் கண்கள் கோவத்தில் சிவந்தன)
புஜி: காட்டு நாயே... நீ என்னை நம்பி அக்கரையில் இருந்து இக்கரையில் கொண்டு வந்துவிட்டாய். முதலில் உனக்கு நன்றி. நம்பிக்கைதானே வாழ்க்கை. அதே போலத்தான் நானும் கடவுளை நம்பினேன். உன்னை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. "இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல ஏதாவது வழிகாட்டு கடவுளே...' என்று கடவுளிடம் வேண்டினேன், அவர் என்னைக் காப்பாற்றுவார் என்றும் நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆனால் நீ, அடுத்தவரைத் துன்புறுத்தி உன் வயிற்றை வளர்க்க நினைத்தாய். ஆனால், நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், என் உயிர் நண்பனைப் பிரியாமல் இருக்கவும் நினைத்தேன். அவ்வளவுதான். நீ பிற உயிரைக் கொன்று தின்ன நினைத்தது தவறுதானே? அதனால்தான் உன் நம்பிக்கை வீண்போயிற்று! 
பகை அழிவில்தான் கொண்டுபோய் விடும். யாரிடமும் பகை கொள்ள நினைக்காதே... அன்பாகப் பழகு. இனிமேல் இருவரும் அன்புடன் பழகுவோம். அன்பு இருக்கும் இடத்தில்தான் வாழ்வு இருக்கும். அன்பு எதையும் எடுக்க நினைக்காது; எப்போதும் அடுத்தவருக்குக் கொடுக்கவே நினைக்கும். அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனப்பான்மையும் இருக்கும். உலகில் மிகச்சிறந்ததும் சக்தி வாய்ந்ததும் அன்பு ஒன்றுதான் நண்பனே! என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் பொய் கூறிவில்லை; நேரத்திற்குத் தகுந்தாற்போல செயல்படக்கூடிய என் புத்தியைப் பயன்படுத்தினேன், அவ்வளவுதான்! உண்மையைச் சொன்னால் நீ என்னைக் கொல்லாமல் விட்டுவிடுவாயா என்ன? என்னை மன்னித்துவிடு நண்பா! நானா உன்னை ஏமாற்றினேன், சொல்...?
காட்டு நாய்: இல்லை... இல்லை... நீ ஏமாற்றவில்லை. நீ மிகவும் புத்திசாலிப் பூனை. உன்னைப் போல ஒரு பூனையை நான் நட்பாக்கிக் கொண்டால், என் எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும். நான் சென்று வருகிறேன்... 
(காட்டு நாய் தண்ணீரில் குதித்து நீந்தி அக்கரை சென்று காட்டுக்குள் மறைந்துவிட்டது. 

காட்சி-3
இடம் - வீடு
மாந்தர்கள்: புஜி, மின்னி
(புஜியின் குரல் கேட்டு வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்த மின்னா கண்விழித்தபோது, புஜி அதன் முன்பு நட்பு பொங்க நின்றிருந்தது)
மின்னா: அச்சச்சோ... நண்பனே... உன்னை அக்கரையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனே... மறந்தே போய்விட்டேன். நீ எப்படி வந்தாய்? உனக்கு ஏதும் ஆபத்தில்லையே... என்ன எனக்கு இப்படியொரு மறதி நோய்... என்னை மன்னித்துவிடு நண்பா! (புஜியின் முகத்தோடு முகம் வைத்து மன்னிப்பு கேட்டது மின்னா)
புஜி: பரவாயில்லை நண்பா... உனக்கோ மறதி அதிகம்; எனக்கோ புத்திசாலித்தனம் அதிகம்; நம் எஜமானருக்கோ அன்பு அதிகம். அதனால்தான் நம் இருவரையும் அவர் வளர்க்கிறார்.
(சிரித்துக்கொண்டே கூறிய புஜி, படுத்திருந்த மின்னாவின் முதுகில் ஏறி சுருண்டு படுத்து நிம்மதியாக உறங்கத் தொடங்கியது)
- திரை- 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com