எடுப்பு... தொடுப்பு... முடிப்பு!

வாலிபாலில் ஒரு துருவ நட்சத்திரமாக தமிழக அணிக்குக் கிடைத்துள்ளார் இளம் வீராங்கனை தமிழரசி. தமிழக அணியின் (14 வயதுக்குட்பட்டோர்) பிரிவில் விளையாடி வரும் தமிழரசி தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்கு கோப
எடுப்பு... தொடுப்பு... முடிப்பு!
Published on
Updated on
2 min read

வாலிபாலில் ஒரு துருவ நட்சத்திரமாக தமிழக அணிக்குக் கிடைத்துள்ளார் இளம் வீராங்கனை தமிழரசி. தமிழக அணியின் (14 வயதுக்குட்பட்டோர்) பிரிவில் விளையாடி வரும் தமிழரசி தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி நடத்திய தேசிய மினி வாலிபால் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் தமிழக அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றது தமிழரசிதான்.

கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருந்தவரை சந்தித்துப் பேசினோம். அவருடன் பேசியதிலிருந்து...

எந்த வயதில் வாலிபால் விளையாடத் துவங்கினீர்கள்?

இப்போது எனக்கு 13 வயதாகிறது. 6-ம் வகுப்பு படிக்கும்போதே வாலிபால் விளையாடத் துவங்கிவிட்டேன். வாலிபால் மீது எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. விரைவிலேயே பள்ளிகள் அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றியைக் குவிக்கத் துவங்கிவிட்டேன்.



தேசிய போட்டியில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

நான் இப்போது சென்னை மைலாப்பூர் லேடி சிவசாமி பள்ளியில் 9}ம் வகுப்பு படித்துவருகிறேன். பள்ளி அளவில் விளையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாடினேன். இதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றேன். தேசிய மினி வாலிபால் போட்டிக்கான தமிழக அணித் தேர்வில் பங்கேற்றுத் தேர்வானேன். முதல்முறையாக கேப்டன் வாய்ப்பும் கிடைத்தது.

போட்டி எப்படி இருந்தது?

லீக் ஆட்டங்களில் போட்டி எளிதாக இருந்தது. எதிரணிகளை எளிதில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினோம். அரை இறுதியிலும் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு வந்தோம். இறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த குஜராத் அணியைச் சந்தித்தோம். இருந்தபோதும் சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தேன். இதுதான் நான் கேப்டன் பொறுப்பேற்று பெற்ற மிகப்பெரிய வெற்றி.



நீங்கள் பங்கேற்ற முக்கிய போட்டிகளில் பெற்ற வெற்றிகள்?

ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில பீச் வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றோம். அதுமட்டுமல்லாமல் ஏராளமான மாநிலப் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். இருந்தபோதும் இப்போது பெற்ற தேசிய மினி வாலிபால் போட்டிதான் முக்கியமான வெற்றியாகும்.

விளையாட்டிற்கு உங்களின் வீட்டில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கின்றது?

தந்தை பிரகாஷ், தாய் மஞ்சுளா இருவருமே எனக்கு அதிக உற்சாகம் அளித்து வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் என்னால் வெற்றி பெறஇயலாது. அதனால் அவர்கள் எப்போதும் என்னுடைய உற்சாக டானிக்.

வேறு எந்த அணிகளுக்கு விளையாடி வருகிறீர்கள்?

ஜிகேஎம் வாலிபால் கிளப் அணிக்காகவும்,லேடி சிவசாமி பள்ளி அணிக்காகவும் விளையாடி வருகிறேன். குடியரசு தின விழா, பாரதியார் தின விளையாட்டு விழா போட்டிகளிலும் பங்கேற்று வருகிறேன்.

தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்வீர்கள்?

தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பள்ளி மைதானத்தில் இடைவிடாத பயிற்சி செய்கிறேன். நான் சார்ந்திருக்கும் விளையாட்டு பயிற்சி மட்டுமல்லாமல், ஓட்டப் பயிற்சியும் செய்கிறேன். சத்தான உணவு, முறையான பயிற்சி இந்த விளையாட்டிற்கு முக்கியம். வாலிபால் கோர்ட்டில் விளையாடும் நேரத்தில் உடல் திறன் அதிகம் தேவைப்படும். அதற்காகத்தான் இத்தகையப் பயிற்சிகள்.

வாலிபாலில் உங்கள் பொசிஷன் என்ன?

வாலிபாலில் என்னுடைய பொசிஷனைச் "செட்டர்' என்று சொல்வார்கள். அதாவது எதிரணி வீராங்கனைகள் பந்தை அடித்து அனுப்பும்போது அதைத் தடுத்து நிறுத்தி சக வீராங்கனைகளுக்கு எடுத்துக் கொடுப்பதை "செட்டர்' என்று சொல்வார்கள். பந்தை அழகாக நிறுத்தி அவர்களை தாக்குதல் ஆட்டம் ஆடச் செய்வதுதான் "செட்ட'ரின் முக்கியமான பணி. எதிரணியைச் சேர்ந்தவர்கள் அடிக்கும் பந்தை லாகவமாகக் கைகளில் தடுத்து அந்தரத்தில்  மெதுவாகச் சுழலவிட்டு, நம்முடைய அணி வீரர்களைக் கொண்டு தாக்குதலைத் தொடுத்து, எதிரணியின் ஆட்டத்தை முடிப்பதுதான் வாலிபாலின் முக்கியமான கட்டம். இந்த உத்தியை எனது பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தற்போது ஏ.எம்.ஏ. ஹபீப் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.

எதிர்காலத் திட்டம்?

தமிழக அணிக்காக அதிக அளவிலான தேசியப் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வெல்லவேண்டும். சீனியர்களுக்கான அணியில் பங்கேற்கவேண்டும். சீனியர் அணியில் பங்கேற்றதும் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவேண்டும்.



உங்களுடைய முன்னுதாரணமாக நீங்கள் நினைப்பது யாரை?

எனக்கு வெளிநாட்டு "ரோல்-மாடல்' என்று யாரும் இல்லை. ஆனால் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் வாலிபால் வீராங்கனை காயத்ரிதான் எனக்கு ரோல்மாடல். இவரும் ஜிகேஎம் வாலிபால் கிளப்பில் விளையாடி இந்திய அணிக்காக பங்கேற்றவர்தான். வாலிபால் தவிர வேறு விளையாட்டில் நாட்டமில்லை. படிப்பிலும் சராசரியைத் தாண்டி மதிப்பெண் பெற்று விடுவேன்.



கேப்டன் பணி சுமையானதா?

அப்படிச் சொல்லமுடியாது. சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி அவர்களை வழிநடத்தினால் நமது அணிக்கு வெற்றிதான். இந்த உத்தியைத் தெரிந்துகொண்டால் இனியெல்லாம் வெற்றிதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.