தமிழ் ஆராய்ச்சியின் தேவையும் பயனும்!

ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வி அடுத்துவரும் ஏழு பிறவிக்கும் தொடர்ந்து வரும் என்கிறபோது
தமிழ் ஆராய்ச்சியின் தேவையும் பயனும்!

ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வி அடுத்துவரும் ஏழு பிறவிக்கும் தொடர்ந்து வரும் என்கிறபோது அத்தகைய கல்வியை முனைந்து முனைவர் பட்டம் வரைக் கற்பதில் என்ன தவறு இருக்கிறது?

சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான படைப்பாளிகளின் வளம்மிக்கச் சிந்தனைகளைத் தமது ஆராய்ச்சி அறிவினால் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் வெளிக்கொண்டு வருபவர்கள் திறன்மிக்க ஆய்வாளர்களே ஆவர். ஆரம்ப காலத்தில் செய்யுட்களுக்கு உணர வகுத்தவர்கள் தமது நுண்மாண் நுழைபுலத்தால் சிறந்த ஆய்வுரைகளை இலக்கியங்களுக்கு வழங்கிச் சென்றனர்.

சங்க இலக்கியங்கள் முதல் பாரதியார் கவிதைகள் வரை இன்று உரைகள் தோன்றிவிட்டன. உரைகளால் இலக்கியங்கள் சிறப்படைந்த அளவிற்கு ஆய்வுகளால் சிறப்படைந்திருக்கிறதா எனில், பதில் கூற சற்றுத் தயக்கமாகவே இருக்கிறது. மேலை இலக்கிய ஆய்வு நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் கொண்டு தமிழ் இலக்கியங்களை ஆராய்கிறபோது, சில நேரங்களில் பொருத்தமில்லாத முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆய்வுகளில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வுண்டு. ஆனால், ஆய்வு செய்யும் காலத்தில் ஆய்வாளர்களுக்கு எழும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகள் என்னவோ தண்டனையாகவே அமைகிறது. பல்வேறு காரணங்களால் ஆய்வாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது, கட்டணம், ஆய்வு செய்த காலம் உள்ளிட்ட விரையங்களோடு நிரந்தர மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.

ஆய்வியல் அறிமுகம், ஆய்வியல் முறைகள், ஆராய்ச்சி முறையியல், ஆராய்ச்சி நெறிமுறைகள், இலக்கிய ஆராய்ச்சி, கோட்பாடுகள், ஆய்வாளர்களின் பண்புகள், ஆய்வேட்டின் தன்மைகள், அணுகுமுறைகள் குறித்து மு.வ., தமிழண்ணல், ஈ.சா.விஸ்வநாதன், பொற்கோ, வே.சிதம்பரநாதன், சு.சக்திவேல், மு.பொன்னுசாமி, டாக்டர் எஸ்.என். கணேசன் ஆகியோர் சிறந்த நூல்களைப் படைத்திருக்கிறார்கள். இவர்களுடைய நூல்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழாய்வை மேற்கொள்ளும் அனைவராலும் விரும்பிப் படித்துப் பாதுகாக்கப்பட்டன. ஆய்வாளருக்குத் தாம் மேற்கொள்ளும் ஆய்வில் தடுமாற்றமும் சிக்கல்களும் ஏற்படும் போதெல்லாம் இந்நூல்கள் ஊன்றுகோலாய் இருந்து உதவின. ஆனால், அவை இன்றைய ஆய்வாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத நிலை இருந்து வருகிறது.

பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஆய்வாளராகச் சேரும் ஒரு மாணவருக்குப் பட்டம் பெறுவதுதான் நோக்கமே தவிர நெறியாளரையோ, தான் பயிலும் நிறுவனத்தையோ பாதிப்படையச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எள்ளளவும் இருக்க வாய்ப்பில்லை. முதுகலை முடித்தவுடன் எம்.ஃபில் (இளம் முனைவர்) முடிக்காமல் நேரடியாக முனைவர் பட்டத்திற்குச் சேரும் மாணவர்கள் "ஆய்வு நெறிமுறைகள்' குறித்தத் தேர்வுகளை எழுத வேண்டும்.

முனைவர் பட்ட மாணவராகச் சேரும் ஆய்வாளர்கள் கால் நூற்றாண்டு வயதைத் தொடுபவராகவோ அல்லது கடந்தவராகவோ இருக்கிறார்கள். இந்த வயதில் ஆண் - பெண் இருபாலருக்கும் குடும்பம் சார்ந்த நெருக்கடிகளும், சமூகம் சார்ந்த தேவைகளும் நிறைய உண்டு. பொருளாதாரம், பணிச்சுமை, குடும்பம், சமூகம் எனப் பல்வேறு சூழல்களுக்கிடையே ஆய்வினை மேற்கொள்ளும் ஒரு மாணவருக்கு இயல்பாகவே மன அழுத்தம் இருக்க வாய்ப்பு உண்டு. எல்லாவித துன்பத்தையும் இந்த முனைவர் பட்டம் பெறுவதற்காகத்தான் அனுபவிக்கிறோம் என்ற எண்ணம் பிறக்கும். தனக்காக, தனது வளர்ச்சிக்காக, தனது பதவி உயர்வுக்காக, தனது சமூக மரியாதைக்காக மட்டுமே ஒருவர் ஆய்வினை மேற்கொள்ளும் நிலை இருக்கிறதே தவிர, தாம் வாழும் சமூகத்திற்குத் தனது ஆய்வு எந்த அளவிற்குப் பயன்பாடுடையது என்பது கேள்விக் குறியாகவே அமைகிறது.

பட்டத்திற்காக ஆய்வு என்கிற நிலை மாறி ஆய்விற்காகப் பட்டம் என்கிற நிலை உருவாக வேண்டும். இன்றைய ஆய்வின் போக்கைக் கண்டு தலைச்சிறந்த ஆய்வறிஞர்கள் பலர் மனம் வெதும்புகின்றனர்.

ஆய்வு செய்யும் காலத்தில் ஆய்வாளருக்கும் நெறியாளருக்குமிடையே எழும் சிக்கல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆய்வாளராகத் தம்மிடம் சேரும் மாணவர்களின் மனநிலையையும், சூழ்நிலையையும் தாய்மைப் பண்போடு சரியாகப் புரிந்துகொண்டு, "இவர் என் ஆய்வு மாணவர்' எனக் கூறி பெருமிதப்பட்டுக் கொள்ளும் நல்ல நெறியாளர்கள் அடையாளம் தெரியாமல், தமிழகத்தில் ஏராளமானோர் இருந்தனர்; இன்றும் "சிலர்' இருக்கின்றனர்.

ஆய்வாளரைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அதிகாரத்தையும் பல்கலைக்கழகங்கள் நெறியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோன்று ஆய்வு மாணவர்களிடம் நெறிபிறழ்ந்து போகும் நெறியாளரின் உரிமத்தைத் திரும்பப்பெறும் அதிகாரத்தை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் கொண்டிருக்கின்றன.

1973 முதல் 1975 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா, நெறியாளர்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கி அவர்களின் மரியாதையை மேலும் உயர்த்தினார். ஆய்வு முடிவுகள் அரசுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அவை திட்டங்களாக மாற்றப்பட்டு நாம் வாழும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 1971-இல் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட "சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்' இன்று வரை ஆய்வுப் பணிகளைத் திறம்பட செய்து வருகிறது. ஆனால், தலைச்சிறந்த ஆய்வேடுகள் பல நூலாக்கம் பெறாமல் பல்கலைக்கழகங்களில் முடங்கிக் கிடக்கின்றன.

ஆய்வு மாணவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளையும் சிக்கல்களையும் களைவதற்கு 1999 முதல் 2001 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த டாக்டர் பொற்கோ, ஆய்வுக் கல்வி மன்றம் (ஆர்ஹழ்க் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் நற்ன்க்ண்ங்ள்) என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக இருந்து திறம்பட செயல்படுத்தினார். மேலும், மாணவர்கள் கமிட்டி, பெண் ஆய்வாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க மகளிர் முறையீட்டுக் கழகம் போன்றவற்றை உருவாக்கித் திறம்பட செயல்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஆய்வு நெறிமுறைகளில் வரவேற்கத்தக்க சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆய்வேடு தொடர்பான நெறிமுறைகளைப் பல்கலைக்கழகங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை முனைவர் பட்ட மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்திற்கு அழைத்து சிறந்த ஆய்வறிஞர்களைக் கொண்டு புத்தாக்கப் பயிற்சியை வழங்கலாம். இதன்வழி ஆய்வு குறித்து மாணவர்களுக்கு எழும் ஐயப்பாடுகளை எளிதில் போக்கலாம். ஆய்வு முடிவுகளுக்கு ஏற்படும் காலதாமத்தைப் போக்கவும், ஆய்வு செய்யும் கால எல்லையை மறுபரிசீலனைச் செய்யவும், ஆய்வாளர், நெறியாளர்களுக்கிடையே எழும் சிக்கல்களைக் களையவும், ஆய்வை இடையே விட்டு விலகியவர்களுக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் வாய்ப்பளிக்கவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவாக விதிமுறைகளை வகுத்திட துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள், தமிழறிஞர்கள் உள்ளடங்கிய மதிப்புறு வல்லுநர் குழுவை அமைத்து அவர்கள் வழங்கும் ஆலோசனைகளின் படி சிக்கல்களுக்குத் தீர்வு காணலாம்.

ஆய்வு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை விடுத்து, முனைவர் பட்டம் பெறும் நோக்கத்தோடு வந்து சேரும் ஒரு சிலரால் உண்டாக்கப்படும் குளறுபடிகளே பெரும்பாலான தவறுகளுக்குக் காரணம்.

 எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியம் படிக்க இடம் கிடைப்பது அரிது. ஆனால், இன்று தமிழ் இலக்கியப் படிப்பின் இடத்தை ஆங்கில இலக்கியம் பிடித்துக் கொண்டது. பல கல்லூரிகளில் தமிழ்த்துறையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று குறைவாகவே உள்ளன.

நெறியாளரும், ஆய்வாளரும் பாதிக்கப்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரே முறையிலான ஆய்வு நெறிமுறைச் சட்டங்களை வகுப்பது ஆய்வுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வழிவகுக்கும். சமூகத்திற்குப் புதிய செய்திகளைச் சொல்லும் ஆய்வுகளே இன்றைய தேவையாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com