/

கவி பாடலாம் வாங்க - 45: 11.ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் (1)

பாக்கள் நான்கில் மூன்றாவது கலிப்பா. அதற்குரிய ஓசை துள்ளலோசை. ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, வெண் கலிப்பா என்ற மூன்று பெரும் பிரிவை உடையது அது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:00 pm

கி.வா. ஜகந்நாதன்


பாக்கள் நான்கில் மூன்றாவது கலிப்பா. அதற்குரிய ஓசை துள்ளலோசை. ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, வெண் கலிப்பா என்ற மூன்று பெரும் பிரிவை உடையது அது.

ஒத்தாழிசைக் கலிப்பாவின் வகை: (1) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, (2) அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, (3) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்னும் மூன்று. கொச்சகக் கலிப்பா (1) தரவு கொச்சகக் கலிப்பா, (2) தரவினைக் கொச்சகக் கலிப்பா, (3) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (4) பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (5) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்று ஐந்து வகைப்படும். வெண் கலிப்பாவில் வேறு வகையில்லை.

கலிப்பாவிற்குரிய உறுப்புக்கள் சில உண்டு. தரவு,  தாழிசை, அம்போதரங்கம், வண்ணகம், தனிச்சொல், சுரிதகம் என்பவை அவை. இந்த உறுப்புக்கள் யாவும் வரும் கலிப்பா வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

ஒத்தாழிசைக் கலிப்பாவில் ஒன்றாகிய நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் வரும். இவற்றோடு அம்போதரங்கம் சேர்ந்து வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. அவற்றோடு வண்ணக உறுப்பும் சேர்ந்து வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாதரவு ஒன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லும் சுரிதகமும் முறையே பெற்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 

தரவு என்பது தருதல் என்னும் பொருளை உடையது. அது முகப்பைப் போன்றது. எருத்தம் என்றும் அதற்குப் பெயருண்டு. நான்கு சீர்களை உடைய அடிகளால் வரும். பெரும்பாலும் விளச்சீர், காய்ச்சீர்களால் அடிகள் அமையும். நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தரவு மூன்றடி முதல் பல அடிகளுடையதாக வரும்.

தாழிசை என்பது தரவினும் தாழ்ந்து இசைப்பதனால் அப்பெயர் பெற்றது. அதற்கு இடைநிலைப் பாட்டு என்றும் ஒரு பெயர் உண்டு. இரண்டடி முதல் நான்கடி வரையிலும் தாழிசை வரும். தரவுக்குள்ள அடிகளைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும்.

தனிச் சொல் என்பது பாட்டின் அடிகளோடு ஓசையில் இசையாமல் தனியே நிற்கும். அதற்கு விட்டிசை, தனிநிலை, கூன் என்ற பெயர்களும் உண்டு.

சுரிதகம் என்பது கடைசியில் முடிந்து நிற்கும் உறுப்பு. கலிப்பா வஞ்சிப்பா என்னும் இரண்டிலும் இது வரும். வெண்பாச் சுரிதகம்,  ஆசிரியப்பாச் சுரிதகம் என்று இரண்டு வகை உண்டு. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று வரும். சுரிதகம் என்பது சுழித்து முடிதல் என்னும் பொருளுடையது. அதற்கு அடக்கியல், வைப்பு, வாரம், போக்கியல் என்றும் பெயர்கள் உண்டு. இந்த உறுப்புக்களின் பெயருக்குரிய காரணத்தைப் பின்வரும் பழைய சூத்திரம் புலப்படுத்துகிறது.

"தந்துமுன் நிற்றலின் தரவே, தாழிசை
ஒத்தாழ் தலின்அஃ தொத்தா ழிசையே, 
தனிதர நிற்றலின் தனிச்சொல், குனிதிரை
நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலின்
சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப'
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு உதாரணம் வருமாறு.
(தரவு)
"வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ'
(தாழிசை) 
சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே           (1)
சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நயமிலரே                      (2)
சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே    (3)
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
"அருளென லிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலமும் வாழியர்
பொன்னொடுந் தேரொடும் தானையிற் பொலிந்தே'

இந்தக் கலிப்பாவில் தரவு ஒன்றும், தாழிசைகள் மூன்றும், தனிச் சொல்லும், சுரிதகமும் அமைந்துள்ளமையின் இது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா.  

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.