காட்சி-1
இடம்: வீடு. நேரம்: மாலை
பங்குபெறுவோர்: ராஜா, அம்மா, மாலா.
அம்மா: டேய் ராஜா, எந்திரிடா. எவ்வளவு நேரம் தூங்குவ? நாளைக்குப் பரீட்சை. மதியம் படுத்தவன். மணி 5 ஆகப் போகுது.
ராஜா... எந்திரிப்பா.
மாலா: அம்மா இப்படி எழுப்பினால் எந்திரிக்க மாட்டான். இதோ வரேன். ( ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வருகிறாள்.) தண்ணீரை ராஜா முகத்தில் தெளிக்கிறாள்.
ராஜா: ஆ... மழை பெய்ய வச்சுட்டேன்.வெற்றி... வெற்றி..!
அம்மா: என்னடா ராஜா ஏதேதோ பேசற. என்னாச்சு? மாலா, நல்லாத்தானே தூங்கப் போனான். எனக்குக் கவலையா இருக்கு.
மாலா: அம்மா ஏதாவது கனவு கண்டிருப்பான். அதான் உளறுகிறான். நீ கவலைப் படாதேம்மா.
ராஜா: ஆமா நான் கனவு கண்டேன். இன்னைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரத் தேவை என்ன? மழை. அந்த மழையை வரவழைக்க நான் ஒரு புதிய வழி
கண்டுபிடிச்சுட்டேன்.
அம்மா: என்ன வழி ராஜா?
ராஜா: மழை எப்படி வருது? நீர் ஆவியாகி மேலே போய், மேகமாகி, மழையா வருது. அம்மா நீ தோட்டத்திலே ஓர் அடுப்பைப் பத்தவச்சு ஒரு குடம் தண்ணி காயப் போடுவாய். அது நல்லா கொதிச்சு ஆவியாகி மேலே போகும். அதுபோல நான்100 அடுப்பில் 100 குடம் தண்ணீர் காய வச்சேன். அது எல்லாம் ஆவியாகி மேலே போச்சு. மழை வரதுக்குள்ள என்னை எழுப்பி கனவைக் கலைச்சிட்டீங்க.
மாலா: (சிரித்தபடி) நல்ல கனவுடா ராஜா.
அம்மா: நாளைக்குக் காலாண்டு. படிக்காம பகலில் தூங்குற, கனவு வேற!
ராஜா: அப்துல் கலாம் கனவு காணச் சொல்லிருக்காரும்மா.
மாலா: தூங்கிக்கிட்டு கனவு காணச் சொல்லலை. தூங்கவிடாமல் செய்வதுதான் கனவுனு சொன்னாரு ராஜா.... புதுசா ஏதாவது கண்டுபிடிக்கணும்ங்கிற உன்னோட லட்சியத்தைப் பாராட்டறேன். ஆனா. அதுக்கு நிறையப் படிக்கணும். சரியாப் புரிஞ்சுக்கணும். எதையும் உற்று கவனிக்கணும்.
அம்மா: சரி ராஜா. முகத்தைக் கழுவிட்டு, காப்பியக் குடி. நாளைய பரிட்சைக்குப் படி.
ராஜா: (தனக்குள் - மெதுவாக) தொலைநோக்குப் பார்வையோட எதையும் செய்யவிட மாட்டாங்க.
காட்சி-2
இடம்: வீடு.நேரம்: காலை
பங்கு பெறுவோர்: ராஜா, நண்பன் சங்கர்.
(மேஜை முழுவதும் பல்வேறு அட்டைகளில் எழுதிக் கொண்டிருக்கிறான் ராஜா)
சங்கர்: ராஜா... ராஜா... இங்க இருக்கியா? என்ன... பரிட்சை முடிஞ்சிருச்சு. ஏதோ எழுதிக்கிட்டிருக்க?
ராஜா: நானே உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன். இதோ பார். நான் நிறைய பெயர் பலகை எழுதியிருக்கேன். இதில் எது எனக்குப் பொருத்தமா இருக்கும்
சங்கர்?
சங்கர்: (ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கிறான்) மருத்துவர் ராஜா, பொறியாளர் ராஜா, எழுத்தாளர் ராஜா, வழக்கறிஞர் ராஜா, ஆட்சியர் ராஜா, விஞ்ஞானி ராஜா...
ராஜா: இதில எது எனக்குப் பொருத்தமா இருக்கும்
சங்கர்?
சங்கர்: ம்ம்... உனக்குப் பொருத்தமானது இதுல இல்லையே.
ராஜா: பரவாயில்லை... பொருத்தமானதா சொல்லு எழுதிக்கிறேன்.
சங்கர்: முட்டாள் ராஜா!
ராஜா: போடா. என்னை மாதிரி சிந்திக்க முடியலையேன்னு உனக்குப் பொறாமை.
சங்கர்: டேய், இன்னையிலிருந்து காலாண்டு விடுமுறை. உபயோகமா ஏதாவது செய். நான் எங்க மாமா வீட்டுக்குத் திருச்சி போறேன். அதைச் சொல்லத்தான் வந்தேன். சரிடா போயிட்டு வரேன்.
ராஜா: சரிடா. (மனதுக்குள்) ஊர் சுத்தப் போறவன் உபயோகமா செய்னு அறிவுரை சொல்றான்!
காட்சி-3
இடம்: வீடு. நேரம்: காலை
பங்கு பெறுவோர்: ராஜா, அம்மா, மாலா.
மாலா: (கதவைத் தட்டியபடி) ராஜா கதவத் திற. சொன்னாக் கேளு. இப்பத் திறக்கப் போறியா, இல்ல அம்மாட்ட சொல்லவா?
ராஜா: அக்கா கொஞ்ச நேரம் பொறு.
மாலா: டேய் அந்த வாயில்லா ஜீவனை என்னடா பண்ற?
ராஜா: கோழி பேசாது. அதனாலதானே வாயில்லா ஜீவன்னு சொல்ற. இப்ப அதைப் பேச வைக்கத்தான் முயற்சி செய்றேன். இப்ப கோக்கொக்னு சொல்லுது. கொஞ்ச நேரத்திலே, கோழினு அது பேர சொல்லிடும். அதுவரை பொறுமையா இருக்கா. தொந்தரவு பண்ணாத.
அம்மா: என்ன ஒரே சத்தமா இருக்கு? மாலா என்ன நடக்குது இங்க?
மாலா: அம்மா, காலையில கோழிய தூக்கிக்கிட்டு இந்த அறைக்குள்ள போனான். கூப்பிட்டா கதவையும் திறக்க மாட்டேங்கிறான்.
அம்மா: டேய் ராஜா இப்பக் கதவைத் திறக்கிறியா இல்லையா? விடுமுறை விட்டாலே பிரச்னைதான்.
(பல முறை கதவைத் தட்டி, கூப்பிட்ட பிறகு ராஜா வெளியே வருகிறான். மாலா அவனிடமிருந்த கோழியை வாங்கித் தடவிக் கொடுத்த பின் தோட்டத்தில் விடுகிறாள்)
காட்சி-4
இடம்: வீட்டின் நேரம்: காலை
வரவேற்பறை.
பங்கேற்போர்: ராஜா, அம்மா, மாலா.
மாலா: டேய் தம்பி, ஏதாவது உருப்படியா செய். கோழிக்குப் பேசக் கத்துக் கொடுக்கிறேன். வாத்துக்கு ஆடக் கத்துக் கொடுக்கிறேன்னு வேண்டாத வேலை செய்யாத.
ராஜா: எதுக்கா வேண்டாத வேலை?
மாலா: கோழி எங்கயாவது பேசுமா?
ராஜா: ஏன், பறவை இனமான கிளி பேசும்போது கோழி பேசாதா? பேசத்தான் கூடாதா?
மாலா: கோழிய பேச வச்சு என்ன செய்யப் போற?
ராஜா: கோழி பேசினா மக்கள் மகிழ்ச்சி அடைவாங்க. மக்கள் மகிழ்ச்சியே ராஜாவின் மகிழ்ச்சி! நம்ம வீட்டுக் கோழிய பேச வச்சா, நம்ம பகுதியில உள்ள கோழிகளுக்கெல்லாம் பயிற்சி கொடுக்க என்னைக் கூப்பிடுவாங்க. அது மட்டுமா? தொலைக்காட்சி, மற்ற ஊடகங்களிலிருந்து வந்து என்னைய பேட்டி எடுப்பாங்க. போட்டோ எடுக்கும்போது, அப்ப மட்டும் நான்தான் ராஜாவோட அக்கானு வந்து ஒட்டி நின்னுக்குவ.
அம்மா: ராஜா... சின்ன வயதிலிருந்து நீ ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிற. அது நல்லதுதான். ஆனா அக்கா சொன்னமாதிரி நிறைய படி. நல்ல விஷயங்களைக் கேளு. எல்லாத்தையும் கவனமாப் பாரு.
மாலா: ஆமாண்டா ராஜா, ஆர்வம் மட்டும் இருந்தாப் போதாது. பயிற்சி, முயற்சி இருந்தாத்தான் சாதனை செய்ய முடியும்.
அம்மா: சரியாச் சொன்ன மாலா. ராஜா, சாதனை செய்யறதென்ன சக்கரைப் பொங்கலா? ஒருமணி நேரத்தில் செய்து முடிக்க.
மாலா: என்ன ராஜா? ஏதோ யோசனையில் இருக்க?
ராஜா: இல்ல... இந்த சக்கரைப் பொங்கல்ல ஏதாவது சாதனை செய்யலாமான்னு.... யோசிக்கிறேன்.
மாலா: அச்சச்சோ... அம்மா... நாய் வாலை நிமிர்த்தவே முடியாது!
ராஜா: கவலையே வேண்டாம் அக்கா. அது பற்றியும் ஆராய்ச்சி செய்து நிமிர்த்திடுவேன்!
(மூவரும் சிரிக்கின்றனர்)
- திரை-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!

இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக தீர்மானம்

பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக அரைசதம் விளாசிய ஜித்தேஷ் சர்மா, ரஜத் படிதார்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

