
பள்ளியில் கற்றிடும் சிறுமிகளே
பாதையில் கூடி வந்தார்கள்
வெள்ளை நிற உடை அழகுடனே
வேண்டி நன்கொடை கேட்டார்கள்!
""எம்முடன் கற்றிடும் மாணவியாம்
இனியவள் "மாலா' அவள் பெயராம்! - அவள்
அம்மா இதய நோயாலே
அவதிப்பட்டே இருக்கின்றாள்!
அறுவை சிகிச்சை செய்திடவே
ஆகும் செலவோ ஒரு இலட்சம்!
உருவம் மெலிந்தே வாடுகிறாள்
உதவிடவேண்டும் அவளுக்கே!
அப்பா டீக்கடை நடத்துகிறார்!
அவரிடம் பணங்காசு ஏதுமில்லை!
இப்படியான சூழ்நிலையில்
எங்களு தோழிக்கு உதவிடுங்கள்!
முதல்வர் கல்வி அமைச்சுருக்கும்
முதலில் விண்ணப்பம் போட்டுள்ளோம்!
இதயம் உள்ளோர் உதவிடுங்கள்! - என
எல்லோரிடமும் கேட்டார்கள்!
கையில் அறிவிப்பு அட்டையுடன்
கடைகடையாகவும் கேட்டார்கள்!
கையில் இருந்த உண்டியலில்
காசுகள் பலரும் போட்டார்கள்!
""பொங்கல் திருநாள் எங்களுக்கே
புத்தாடை வேண்டாம் என்றிட்டோம்!
எங்களுக்கான அப்பணத்தை
இதற்கே உதவிட எண்ணியுள்ளோம்!'' - என்ற
சிறுமிகள் செய்யும் இப்பணியைத்
தெரிந்து என் மனம் வியந்ததுவே!
உறுதியாய் நூறு ரூபாயை
உடனே போட்டேன் உண்டியலில்!
உதவிக்கரங்கள் கூடியதால்
உடனே சிகிச்சையும் முடிந்ததுவே!
நல்ல விதமாய் மாலாவின்
தாயின் உடல் நிலை தேறியதே!