சிவப்பா? வெளுப்பா?
ஓர் அழகிய பூந்தோட்டம். பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. இயற்கை இன்பங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாற்போல் பச்சைப் பசேலென புல்வெளிகள்!


ஓர் அழகிய பூந்தோட்டம். பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. இயற்கை இன்பங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாற்போல் பச்சைப் பசேலென புல்வெளிகள்! மாசுபாடு இல்லாத இடம் என்பதை பறைசாற்றுவது போல் தோட்டம் நிறைய வண்ணத்துப்பூச்சிகள் இங்கும் அங்குமாய்ப் பறந்து திரிந்தன. பார்ப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணத் தோட்டமாய் அது இருந்தது.
அழகிய மலர்களில் தேனை உண்டு, உண்டு மகிழ்ந்திருந்தன. பல வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்திருந்த அத்தோட்டத்தில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் தேனீக்கள் கூடுகட்ட ஆரம்பித்தன. சில நாள்களில் ஒரு பெரிய தேன்கூடு ஒன்று கட்டப்பட்டு நிறைய தேனீக்கள் பெருகிவிட்டன. வண்ணத்துப் பூச்சிகளுக்குப் போட்டியாக தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை சேகரிக்க ஆரம்பித்தன. தேனீக்களும் பெருகி அதன் கூடுகளும் பெருகின! இதைக்கண்ட பட்டாம்பூச்சிகள் தனது கூட்டத்தினருக்குத் தேன் கிடைக்காமல் போய்விடுமே! எதிர்காலச் சந்ததியினருக்கு தேன் மட்டும் அல்ல, இங்கு இடமே இருக்காதோ? என்று அஞ்சின.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ஒரு பட்டாம்பூச்சி கூறியது. ""கவலைப்படாதீர்கள். நாமெல்லாம் பக்கத்து பங்களாவில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுவிடலாம். அங்கு சென்றுவிட்டால் இந்தத் தேனீக்களின் தொல்லை இருக்காது!''
""எப்படிச் சொல்கிறாய்? இந்தத் தோட்டத்திற்கு வந்த தேனீக்கள் அங்கு வர எவ்வளவு நேரமாகும்?'' என்றது மற்றொரு பட்டாம்பூச்சி.
""கண்டிப்பாக வரமாட்டார்கள்! ஏன்னா, பக்கத்துத் தோட்டத்தில் முழுவதும் சிவப்பு வண்ணப் பூக்கள். தேனீக்களால் சிவப்பு நிறப் பூக்களைப் பார்க்க முடியாது.
அதனால் அங்கு வரமாட்டார்கள்'' என்றது மூத்த பட்டாம் பூச்சி.
""ஓஹோ... அப்படியா? தேனீக்களால் சிவப்பு வண்ணத்தைப் பார்க்க முடியாதா? ஹையா! ரொம்ப சந்தோஷம். அப்ப நாம் உடனே அங்கு போயிடலாம்!'' என்றது ஒரு வண்ணத்துப் பூச்சி.
எல்லோரும் சந்தோஷமாக ஆர்ப்பாட்டமாகக் கிளம்பினார்கள். தங்களோட புது இடத்தில் தேனீக்களின் தொல்லை இல்லாமல் ஆனந்தமாக வாழலாம்னு கொண்டாட்டமாகக் கிளம்பினார்கள்.
வண்ணத்துப் பூச்சிக்கூட்டம் கிளம்பி புது பங்களாத் தோட்டத்தை குதூகலமாய் அடைந்தனர். கொஞ்ச நேரத்தில் அங்கேயும் ர்...ர்... ர்.... ரீங்காரம்! என்ன சத்தம்னு எல்லோரும் பார்த்தார்கள்.
""அடடா, சிவப்பு வண்ணம் தெரியாதுன்னு நினைச்சோம். இதுங்க எப்படி வந்ததுங்க'' என்று ஆச்சரியப்பட்டனர்.
""அறிவாளிகளே..! எங்களுக்கு சிவப்பு வண்ணம் என்பார்களே, அதுதான் தெரியாது. ஆனால் முகர்தல் திறன் அதிகம்! உங்களைப் போலவே முகர்ந்து பூக்களின் இடத்தை எளிதாகக் கண்டுபிடிச்சிடுவோம்!'' என்றது தேனீக்களின் கூட்டத் தலைவி.
""அடடா.. அப்ப உங்க தொல்லையிலிருந்து நாங்கள் விடுபட முடியாதா?'' என்றது ஒரு வண்ணத்துப்பூச்சி!
""கவலைப்படாதீங்க. உங்களைத் தொல்லை செய்யமாட்டோம். நீங்களும் எங்களுடன் சேர்ந்து இந்தத் தோட்டத்தில் சந்தோஷமாக வாழலாம்'' என்றது தேனீக்கூட்டம். அனைவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
(கா.சாந்தி பாலமுருகன் எழுதிய "நாங்கள் எல்லாம் யாரு?' நூலிலிருந்து....)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...