இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

குறள் வைப்புமுறை பற்றிய ஒரு குறிப்பு

திருக்குறளில் ஓரதிகாரத்திற்குப் பத்துக் குறள்கள் என வகுத்துக் கொண்டு, திருவள்ளுவர் தம் நூலை யாத்துள்ளார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2013, 5:45 am IST

திருக்குறளில் ஓரதிகாரத்திற்குப் பத்துக் குறள்கள் என வகுத்துக் கொண்டு, திருவள்ளுவர் தம் நூலை யாத்துள்ளார். அப் பத்துக் குறள்களை வரிசைப்படுத்தியது வள்ளுவரா? உரையாளரா? பிறரா? என்ற கேள்விக்கு விடைதேட வேண்டியிருக்கிறது. உரையாளர்கள் சிலர் மிகக் குறைவாக, அதிகாரத்திற்குள்ளேயே வரிசையை மாற்றியுள்ளனர்.

ஒப்புரவறிதலில் ஊருணி, பயன்மரம், மருந்தாகித் தப்பா மரம் என மூன்று உவமைகளின் வைப்புமுறை மாற்ற முடியாதபடி அமைந்துளது எனலாம். ஊருணி நீர் எளிதாக உதவுகிறது; பழுத்த மரம் தன்னைச் சிறிது வருத்துவார்க்கும் உதவும் இயல்பினது; மருந்து மரம் முழுவதும் தன்னையே தருவது. இவ்வாறு வரிசைப்படுத்தியமை பொருத்தமுடையதாகிறது.

1330 குறள்களில், மூன்று குறள்கள் நாம் நினைத்தாலும் மாற்ற முடியாதபடி உள்ளன. காமத்துப் பாலில் "உறுப்பு நலனழிதல்' என்ற அதிகாரத்தில், இறுதியில் உள்ள மூன்று குறள்கள்தான் அவை.

""முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்'' (1238)

இறுகத் தழுவிய கைகளை, தலைவிக்கு நோகுமோ என்று சிறிது தளர்த்தினேனாக, அவ்வளவில் இப் பசும்பொன் வளையணிந்த இளையாளது நெற்றி பசலையுற்றது என்று தலைவன் கூறுகிறான்.

""முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்'' (1239)

அவ்வாறு யான் தழுவிய கைகளைத் தளர்த்தினேனாக, எங்கள் முயக்கிடைச் சிறு இடைவெளி தோன்ற, அதனூடே குளிர்ந்த காற்று உள்நுழைந்தது. அவ்வளவில், இவ் இளையாளது பெரிதாய குளிர்ச்சிமிக்க கண்கள் பசலையுற்றன. மேலேயுள்ள குறளுடன் ஓரளவு தொடர்புடையதாய், இக்குறள் காணப்படுகிறது. "தழுவிய கைகளைத் தளர்த்தவே, தண்வளி புக்கது' என்பது தொடர்புடையதாகிறது.

""கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு'' (1240)

பசலை உறுவதில், ஒள்ளிய நெற்றி தனக்கு முந்திக் கொண்டதைப் பார்த்து, கண்ணிலேற்பட்ட பசலை நிறம் துன்பமுற்றது. மூன்றாம் குறளின் பொருள், அதன் மேலேயுள்ள இரண்டு குறள்களின் வழிப்பட்டதாகும். வரிசையை மாற்ற முடியாது; மாற்றின் பொருளின்றிப் போகும். ஆக, "குறள்களின் வைப்புமுறை, திருவள்ளுவரே அமைத்ததுதானோ?' என்ற ஐயம் எழுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.