விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அர்ச்சனாவும் தங்கமும்!

மாற்றுத்திறனாளி அல்லது மாற்றுத்திறனாளர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலும் ஊனமுற்றோர் என்ற வார்த்தை இன்னும் புழக்கத்தில் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறைபாடுகள் இல்லாத சாமானிய மனிதர்களே

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:03 pm

எம். ஆனந்த்

மாற்றுத்திறனாளி அல்லது மாற்றுத்திறனாளர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலும் ஊனமுற்றோர் என்ற வார்த்தை இன்னும் புழக்கத்தில் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறைபாடுகள் இல்லாத சாமானிய மனிதர்களே கூட சிரமப்படும் சில வேலைகளை இவர்கள் மிக இயல்பாக செய்துவிடுவார்கள்.

வீட்டில் ஒரு சில நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டால் மெழுவர்த்தியைத் தேடி எடுக்கப் படாதபட்டு விளக்கு வந்தவுடன்தான் பெருமூச்சுவிடுகிறோம். என்னதான் பழக்கமாக இருந்தாலும் போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்துவரும் சாலையை மிக லாகவமாக கடப்பது. ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாலும் அதை தடவிப் பார்த்தே சரியான தொகையை சொல்வது போன்ற இவர்களின் தனித்திறமைகளை நாம் எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் நம்மால் செய்ய முடியுமா? கஷ்டம்தான்.

அண்மையில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவில் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். அப்போது பரிசு பெற வந்த அர்ச்சனா (26), ஆட்சியரிடம் நட்பு பாராட்டி தன்னைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ""தாய் இல்லாமல் நான் இல்லை...மாதா பிதா குரு தெய்வம்...மாதாவுக்குதான் முதல் இடம். நான் பெற்ற வெற்றிக்கு இவர் தான் காரணம்'' என இவர் அடுக்கியதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார் ஆட்சியர் எம்.கருணாகரன். அருகில் இருந்த இவரது தந்தை ஜெயராமனிடம் பேசினோம்.

அர்ச்சனா "டவுன் சின்ரோம்' என்ற குறைபாட்டால் பிறவிலேயே பாதிக்கப்பட்டிருக்கிறாள். இந்தக் குறைபாடு உடையவர்கள் பார்ப்பதற்கு மங்கோலியர்களைப் போல் இருப்பார்கள். கை, கால் வளர்ச்சி சற்று குறைவு. கால் பாதங்களின் உள்பகுதி நம்மைப் போன்று வளைவு இல்லை பட்டையாக இருக்கும். இவள் மாற்றுத்திறனுடைய குழந்தை என்பதை இன்று முழுமையாக நம்புகிறேன். இவளின் திறன் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டதுதான். இல்லாவிட்டால் கடல் கடந்து ஏதேன்ஸ் நகருக்குச் சென்று நம் நாட்டுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தரமுடியுமா?

எங்கே எப்போது நடந்தது இந்தப் போட்டி?

மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த ஜூலை மாதம் ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 7ஆயிரத்து 500 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 9}வது இடம் பிடித்தது. தமிழகத்திலிருந்து 9 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். 3தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலம் என 12 பதக்கங்களைப் பெற்றனர். இதில் ஒரு கி.மீ. சைக்கிளிங் பிரிவில் அர்ச்சனா ஒரு தங்கம் மற்றும் 500 மீ சைக்கிளிங் பிரிவில் 1 வெண்கலமும் வென்றார்.

எவ்வளவு காலமாக இதற்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டார் ?

சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் இல்லாமல் நாங்களே பயிற்சி கொடுத்தோம். 2009-ஆம் ஆண்டு கோவையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கச் செய்தோம். அப்போது 2 தங்கம் வென்றார். இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் 2010, பிப்ரவரி மாதம் நடந்த தேசிய அளவிலான போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றார். அதுவே இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வழிவகுத்துக் கொடுத்தது. பின்னர் சிறப்பு பயிற்சியாளர்கள் துர்கா, மானசி, சர்வதேசப் பயிற்சியாளர் அவதார் சிங் போன்றோரிடம் பயிற்சி பெற்றார்.

மாற்றுத்திறனாளிகள் வெளிநாடு சென்று போட்டிகளில் பங்கேற்க அரசு உதவி செய்கிறதா?

சிறப்பு ஒலிம்பிக் பாரத் மூலமாக எல்லா உதவியும் கிடைக்கிறது. விமானம், உணவு, தங்குமிடம் ஆகியவற்றவைகளைத் தவிர போட்டிகளில் பங்கேற்போர் செலவுக்கு 244 யூரோ பணம் கொடுத்தார்கள். உண்மையான திறமை எங்கிருந்தாலும் அதற்கு அங்கீகாரம் உண்டு.

"வேறு எந்த மாதிரியான திறமைகள் உங்களிடம் இருக்கிறது?' என்று கேட்டதற்கு

அர்ச்சனா பதில் அளிக்கிறார்: "நல்லா பாடுவேன்' எனக்கூறி "குறையோன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' பாடலை இனிமையாக பாடிக் காட்டினார். ""நடனமாடுவேன், யோகா செய்வேன், சினிமா பாடல்கள் சுமார் 30 பாடல்களுக்கு நல்லா கீபோர்டு வாசிப்பேன். சென்னையில் 2009-ல் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். மும்பையில் நடந்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் பன்றிக் காய்ச்சல் வந்திடுச்சு. அப்புறம்தான் சைக்கிளிங் போட்டிக்குப் பயிற்சி எடுத்தேன். இதுமட்டுமன்றி எனது தாய் அன்னபூர்ணா நடத்தும் பிரசாந்தி கல்வி அறக்கட்டளை. இதில் என்னை போலவே மாற்றுத்திறனாளிகள் 100}க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்குத் தன்னபிக்கை அளிக்கும் வகையில் பல விஷயங்களை கற்றுத் தருகிறேன். சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தருகிறேன்.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.