விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மலையேறும் மங்கைகள்!

நம்மில் பலருக்கு உயரம் என்றாலே பயம். பொருட்காட்சி அல்லது தீம்பார்க்கில் உள்ள ராட்டினத்தில் கூட ஏறப் பயப்படுவோம். சிலருக்குத் தலை சுற்றும் என்பார்கள். ஆனால் கோவையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:50 am

எம். ஆனந்த்

நம்மில் பலருக்கு உயரம் என்றாலே பயம். பொருட்காட்சி அல்லது தீம்பார்க்கில் உள்ள ராட்டினத்தில் கூட ஏறப் பயப்படுவோம். சிலருக்குத் தலை சுற்றும் என்பார்கள். ஆனால் கோவையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் பயத்தைப் போக்கி அதிக உயரமுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார் எல். ஃபிரெட்ரிக். அவர் மலையேற்றப் பயிற்சியாளர்.

கோவை சவுரிபாளையத்தில் "மவுண்டனீரிங் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி' என்ற அமைப்பைத் துவங்கி கடந்த 21 ஆண்டுகளாக மலையேறுவதில் ஆர்வம் மிகுந்தவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இதுவரை 600 பேரை இமயமலை ஏறச் செய்திருக்கிறார். அதில் பெரும்பாலானோர் பெண்கள். ""பெண்களுக்கு மனோவலிமையும், உடல் வலிமையும் ஆண்களைவிட அதிகம்.

ஆனால் அதை அவர்கள் உணருவதில்லை. அவற்றை வெளியே கொண்டுவந்து அவர்களைத் தன்னை தானே உணரச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் சொல்லப் போனால் மலையேற்றத்தில் என்னுடைய குருவே ஒரு பெண் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எனது குருவின் பெயர் சிவகாமி. தமிழ்நாட்டில் மலையேற்றத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண்ணும் அவர்தான்'' என்கிறார் பெருமிதத்துடன். கேள்விகளால் அவரைத் தொடர்ந்தோம்.

மலையேற்றம் என்பது போட்டியா? அல்லது விளையாட்டா?

மனோவலிமை, உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு வீர விளையாட்டு மலையேற்றம். இதில் எந்தவிதப் போட்டியும் இல்லை. ஆனால் எந்த ஒரு மனநிலையையும் உடையவர்களைத் தைரியசாலியாக்கி, அவருக்கே தெரியாத அவரின் திறமையை வெளிகொண்டுவந்து சாதனையாளராக்கும் ஒரு விளையாட்டு இது. இதில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது, வயது வித்தியாசம் கிடையாது. வெற்றி, தோல்வி கிடையாது.

ஒரு சிறிய மலையை ஏற எத்தனை நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும்?

ஆரம்ப நிலை என்பது இரண்டு நாள். மலையேற்றம் குறித்த ஓர் அறிமுக வகுப்பு எடுக்கப்படும். இதில் அவர்களின் பாதுகாப்பு, பொறுப்புகள், மலையேற்ற கருவிகள் குறித்து விவரிக்கப்படும். பாறையின் வகைகள் விளக்கப்படும். கை,கால்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்கள் செய்து காண்பிக்கப்படும். இதன் மூலம் அவர்களின் அச்சத்தைப் போக்கி மனோவலிமையை அதிகரித்து இரண்டாவது நாள் இறுதியில் அவர்களே பாறையில் ஏறுதல், இறங்குதலில் ஓரளவு பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கிவிடுவோம்.

மலையில் ஏறும்போது எந்த வகையான பாதுகாப்பு முறையை கையாள்கிறீர்கள்?

கயிறு, ஹார்னஸ், கேரபைனர் போன்ற கருவிகளை உபயோகிப்போம். முதலில் ஏறுபவர் கயிறைக் கட்டாமல் பின்னால் வருபவர்களுக்காக கயிறை எடுத்துக் கொண்டு மேலே ஏறி சென்று பாறையின் உச்சியில் கட்டிவிடுவார். மறுமுனை பாறை ஏறுபவர்களின் இடுப்பில் உள்ள ஹார்னஸ்-கேரபைனரில் இணைக்கப்படும். அவர்கள் மேலே பாதுகாப்பாக வந்துவிடுவார்கள்.



கயிறு கட்டாமல் மேலே செல்லும் முதல் நபருக்குப் பாதுகாப்பு எப்படி?

பெரும்பாலும் முதலில் ஏறுபவர் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களே. பயிற்சியாளர்கள் பாறையின் தன்மையை அறிந்தவர்கள். மேலும் பல மலைகளில் ஏறிய அனுபவம் உள்ளதால் மிகவும் எளிதாக ஏறிவிடுவார்கள். மலை ஏறுவதற்குத் தைரியம், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் இருந்தால் போதும் மனம் அலை பாயாமல் இருந்தால் எளிதாக ஏறிவிடலாம். என்ன அனுபவம் இருந்தாலும் குழுவாக மலையேறுவதால் விபத்து ஏற்பட வாய்ப்பேயில்லை. மேலும் அனைவரின் கவனமும் ஒருங்கிணைந்திருக்கும்.



குழுவாக மலையேற்றம் என்றால் எப்படி? மலை ஏறுவதில் உள்ள வகைகள் எத்தனை?

மலை ஏற்றம் என்பது ஒரு மலையில் ஒரு குறிப்பிட்ட வழியாக ஏறி உச்சியை அடைதல். ராக் கிளைம்பிங், சீக்வன்ஸ் கிளைம்பிங் என ஏறுவதற்கு 2வகைகள் உண்டு. 6முதல் 8வரை கொண்ட ஒரு குழுவில் மலையேறுபவர்களின் இடுப்பில் ஒரே கயிறைக் கொண்டு இணைப்பு ஏற்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக ஏறுவது குழு ஏற்றம் (சீக்குவன்ஸ் கிளைம்பிங்). குழுவாக ஏறும்போது அனைவரின் கவனமும், இலக்கும் ஒரே பாதையில் இருக்கும். ஒருவர் நிலை தடுமாறினாலும். முன்னும் பின்னும் இருப்பவர்கள் கயிற்றை பிடித்து அவரைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.  இறங்குவதில் ரேப்பலிங், ஷோல்டர் ரேப்பலிங், சைடு ரேப்பலிங், ஸ்டமக் ரேப்பலிங் என நான்கு வகை இறங்கும் முறைகளைக் கையாள்வோம்.

ரேப்பலிங் என்பது என்ன?

ரேப்பலிங் என்பது மேலிருந்து கீழே இறங்குவது. அதில் பாதுகாப்புக் கருவிகளை உபயோகித்து கீழிறங்குவது. ஷோல்டர் ரேப்பலிங் என்பது இறங்க உபயோகிக்கும் கயிறு இறங்குபவரின் தோள் மற்றும், காலில் சுழன்று அதன் மூலம் பிடிமானத்தை ஏற்படுத்தி இறங்குவது. சைடு ரேப்பலிங் என்பது இரண்டு கைகளையும் விரித்தவாறு கைகளில் கயிறு சுற்றப்பட்டு இருக்கும் விரல்கள் வழியாக செல்லும் கயிற்றின் பிடிமான இறுக்கத்தைத் தளர்த்தி தளர்த்தி மெதுவாக இறங்குதல்.

ஸ்டமக் ரேப்பலிங்கை எல்லாராலும் செய்ய முடியாது. காரணம் அது தலைகீழாகக் கீழே இறங்குவது.

அப்படி என்றால் இது ஆபத்து நிறைந்த விளையாட்டா?

இல்லை. எங்கள் அமைப்பு இந்த விளையாட்டை தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஒரு விபத்துகூட நிகழ்ந்ததில்லை.

உங்கள் மலையேற்றத்தில் நீங்கள் அடைந்த அதிகப்படியான உயரம்?

இமயமலையில் 21ஆயிரத்து 356அடி உயரம் வரை சென்று திரும்பியுள்ளேன். நான் மட்டுமல்ல... எனது மாணவர்கள் சுமார் 600}க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்றுள்ளேன். சென்ற வருடம் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 மாணவிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 17ஆயிரத்து 357அடி உயரமுள்ள "சித்திதார்' சிகரத்தை அடைந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.



வேறு எந்த மாதிரியான சாகசங்களில் மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளீர்கள்?

இந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு குழுவாக இமயமலைக்கு அழைத்துச் சென்று படிப்படியான பயிற்சிகள் அளித்து அதிலிருந்து திறமை மிக்கவர்களைத் தேர்வு செய்து ஒரு குழுவை உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்ட்டுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அதுவே  எனது லட்சியம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.