சிலந்திச் சங்கு

ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்கரையோரங்களில் மிக அதிகமாக வாழும் சங்கு வகைகளில் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்டதே சிலந்திச் சங்கு. இதன் சிறப்புகள் குறித்து ராம
Updated on
1 min read

ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்கரையோரங்களில் மிக அதிகமாக வாழும் சங்கு வகைகளில் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்டதே சிலந்திச் சங்கு. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது...

""சிலந்தியைப் போன்று இருப்பதால் சிலந்திச் சங்கு என்றும் ஐந்து விரல்களைப் போன்ற நீட்சிகளை உடையதாக இருப்பதால் ஐவிரல் சங்கு என்றும் மீனவர்களால் இது அழைக்கப்படுகிறது. "ஸ்டாம்பிடே' எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்திச் சங்குகளின் விலங்கியல் பெயர் "லேம்பிஸ்'. குறைந்தபட்சம் 18 செ.மீ.முதல் 29 செ.மீ.நீளம் வரை வளரும் உயிரினம். அதிக கனமுடையதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் இந்தச் சங்கின் பின்புறம் இயற்கையாகவே மிகவும் பளபளப்பாக

இருக்கும்.

ஆண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் கீழ் நோக்கி வளைந்தும், பெண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் மேல்நோக்கி வளைந்தும் காணப்படும். ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தில் காணப்படும் இவை மாங்குரோஸ் எனப்படும் சதுப்பு நில காடுகளிலும்,பவளப்பாறைகள் அதிகமாகவுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டலக் கடல்களில் அதிகமாக வாழ்ந்தாலும் தீவுப்பகுதிகளின் கரையோரங்களில் சுமார் 5 மீட்டர் ஆழத்திலும் கூட இவை வசிக்கின்றன. கடலில் உள்ள பாசி வகைகளில் ஒரு வகையான சிவப்பு நிற பாசிகளைத் தின்று உயிர் வாழும் இவ்வினங்கள் அதிக ஆழமான இடங்களில் வசிப்பதில்லை.

கடலின் மேல்பகுதியில் நீந்துவோர் கடலுக்கடியில் தெளிந்த இடத்தில் உற்றுப் பார்க்கிற போது இவை நகர்ந்து செல்வதை அடிக்கடி பார்க்க முடியும். இச்சங்கின் மேற்புற ஓடு வெள்ளை நிறத்திலும் பழுப்பு நிற புள்ளிகளை உடையதாகவும் இருக்கும். இச்சங்கிலுள்ள திடமான கால் பாதத்தின் உதவியால் கனமான அந்த ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் விட்டு  இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன. இதனுள்ளே இருக்கும் பூச்சி போன்ற உயிரினம் சுவை மிகுந்த இறைச்சியாகவும் மீனவ மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் இறைச்சியை எடுத்த பிறகு சுத்தப்படுத்தப்பட்டு மேலும் பளபளப்பாக்கி அலங்காரப் பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வினம் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால் வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. சிலந்திச் சங்குகள் அவை நகரும் இடத்தின் நிறத்திற்கேற்ப அதன் மேற்புற ஓட்டின் நிறத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் இவை எளிதில் கண்களுக்குத் தெரிவதில்லை. இந்த வசதியையே தன்னைப் பாதுகாக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com