ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விழிப்புணர்வுக்காக வீதிநாடகங்கள்...

இந்தியக் கலை வரலாற்றில் வீதி நாடகக் கலை என்றும் முக்கிய இடமுண்டு.

News image
Updated On :21 மார்ச் 2026, 10:31 pm

இந்தியக் கலை வரலாற்றில் வீதி நாடகக் கலை என்றும் முக்கிய இடமுண்டு.

19- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 -ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமூக, அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்காக சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீதி நாடகங்களின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அடிமைத்தனத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டினர்.

'இந்திய மக்கள் நாடகக் கழகம்', 'ஜனம்' போன்ற அமைப்புகள் வீதி நாடகக் கலையின் தொடக்கத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன. வட இந்தியாவில் 'பாத் நாட்டியா', 'நெளடங்கி', 'ஜத்ரா' உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்பட்ட இந்தக் கலை தமிழ்நாட்டில் தெருக்கூத்து வடிவில் இசை, நடனம், பாடல், நாடகம் ஆகியவற்றின் கலவையாக நிகழ்த்தப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர், பெண் கல்வி, வயது வந்தோர் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண் சிசுக் கொலை தடுப்பு என மக்களிடையே விழிப்புணர்வு, பொழுதுபோக்குக்காக வீதி நாடகங்கள் இப்போதும் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த வீதி நாடகக் கலையை அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்து அதன் மூலம் மாணவர்களுக்கு சமூகத்தின் மீதான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுடன் மாநில அளவிலான பரிசுகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் டி.சசிகலா.

அவரிடம் பேசியபோது:

'பெரம்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு பயின்றபோது எனது பள்ளி ஆண்டு விழாக்களின்போது நடைபெற்ற நாடகங்கள், நாடக ஒத்திகைகள், அதுசார்ந்த இசை நிகழ்ச்சிகளைப் பார்த்து அந்தக் கலை மீது ஆர்வம் கொண்டேன். அந்தக் கலையின் மீதான ஈர்ப்பு குறையவில்லை. கரூரில் ஆசிரியர் பயிற்சி படிக்கும்போது, முதல்முறையாக நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, எனது கனவை நிறைவேற்றிக் கொண்டேன்.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பசும்பலூரில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றேன். ஓராண்டு பணிக்குப் பின்னர், கோவை தேவராயபுரம் பள்ளியில் பணிமாறுதல் பெற்றேன். தற்போது கல்வீரம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். வெறும் கற்பித்தல் மட்டுமல்லாது மாணவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது.

முன்னர் பணியாற்றிய பள்ளியில் இடைநிற்றல், குழந்தைத் திருமணம் போன்றவற்றைத் தடுத்து, குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றினேன். பெற்றோரின் மறைவால் ஆறாம் வகுப்பில் இடைநின்று, திருமணத்துக்கு தயார்படுத்தப்பட்டு வந்த ஒரு மாணவியைக் காப்பாற்றி பள்ளிக் கல்வியைத் தொடரச் செய்தபோது, இதுபோன்று சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

பள்ளி விழாக்களின்போது கவிதை, பாடல், நடனத்துக்கு மாணவர்களைத் தயார்படுத்தி வந்தேன். 2022- ஆம் ஆண்டில் மாணவர்கள் தங்களது கலைத் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தது.

பள்ளிக் கல்வித் துறையின் கலைத் திருவிழாக்கள் தொடங்கியபோது பள்ளிகளில் கலைப் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, நான் பணியாற்றிய கல்வீரம்பாளையம் பள்ளிக்கு சந்திரமதி என்ற நாடகக் கலைஞர் நியமிக்கப்பட்டார். அவருடன் இணைந்து மாணவர்களுக்கு வீதி நாடகப் பயிற்சியை அளித்தோம்.

விழாவின் முதலாம் ஆண்டில் ஜாதிய பாகுபாடு, பெண்கள் மீதான வன்கொடுமை, துப்புறவுத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு வீதி நாடகத்தை நானே எழுதி, பாடல்களையும் இயற்றினேன். அந்தக் கதைக்கு சந்திரமதி மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சியை அளித்தார். அப்போது நடிப்புக் கலையைக் கற்றேன். கலைத் திருவிழாவில் வட்டம், மாவட்ட அளவில் தேர்வு பெற்ற எங்களது குழு, மாநிலத் திருவிழாவிலும் முதலிடம் பிடித்தது.

2023-இல் பயிற்சிக் கலைஞர்கள் நியமிக்கப்படாத நிலையிலும், சந்திரமதியிடம் வழிகாட்டுதலைப் பெற்று மாணவர்களுக்கு நானே பயிற்சி அளித்தேன். இரண்டாம் ஆண்டில் பெண் கல்வி, குழந்தைத் திருமணம், முதியோர் பாதுகாப்பு, கலப்படம் போன்றவற்றை மையக் கருத்தாகக் கொண்டு இயற்றிய நாடகம் மீண்டும் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. 2024-இல் இரண்டாமிடமும், 2025-இல் மீண்டும் முதலிடமும் என வீதி நாடகத்தில் எங்கள் பள்ளி அணி மாநில அளவில் பிரபலமடைந்திருக்கிறது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பேச்சுகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எனவே, ரசாயன உரத்தால் தீமைகள், இயற்கை வேளாண்மை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள், மண்ணையும் மக்களையும் காப்பாற்றுதல், குழந்தைகள் உடல் ஊனத்துடன் பிறப்பதைத் தடுத்தல் என்பதையெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வீதி நாடகம் மூலம் வெளிப்படுத்தினேன்.

சோமாலியாவில் அண்மையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வன விலங்குகளை வேட்டையாடி பசியைத் தீர்க்கும் திட்டத்தை அரசு கொண்டு வரத் திட்டமிடுவதை அறிந்தபோது, வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரத்தை வேருடன் சாய்த்து விட்டோம் என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதினேன். எங்களது நாடகங்களில் கதையை உணர்வுபூர்வமாக முடித்துவிட்டு, அதன் விளைவை பாடலாக எழுதிப் பாடும் பாணி பெரிய அளவில் வரவேற்பைப் பெறுகிறது.

படிக்கும் நேரத்தில் நடிக்கச் செல்வதா? என்ற எண்ணம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் முதலில் இருந்தது. தற்போது எங்கள் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். மாநில அளவிலான பரிசுகளைப் பெற்று பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன், சமூகம் குறித்து விழிப்புணர்வை முழுமையாகப் பெற்றுள்ளனர். கல்வி அறிவுடன் தான் சார்ந்த சமூகத்தில் எது சரியாக இல்லை, எதைச் சரி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டு பொறுப்பான குடிமகன்களாக எனது மாணவர்கள் உருவாகி வருகின்றனர்' என்கிறார் சசிகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.