கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நூல் புதிது

குடும்ப உறவுகள், உயிரினங்கள்,  தேசியம், நாடு, மொழி, இயற்கை ஆகிய பிரிவுகளில் இதிலுள்ள பாடல்கள்

News image
Updated On :26 மார்ச் 2022, 10:27 am

தினமணி

பள்ளிக்கூடம் திறந்தாச்சு... வாங்க! (பாடல்கள்)- மயிலாடுதுறை இளையபாரதி; பக்.112; ரூ.125; கவி ஓவியா பதிப்பகம், டி.எஃப்-2, வசந்த் பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட், 29/7,  மதுரை சாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011.

குடும்ப உறவுகள், உயிரினங்கள்,  தேசியம், நாடு, மொழி, இயற்கை ஆகிய பிரிவுகளில் இதிலுள்ள பாடல்கள் அமைந்துள்ளன. அப்பா, அம்மா,  சிரிக்கும் பாப்பா, சுட்டிப் பையன், சுட்டிக் குழந்தை என உறவுகளையும்;  மரமும் தோழனே, மரம் வளர்ப்போம் வாங்க, மழை நீர் சேகரிப்பு என்று இயற்கையையும்;  தேசியக்கொடி, நேரு மாமாவும் ரோஜாப்பூவும்,  எங்கள் இந்தியா என்று நாட்டையும்;  யானை, குருவி,  வாத்துக்கூட்டம்,  மியாவ்... மியாவ்,  சிட்டுக்குருவி, நாய்க்குட்டி,  பட்டாம்பூச்சி,  வாத்து என்று பறவை மற்றும் விளங்கினங்களையும் பாடல்கள் வழி போற்றி, பாப்பாக்கள் மனதில் பாசத்தைப் பதியன் போட்டிருக்கிறார்.

Story image

'பள்ளிக்கூடம் திறந்தாச்சு... வாங்க' நூலில் வழக்கமான மரபுத் தலைப்பிகளினூடே சில மாறுபட்ட பொருண்மைகளும் பாடல் பெற்றிருப்பது பாராட்டுக்குரிய செய்தி. குறிப்பாக ''மரமும் தோழனே, மரம் வளர்ப்போம் வாங்க, மழையே மழையே, என்ன செய்வது போன்ற பாடல்களில் காலத்துக்கு இசைவான கருத்துகள் மிளிர்ந்து சித்திக்க வைப்பது சிறப்பு'' என்று பெரியவர் இலக்கியவீதி இனியவன் தந்திருக்கும் நயமான அணிந்துரை நூலின் தன்மையை சிறப்பாக எடுத்துரைக்கிறது.

யானைக்கு வந்த நாட்டிய ஆசை - (கதைகள்) நத்தம் எஸ். சுரேஷ்பாபு; பக்.112; ரூ.100; லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18; தொடர்பு எண்: 98412 36965.

ஆலமரத்தின் அகம்பாவம், கோணலானும் கழுதையும், நரி ருசித்த ஆப்பம், குதிரை கற்றுக்கொடுத்த பாடம், தங்க மீன், சிங்கத்தை வென்ற நரி, குரங்கின் விஷமம், தவளை இளவரசி முதலிய 15 கதைகள் இதில் உள்ளன.

Story image

முல்லைவனக் காட்டில்  புத்தாண்டு  கொண்டாட்ட விழாவில்  குட்டி யானைக்கு இப்படியொரு  விபரீத ஆசை வரலாமா? வந்துவிட்டதே என்ன செய்வது?  தாய் எவ்வளவு சொல்லிப் பார்த்தும் குட்டியானை கேட்பதாக இல்லை. விளைவு...  தாயும் சேயுமாக ஒரு ஜவுளிக்கடைக்குச் சென்று, அங்கிருந்து வேறு ஒருவரிடம்  வசமாக சிக்கிக்கொள்கின்றன. பிறகு அங்கிருந்து அவ்விரண்டும் காட்டுக்கு எப்படித் தப்பித்து வருகின்றன என்பதுதான் முதல் கதை.

ஊரார் தன்னைப் புகழ்வதைக் கேட்டு ஆணவம் கொண்ட ஆலமரத்தின் கட்டுப்பாடுகளும், அகம்பாவம் கொண்ட ஆலமரத்துக்கு வந்த சோதனையும் உருக்கமானது. அகம்பாவம் கொண்ட மனதில் தீய எண்ணங்கள் குடிபுகுவதால் ஏற்படும் இன்னலை இக்கதை உணர்த்துகிறது.

கஞ்சன் கேசவனுக்குப் பசியின் கொடுமையைப் புரிய வைக்கிறது அவனது குதிரை. தங்க மீன் கொடுத்த ஒளஷத சங்கு உலகுக்கே நன்மை தருகிறது, கூடவே ஆபத்திலிருப்போருக்கு உதவினால், அந்த உதவி, சமயம் வரும்போது செய்தவரை வந்து சேர்ந்துவிடும் என்பதை கூறுகிறது தங்க மீன் கதை. இந்நூலிலுள்ள ஒவ்வொரு கதையைப் படிக்கும்போது நாம் அந்தந்த இடத்துக்கே போய்விடுகிறோம்...

தேன் சிட்டு -(சிறார் மாத இதழ் செப்-அக்-2022 )-பக்.32; ரூ.10; எம்.22, 6-ஆவது அவென்யூ, அழகாபுரி, ராமாபுரம், சென்னை-600 089. 9751549992.

சிறுவர்களுக்காகப் பெரியோர் கொண்டுவரும் இதழ்கள் தெரியும். ஆனால், சிறுவர்களே சிறுவர்களுக்கான இதழை நடத்தத் தொடங்கிவிட்டனர் என்பது வியப்புக்குரியதல்லவா...! கதை, கவிதை, புதிர், பாட்டு,  புத்தகம் அறிமுகம் எல்லாம் இந்த 'தேன் சிட்டு' இதழில் உள்ளன. இதில் வெளியான அனைத்து படைப்புகளுக்கும் ஐந்து வயது முதல் 12 வயது வரையிலான சிறார்களே அற்புதமாக ஓவியங்களைத் தீட்டி அசத்தியிருக்கிறார்கள்.

Story image

 
ஏழு மாதங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழின் ஆசிரியர் யார் தெரியுமா? சிறுவன் ரமணிதான். அட... அவர்தான் 'நீல தேவதை' நூலை எழுதியவர்! கதைகளை - பத்து வயது பிரியதர்ஷிணி, ஒன்பது வயது சுபவர்ஷிணி, கே.பி.ஸ்நிகிதாஸ்ரீ,   ஆறு வயது ஈஷா எழுதியிருக்கிறார்கள்.  சிறார் பாடல்களை எழுதியிருக்கும் ஐந்து வயது நேகா, ஐந்து வயது க.சாய் மகஸ்ரீ, எட்டு வயது பிரவந்திகா, ஒன்பது வயது ஆதிரா, 12 வயது ஜான் கெல்வின், ஐந்து வயது அனுக்கீர்த்தனா எல்லாம் ருசியோ ருசி. 

ரெட்டை சடை ரியா, பூனை,  வாத்தின் மனசு, ஆச்சி தாத்தாவுக்கான அன்புக் கடிதம், தங்கச்சிப் பாப்பா,  மூன்று குரங்குகள், பொங்கல், சாப்பாடு, சுதந்திரம், மரம், ரூபி பிரிட்ஜ், ஃபிட்னஸ் காடு என்று விதவிதமான படைப்புகளைத் தாங்கி வெளியாகியிருக்கிறது இந்த இதழ். மரம் பற்றி நச்சென்று ஒரு கவிதை எழுதி அசத்தியிருக்கும் 13 வயது கனிமலர்... எதிர்காலத்தில் கவி மலராக வருவார். அற்புதமாக வடிவமைப்பு, அற்புத வடித்தெடுப்பு... இந்தத் தேன் சிட்டை சிறுவர்கள் மிகவும் விரும்புவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.