திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன்

உலக்கிய உலகில் சிங்கம்போல் உலவக் கூடிய அபூர்வ இனத்தைச் சேர்ந்தவர் கவிஞர் முடியரசன். எந்தச் சபலத்துக்கும் முடி சாய்க்காத ஆண்மையாளர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதாபேதங்களைக் கற்பிக
திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன்

உலக்கிய உலகில் சிங்கம்போல் உலவக் கூடிய அபூர்வ இனத்தைச் சேர்ந்தவர் கவிஞர் முடியரசன். எந்தச் சபலத்துக்கும் முடி சாய்க்காத ஆண்மையாளர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதாபேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்கவழக்கங்களைச் சாடியவர். மரபு வழுவாமல், அதே சமயத்தில் புதுமை பூத்த இனிய கவிதைகளைச் சொரிந்து வந்த தமிழ்ப் பொழில் மறைந்துவிட்டது'' என கவிஞர் முடியரசனின் மறைவையொட்டி "தினமணி' நாளிதழ் புகழ் அஞ்சலி செலுத்தியிருந்தது.

அன்றைய மதுரை மாவட்டம், இன்றைய தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் சுப்பராயலு-சீதாலட்சுமி தம்பதிக்கு 1920-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் துரைராசு. ஐந்து வயதானவுடன் பெரியகுளத்தில் தெற்கு அக்கிரகாரத்தில் உள்ள ஓட்டுப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்பு, "வாகம்புளி' என்ற இடத்தில் கூரைப்பள்ளியில் பயின்றார்.

அவரது பெற்றோர் பிழைப்பின் பொருட்டு செட்டி நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். வேந்தன்பட்டியில் திண்ணைப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அங்கு வேங்கடராமையா என்ற ஆசிரியரிடம் எழுதும் பயிற்சி பெற்றார். எண் சுவடியையும், நிகண்டு நூல்களையும் கற்றுக்கொண்டார்.

பின்னர், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் சேர்ந்து ஐந்து, ஆறாம் வகுப்புகள் படித்தார். ஆங்கிலம், கணக்கு முதலிய பாடங்களையும் நளவெண்பா, தேவாரம் முதலிய பண்டைய பக்தி இலக்கியங்களையும், ஆறுமுகநாவலரின் இலக்கண வினா}விடைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஆறாம் வகுப்புத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, ஆறுமுக நாவலரின் நன்னூல் காண்டிகை உரையைப் பரிசாகப் பெற்றார்.

பிரவேச பண்டித வகுப்பில் சேர்ந்து பயின்றபோது, பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார், இரா.இராகவையங்கார், விபுலானந்த அடிகள், தமிழ்வேள் உமா மகேசுவரனார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கேட்கும் நல்வாய்ப்பு முடியரசனுக்குக் கிட்டியது. அவரது உள்ளத்தில் மொழிப்பற்றும், இனப்பற்றும் கிளர்ந்தெழுவதற்கு இக்"கேள்வி'ச் செல்வம் உறுதுணையாக விளங்கியது. பிரவேச பண்டித வகுப்புத் தேர்வில் செய்யுள் இயற்றலுக்குத் தனித் தேர்வுத் தாள் உண்டு. அதன் பொருட்டுப் பாடல் புனையும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியிலும் வகுப்புத் தேர்விலும் முடியரசன் பாடலுக்கே முதலிடம் கிடைத்தது.

பிரவேச பண்டித தேர்விலும், சென்னை பல்கலைக்கழக வித்துவான் புகுமுக வகுப்புத் தேர்விலும் வெற்றிபெற்றார். கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் முன்னிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரியில், "மாணவர் நன்னெறிக் கழகம்' சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் "புலவர் வீரம்' என்னும் தலைப்பில் முடியரசன் பேசினார். அப்பேச்சைக் கேட்ட கல்லூரி முதல்வர் பி.ரா.மீனாட்சிசுந்தரனார் ஊக்கமூட்டி "வீரப்புலவர்' என்ற விருது அளித்துப் பாராட்டினார். அதன் பின்னர், "வீரப்புலவர் முடியரசன்' என்றே அழைக்கப்பட்டார்.

கல்லூரியில் படிக்கும்போது, திருப்பத்தூரில் அறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டுச் சொக்கிப்போனார். மறுநாளே அவர், "துரைராசு' என்ற தமது பெயரை "முடியரசன்' என மாற்றிக்கொண்டார். அப்புனைபெயரே அவருக்கு இலக்கிய உலகில் நிலைத்துவிட்டது. அதே திருப்பத்தூரில் பாவேந்தர் பாரதிதாசனின் உரையைக் கேட்டார் முடியரசன். அப்போது ""பாரதிதாசன் பேச்சைக் கேட்ட பிறகு, நாடு, மொழி, இனம் பற்றிப் பாடவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது'' என்று கூறியுள்ளார்.

குடியரசு, விடுதலை, திராவிட நாடு முதலிய இதழ்களைப் படித்ததன் மூலம் பகுத்தறிவுக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டார். "திராவிட நாடு' இதழில் வெளிவந்த அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியங்களால் கவரப்பட்டார். தமது 21-ஆம் வயதில் "சாதி என்பது நமக்கு ஏனோ?' என்ற கவிதை, "திராவிட நாடு' இதழில் வெளிவந்தது.÷வித்துவான் தேர்வில் தேர்ச்சியடைந்த பின்னர், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது, முடியரசன் வகுப்பறையில் நுழைந்து, தம் இருக்கையை அடைந்ததும் எழுந்து நிற்கும் மாணவர்கள் அனைவரும் "வெல்க தமிழ்' என்று ஒரே குரலில் முழங்கச் செய்வார். அதன் பின்னர்தான் அனைவரும் அமர்வார்கள்.

போர்வாள், அழகு, முருகு, பொன்னி முதலிய இதழ்களில் கவிதைகளும், கட்டுரைகளும், கதைகளும் எழுதினார். 1949-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி கலைச்செல்வி என்னும் அம்மையாரை ஜாதி மறுப்புத் திருமணம் (கலப்பு மணம்) செய்துகொண்டார். காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் 1949 முதல் 1978 வரை தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியற் புலத்தில் முடியரசன் ஓராண்டு காலம் பணிபுரிந்தபோது, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி வாழ்வினைக் கருவாகக்கொண்டு ஒரு காப்பிய நாடகத்தை எழுதி முடித்தார். போர் மறுப்பை மையமாகக்கொண்ட அந்நூல், இன்றுவரை அச்சு வடிவம் பெறவில்லை என்பது வருந்தத்தக்கச் செய்தியாகும்.

முடியரசனின் கவிதைகள், காவியப்பாவை, கவியரங்கில் முடியரசன், பாடுங்குயில், நெஞ்சு பொறுக்கவில்லையே, மனிதனைத் தேடுகிறேன், தமிழ் முழக்கம், நெஞ்சிற் பூத்தவை, ஞாயிறும் திங்களும், வள்ளுவர் கோட்டம், புதியதொரு விதி செய்வோம், தாய்மொழி காப்போம், மனிதரைக் கண்டு கொண்டேன் ஆகியவை அவரது கவிதை நூல்கள். பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் - என்பவை கவிஞரின் காப்பியங்கள். அன்புள்ள பாண்டியனுக்கு, கவியரசன் முடியரசன் முதலிய கடித இலக்கியங்களையும், எக்கோவின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பையும்,, எப்படி வளரும் தமிழ்? என்ற கட்டுரை நூலையும், சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் பற்றிய வரலாற்று நூலையும் படைத்து அளித்துள்ளார்.

அறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு, ""திராவிட நாட்டின் வானம்பாடி - கவிஞர் முடியரசனார்'' என்று பாராட்டியுள்ளார்.

தமிழக அரசு முடியரசனுக்கு நல்லாசிரியர் விருதும், வெள்ளிப் பதக்கமும் வழங்கிச் சிறப்பித்துள்ளது. முடியரசனின் கவிதைகள், வீரகாவியம் என்ற இரு நூல்கள் தமிழக அரசின் பரிசைப் பெற்றன. தவத்திரு குன்றக்குடி அடிகளார் கவிஞர் முடியரசனுக்கு, "கவியரசு', "சங்கப்புலவர்' முதலிய பட்டங்களை அளித்துப் பாராட்டியுள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாவில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம், பொற்கிழி வழங்கியும், பொன்னாடை போர்த்தியும், பெருமையும் புகழும் சேர்த்துள்ளார்.

தமிழகப் புலவர் குழு, "தமிழ்ச் சான்றோர் விருது' வழங்கிப் பெருமை சேர்த்தது. தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு "பாவேந்தர்' விருதும், "கலைமாமணி' விருதும் பொற்பதக்கமும் வழங்கியது.

""பாட்டு என்றால் உணர்ச்சி துள்ள வேண்டும் - கற்பனை செறிய வேண்டும் - நயம் கனிய வேண்டும் - உவமை கலக்க வேண்டும் - எதுகை மோனை இணைய வேண்டும் - நோக்கு இருக்க வேண்டும் - இங்ஙனம் பாட்டுக்கு ஓர் அளவுகோலை உலக இலக்கியவாதிகள் கொண்டுள்ளனர். அந்த அளவுகோலின்படி கவிஞர் முடியரசனின் கவிதைகள் தமிழுக்குச் சிறப்புச் செய்கின்றன'' என அறிஞர் வ.சுப.மாணிக்கம் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

""20-ஆம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவிஞர் முடியரசன்'' என்று முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பாராட்டி இருக்கிறார்.

தமிழக அரசு கவிஞர் முடியரசன் நூல்களை 2000-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது. கவிஞர் முடியரசனின் பாடல்கள் சாகித்ய அகாதெமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்திய தேசியப் புத்தகக் குழுவினரால் அவரது கவிதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அச்சமின்றிப் பாடிய அப்பகுத்தறிவுக் குயில், 1998-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மண்ணுலக வாழ்வை விடுத்து விண்ணுலகுக்குப் பறந்து மறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com