ரோஜா மலரே! - 104: நடிக்க உதவிய வாழ்க்கை அனுபவங்கள்! - குமாரி சச்சு
இந்த "வீட்டுக்கு வீடு லூட்டி' தொடரில் எனது கதாபாத்திரம் பார்க்கும் மக்களுக்குப் பிடித்துப் போய்விட்டது.


இந்த "வீட்டுக்கு வீடு லூட்டி' தொடரில் எனது கதாபாத்திரம் பார்க்கும் மக்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. அதனால் நாங்கள் எல்லோரும் உற்சாகமாகவே வேலை செய்தோம். கே. பி. சார் படப்பிடிப்பில் தவறாமல் கலந்து கொண்டார். நம்மை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்ற தன்னம்பிக்கையுடன் நடித்தேன். நகைச்சுவைக்காகப் பேசும் வசனங்கள் அனைத்தையும் அவர் அனுமதித்தார். அது மட்டுமல்ல, கதை சீராகப் போய்க் கொண்டு இருக்கிறதா? என்று பார்க்கவும் செய்தார். சாணக்கியாவும் தனக்கு கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்தார்.
புகழ் பெற்ற மருத்துவர்கள், அவர்களுக்கு நேரம் கிடைப்பதே அரிது. அந்த மருத்துவர்கள் சரியாக மருத்துவமனைகளில் இருந்து பகல் சாப்பாட்டை வீட்டுக்கு போய் சாப்பிடுவார்கள். காரணம் என்ன தெரியுமா? இந்த "வீட்டுக்கு வீடு லூட்டி' தொடர் பகல் வேளைகளில் தான் ஒலிப்பரப்பானது. சாப்பாடு அவர்களுக்குப் பரிமாறப்பட்டாலும், அதை மூடி வைத்து விட்டு, இந்தத் தொடரை பார்த்த பின் தான் சாப்பிடுவார்களாம்.
நீதிபதிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தொடர் பிடித்துப் போய்விட்டது. நாங்கள் குறித்த நேரத்தில் வீட்டிற்கு வர முடியவில்லை என்றாலும், பதிவு செய்து வைத்து விடுவார்கள். நாங்கள் வீட்டிற்கு வந்து, ஓய்வு நேரத்தில் போட்டு பார்ப்போம் என்று கூறியவர்கள் அநேகர்.
இந்தத் தொடரில் நான் முன்பே சொன்னேன் இல்லையா டப்பிங் இல்லை என்று. அதனால் நாங்கள் எல்லாரும் நாடகம் போல் வசனத்தை மனப்பாடம் செய்ய வேண்டும். எங்கள் எல்லோருக்கும் ஒரு பிரச்னை. யாராவது, ஏதாவது, சொந்தமாகப் பேசினால் சமாளித்துப் பேசவேண்டும். கட் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஒயர்லெஸ் மைக் ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்தத் தொடர் சுமார் 700 பாகங்கள் வெளியானது. அந்தச் சமயத்தில் நான் சினிமாவிலும் நடித்துக் கொண்டிருத்தேன். "வீட்டுக்கு வீடு லூட்டி' டிவி சீரியல் புகழ் பெற்றதாலோ என்னவோ, எனக்கு அந்தக் கதாபாத்திரத்தைத் தழுவியே வாய்ப்புகள் வந்தன.

எல்லோரும் மடிசார் மாமி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்தார்கள். நானும் சலிப்பு தட்டாத வகையில் இந்த மடிசார் மாமியாக எப்படி எல்லாம் நடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் நடித்தேன். அப்படி நடிக்கக் கிடைத்த வாய்ப்பு தான் "ஆனந்த பவன்' தொடர் . இதில் நான் ஏற்றுக் கொண்ட வேடம் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் பெரிய ஹோட்டல் முதலாளிகள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசி வேடம். இந்த "'ஆனந்த பவன்'' தொடரை விகடன் நிறுவனம் தயாரித்தது. திருமுருகன் இயக்கினார்.
தொடரில் அந்த மாதிரி ஒரு ஹோட்டல் முதலாளி மனைவி வேடம் எனக்கு. பெரிய குடும்பத்தில் உள்ளது போன்று, எனக்கும் என் கணவருக்கும் மூன்று பெண்கள், ஒரு மகன். பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை. என் கணவராக நடித்தது டில்லி குமார். அவருக்குச் சில சமயம் கோபம் வந்து விடும். பெண்கள் வாழ வேண்டுமே என்று எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போவேன். அவர்கள் பிரச்னையைத் தீர்ப்பது மட்டுமல்ல, அவர்கள் எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்கவும் முயல்வேன்.
பாசப் போராட்டங்கள், குடும்ப நெருக்கடி, இப்படிப் பலதரப்பட்ட உணர்ச்சிகளின் கலவையாக இருப்பது போன்ற கதாபாத்திரம் எனக்கும் பிடித்துப் போனது. இதில் ஒரு ரகசியம் இருந்தது. எங்கு நான் சென்றாலும், வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்டார்கள்.
அந்தக் கேள்வி என்ன தெரியுமா? "எப்படி மடிசார் கட்டிக்கொண்டு நடிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இந்தத் தொடருக்காக என்னுடைய குரலையும் மாற்றிக் கொண்டு பேசினேன். நிஜ வாழ்க்கையில் எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் அதிகம். அதனால் அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அதிகம் உணர்ந்தவள் நான். வாழ்க்கையில் பிரச்னைகள் எப்படி வரும், அதை எப்படிச் சமாளிக்கலாம் என்று தெரிந்ததால், நன்றாக நடித்தேன் என்று தான் எல்லோரும் சொன்னார்கள். வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவம் என் நடிப்பிற்கு கைக் கொடுத்தது என்று சொல்லலாம்.
இந்தத் தொடரையடுத்து டிவி தொடர்களுக்கு விடுமுறை கொடுத்தேன். அந்த விடுமுறையில், சினிமாவில் நடிக்க வேடங்கள் வந்தன. அந்தக் கதாபாத்திரங்களை ஒப்புக்கொண்டு நடித்தேன் .இந்த டிவி தொடர்கள் நடிப்பதனால் சிரமம் ஏற்படும். எப்படி என்றால், நிறைய காட்சிகளை அவர்கள் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால்தான், அவர்களுக்கு லாபம். மெகா தொடர்கள் என்றால், இன்னும் வேகமாக எடுக்க வேண்டும். அதனால் நான் சோர்வயடைய வாய்ப்புண்டு. அதனால் சினிமாவில் அல்லது வேறு ஒரு டிவி தொடரில் நான் தொடர்ந்து நடிக்க முடியாமல் போக நேரிடும். இது மட்டுமல்லாமல் டப்பிங் செய்ய, என் குரல் தவிர, யாருமே பேச முடியாது. தினமும் ஒளிப்பரப்பாகும் மெகா சீரியல் என்பதால், அவர்கள் அடிக்கடி கூப்பிடுவார்கள், வர முடியாது என்று சொல்ல முடியாது. அதனால், நிறைய மெகா தொடர்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
தொடர்ந்து மெகா தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் தயாரிப்பாளர்கள் இயக்குநர் சுந்தர். சி மற்றும் நடிகை குஷ்பூ. அந்தத் தொடரின் பெயர் "நந்தினி' . இயக்குநர் சுந்தர்.சி இயக்கிய சில திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் தயாரித்த டிவி தொடரில் நான் நடித்ததில்லை. அதனால் சந்தோஷமாக நடிக்க சம்மதித்தேன். அதுவும் தமிழ் மொழி மட்டுமல்ல, நான்கு மொழிகளிலும் நான் நடிக்கவேண்டும் என்றார்கள். அவர்கள் விருப்பப்படி எல்லா மொழிகளிலும் நடித்தேன். அவர்கள் நேரடியாக எடுத்தது கன்னடம் மற்றும் தமிழ் தான். அதனால் படப்பிடிப்பில் கன்னடமும் பேச வேண்டும்.
தொடரை இயக்கும் இயக்குநர் ராஜ்கபூர் என்னிடம் வந்து, உங்களுடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பெருமையாக நினைக்கிறேன் என்று சொன்னார். அவரிடம் என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன் நீங்கள் கதாநாயனுக்கு அத்தை பாத்திரம் ஏற்று நடிக்கப் போகிறீர்கள் என்றும், நடிகர் விஜயகுமாருக்கு சகோதரி மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு உண்டு என்று சொன்னார். அந்தக் கதாபாத்திரத்தின் சிறப்பைப் பற்றிக் கேட்டவுடன் எனக்குச் சற்றே அதிர்ச்சி!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...