கடிமரமும் காவற்குளமும்

நீர்நிலைகளைப் பேணிக் காப்பதும் நெடுமரங்களை வளர்த்து நாட்டு வளம் பெருக்குவதும் பண்டைய தமிழ் மன்னர்களின் தலையாய கடமையாக விளங்கியமையை நற்றமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.
கடிமரமும் காவற்குளமும்
Updated on
3 min read


நீர்நிலைகளைப் பேணிக் காப்பதும் நெடுமரங்களை வளர்த்து நாட்டு வளம் பெருக்குவதும் பண்டைய தமிழ் மன்னர்களின் தலையாய கடமையாக விளங்கியமையை நற்றமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.
பண்டு நீர்நிலைகளும், காடுகளும், மரங்களும் ஒரு நாட்டின் வலிமையை எடுத்துரைப்பனவாக விளங்கின. சங்க கால வேந்தர்கள் தங்கள் வலிமை மற்றும் இறையாண்மையின் குறியீடாகக் காவற்காடுகள், காவல் மரம், காவற்குளம் ஆகிய மூன்றினையும் கொண்டு கடுமையான காப்புடன் போற்றினர். இவற்றுள் எது ஒன்று அழிவுக்கு இலக்கானாலும் அது அம்மன்னனின் பெருந்தோல்வியாகவும், அவமானத்திற்குரியதாகவும், இயலாமையின் குறியீடாகவும் கருதப்பட்டது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மன்னர்தம் தலைநகரங்கள் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் அமைந்த மதில் அரண் (வட்டப்புரிசை) அதன் வெளியே நீர் அரண் (அகழி) அதற்கு வெளியே காவற்காடு எனப்படும் "பெருங்காடு' சூழ்ந்தவாறு அமைந்து திகழ்ந்தன. இன்று நமக்கு அத்தகைய அரண் அமைப்புகளுக்குச் சான்றாதாரமாக புதுக்கோட்டை மாவட்டம் பொப்பண்ணகோட்டையும், தஞ்சாவூர் மாவட்டத்து வல்லம் கோட்டையின் எச்சங்களும் விளங்குகின்றன.
செயற்கைக் கோள்கள் வாயிலாக விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் இவ்விரு அரண் அமைப்புகளை நமக்குத் தெளிவுறக் காட்டி நிற்கின்றன. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்து பொப்பண்ணக்கோட்டை காவற்காடு, நீர்சூழ் அரண், மதில் அரண், அதனுள் காவற்குளம் ஆகியவற்றுடன் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். வல்லத்துக் கோட்டையும் அகழியும் கடந்த 150 ஆண்டுகளில் நம்மவர்களால் அழிக்கப்பட்டது வருத்தத்திற்குரிய தகவலாகும். பொப்பண்ணகோட்டைப் பகுதியில் அண்மையில் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டொன்று இருந்தது கண்டறியப்பட்டது.
சேர மன்னர் பனம்பூ, சோழர் ஆத்திப்பூ, பாண்டியர் வேப்பம்பூ மாலைகளைத் தங்களுக்கு உரியவைகளாகக் கொண்டனர். அவை அரசு சின்னங்களாக மதிக்கப்பட்டன. பனை மரம், ஆத்தி மரம், வேப்பமரம் ஆகியவை அவர்தம் காவல் மரங்களாகும்.
காவல்மரம், காவற்குளம் இவை இரண்டும் சங்க காலத் தமிழ் வேந்தர்தம் இரு கண்களாக விளங்கின. போர் மேற்செல்லும் வேந்தன் தன் பகைவனின் நாட்டில் இருக்கும் காவற்காட்டு மரங்களை முதலில் வெட்டி அழிப்பான். பின்பு அவன் நாட்டு காவற்குளங்களில் தங்கள் யானைகளை இறக்கி கலக்கி நீர்த்துறைகளை அழிப்பான். நீர் அரணும் (அகழி), மதிலரணும் (கோட்டை) கடந்து பகைவேந்தனின் கடிநகருள் நுழைந்ததும் எதிர் மன்னன் தன் காவற்குளத்தை தன் பட்டத்து யானை கொண்டு கலக்கி அழிப்பான். பின்பு அவன் தன் காவல் மரத்தை வேரோடு வெட்டுவான். சிலர் அம்மரத்தை துண்டுகள் பலவாக்கி தம் வண்டிகள் மீதேற்றி தன் தலைநகருக்குக் கொண்டு செல்வர். சிலர் கடிய அம்மரத்தின் அடிப்பகுதியை வெட்டிச் சென்று போர் முரசமாகச் செய்வர். அரசர்கள் சிலரோ, பகைவர்தம் அரண்மனை கடிமரத்தை தம் பட்டத்து யானையைக் கட்டுவதற்குரிய கட்டுத்தறியாக நடுவர். பெரும்பான்மையான அரசர்கள் பகைவர்தம் கடிமரத்தை வெட்டாமல் அதில் தம் பட்டத்து யானையைக் கட்டுவர். அச்செயலே எதிரி தோற்றமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்.
எந்த ஒரு மன்னன் தன்னுடைய காவல் மரத்தையும், காவற்குளத்தையும் காக்க இயலாமல் போகும்போது அவன் மானம் இழவந்தவனாகப் பண்டு கருதப்பட்டான்.
மிக அண்மைக்காலம் வரை சங்ககால சேரர், சோழர், பாண்டியர், அதியர், சேதிநாட்டு மன்னர்கள் போன்ற அரசர்கள் பண்டு வெளியிட்ட காசுகளோ, பிறவகை தொல்லியல் சான்றுகளோ மிகக் குறைவாகவே நமக்குக் கிடைத்து வந்தன. ஆனால், அண்மைக்காலமாக ஆராய்ச்சியாளர் தம் முயற்சிகளால் அவ்வரசர்கள் வெளியிட்ட பலவகையான காசுகளும், பிற பொருள்களும் நாளுக்கு நாள் கிடைத்து வருகின்றன. அவற்றில் சிலவகை நாணயங்களை குறிப்பிட்டுக் காட்டும் அவ்வல்லுநர்கள், அக்காசுகளில் ஒருபுறம் வேலியிட்ட மரம் இருப்பதாகவும், தொட்டிக்குள் மீன்கள் அல்லது ஆமைகள் இருப்பதாகவும், அருகே யானை உருவம் உள்ளமையையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
அத்தகைய காசுகளையும், பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சிலம்பு ஆகிய நூல்களில் காணப்படும் பாடல்களையும் ஆழமாக ஆராய்வோமானால், அக்காசுகளில் காணப்படும் வேலியிட்ட மரம் எனும் சின்னம் தமிழ் வேந்தர்தம் காவல் மரமாகும். அருகே செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ காணப்படும் கோட்டு உருவம் மன்னர்தம் காவற்குளத்தைச் சுட்டுவதாகும். அதனுள் காணும் ஆமைகளும், மீன்களும் அக்குளத்தில் நீர் மிகுந்து இருந்தன என்பதைக் காட்டுபவையாகும்.
இக்காசுகளில் (படங்கள்) வேலியிட்ட காவல் மரம், காவற்குளம், எதிரியின் காவற் குளத்தில் இறங்கி அதனை அழிக்கும் யானை, அக்குளத்தில் மீன்கள் உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
சங்ககால சோழர், சேரர், பாண்டியர் காசுகள் பலவற்றில் யானையின் உருவங்கள் காணப்படும். அந்த யானைகள் அக்காசுக்குரிய மன்னனின் பட்டத்து யானை ஆகும். சில காசுகளில் தன்னுடைய யானை எதிரிகளின் காவற்குளத்தை கலக்கி அழிக்கவல்லது என்பதனைக் காட்ட மீன்கள் அல்லது ஆமைகள் நிறைந்த நீர்நிலையில் அவை இறங்கி அழிக்கும் காட்சியை இடம்பெறச் செய்துள்ளனர். சிலவற்றுள் யானைகள் காவல் மரத்தை அழிக்க முயலும் காட்சியோ அல்லது அதில் பிணிக்கப்பெற்றுள்ள காட்சியோ காணப்
படுகிறது.
புறநானூறு "ஒளிரு மருப்பின் களிறு அவர காப்புடை கயம் படியினை...' (பா. 15) என்றும்,
"கடிதுறை நீர்க்களிறு படீஇ...' (பா. 16) என்றும்,
"களிறு படிந்து உண்டெனக் கலக்கிய துறையும்'
(பா. 23) என்றும் கூறி யானை அழிக்கும் காவற் குளங்கள் பற்றி பேசுகின்றது. மேலும், "கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானை' (பா. 162) என்றும், "களிறும் கடிமரம்...' (பா. 336) என்றும் குறிக்கப்பட்டிருக்கும் பாடல்களின் காட்சிகளைத்தான் மேற்குறித்த சங்க கால காசுகளில் நாம் காண்கிறோம்.
இலவந்திகை துஞ்சிய நன்மாறன் என்ற பாண்டிய மன்னனைப் பாடிய காரிக்கண்ணனார், ""பகைவர் நாட்டின் மேல் நீ படை எடுத்துச் செல்லுங்காலத்திலே விளை வயலை வேண்டுமானால் கொள்ளை இடுவாயாக, பேரூர்களை எரியூட்டுவாயாக, நின் நெடுவேலால் பகைவரை அழித்துக் கொல்லினும் கொல்லுக; ஆனால், அவர்தம் காவல் மரங்களை மட்டும் ஒருபோதும் வெட்டாது இருப்பாயாக. அவை இளமரங்களாக இருப்பதால் ஒருபோதும் நின் யானைகளுக்குக் கட்டுத் தறியாகப் பயன்படா'' என்ற அறிவுரையைக் கூறி, "கடிமரம் தடிதல் ஓம்பு; நின் நெடுநல் யானைக்குக் கந்தற்றாவே'
(பா. 57) என வலியுறுத்தியுள்ளார். நீர்நிலைகளையும் அவற்றின் துறைகளையும் பகைமேற்செல்லும்போது யானைகளைக் கொண்டு கலக்கி அழிப்பது போர்நெறியாக இருந்தாலும் தன் நாட்டு நீர்வளம் பெருக்குதல் வேந்தன் கடமை (பா. 18) என்பதை பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு கூறினார் குடபுலவியனார்.
அதனால்தான் வங்கதேசம் வரை படை எடுத்துச் சென்ற கங்கைகொண்ட இராஜேந்திர சோழன் நித்தில நெடுங்கடல் உத்திர இலாடம் எனும் தேசத்தை வெற்றிகண்டு அங்கிருந்த மூலகங்கையின் திரிபேணித்துறையிலிருந்து பொற்குடங்களில் நீரினை எடுத்து வந்து தன் தலைநகரமாம் கங்கைகொண்ட சோழபுரத்து பொன்னேரியில் கொட்டி "சோழகங்கம்' எனும் பேரேரியை நிருமாணித்தான். அதனை நீர்மயமான வெற்றித்தூண் (ஜலஸ்தம்பம்) எனவும் அறிவித்தான்.
நிலத்தையும் நீர்நிலைகளையும் நெடுமரங்களையும் காப்பதே தமிழ்நாட்டின் சேய்மையான மரபும் பெருமையுமாகும். அவற்றை நமக்குக் காட்டி நிற்பவையே சங்கத் தமிழ் நூல்களும், சங்ககால காசுகளுமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com