இசையால் வசமாகும் எவ்வுயிரும்

பெரியபுராணத்தில் இலைமலிந்த சருக்கத்தில் ஆனாய நாயனார் புராணத்தைக் கூறவரும் சேக்கிழார் பெருமான், அவர் குழலில் வாசித்த இசையை, இசை நுணுக்கங்களுடன் பலபாடல்களில் விளக்கியிருப்பது அதிசயிக்கத்தக்கது.
இசையால் வசமாகும் எவ்வுயிரும்

பெரியபுராணத்தில் இலைமலிந்த சருக்கத்தில் ஆனாய நாயனார் புராணத்தைக் கூறவரும் சேக்கிழார் பெருமான், அவர் குழலில் வாசித்த இசையை, இசை நுணுக்கங்களுடன் பலபாடல்களில் விளக்கியிருப்பது அதிசயிக்கத்தக்கது.

புலவர்பெருமான் கூறவந்தது ஆன்மிகச் செய்திகளும், அடியார் வரலாறுகளுமே. இவற்றுள் இசையால் தொண்டுசெய்த ஒரு அடியாரைப்பற்றிக் கூறுமுகமாக, இசை பற்றிய நுணுக்கங்களையும் அவ்விசையை இசைக்கும் குழலைச் செய்யும்விதத்தையும் பாங்குற விவரித்துள்ளார்.

"ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்' என்று ஆனாய நாயனார் திருவவதாரத்தைப் போற்றுகிறார்.

முதலில் எவ்வாறு குழல் செய்யப்பட்டதென விளக்குகிறார். பழமையான இசைக்கலை பற்றி மறைநூல்களில் கூறப்பட்ட இலக்கண மரபின்படி முறையாக வளர்ந்த மூங்கிலில் நுனியில் நான்கு பங்கும் அடியில் இரண்டு பங்கிலும் அரிந்து, அந்த இடைப்பட்ட பாகத்தை எடுத்து சுரங்கள் எழும் தானங்களைத் துளை செய்திட வரிசையாகக் குறித்துக் கொண்டு, காற்று உண்டாக்கும் துளையையும், இடைவெளி விட்டு ஒவ்வோர் அங்குல அளவில் ஏழு துளைகளையும் (சுரத்தானங்கள்) செய்கிறார். 

முந்தைமறை நூல்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்
     அந்தம் முதல் நால் இரண்டில் அரிந்து, நரம்பு உறுதானம்
வந்ததுளை நிரையாக்கி, வாயு முதல் வழங்குதுளை
     அந்தம்இல்சீர் இடைஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து. 

சந்தனம், செங்காலி, கருங்காலி, வெண்கலம் எனும் பலவிதமானவற்றாலும் குழல் செய்யப்படும். ஆயினும் வேய் எனும் மூங்கிலால் செய்யப்பட்ட குழலே உயர்வானதாம்.

"சேவடியில் தொடுதோலும், செங்கையினில் ஆநிரைகளை மேய்க்கும் வெண்கோலும் மேவும் இசை வேய்ங்குழலும்' விளங்க நிரைகாக்கச் செல்கிறார் ஆனாயர். அவை மேயும் பொழுதினில் "எவ்வுயிரும் என்பூடு கரைந்துருகும்' இசையால் எம்பெருமானாகிய சிவபிரானின் திருவைந்தெழுத்தினையும் ஏழிசைகளால் வாசிக்கிறார். 

ஏழிசை சுரங்களாவன குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே. இவற்றுள் முதலில் மாறிவரும் சுரங்களையுடைய குறிஞ்சிப்பண்ணை வாசித்துப் பின், முல்லைப்பண்ணை இசைக்கிறார். பின் 'பாலையாழு'க்கான 'தாரம்,' 'உழை' என்பவற்றைப் பெருமை பொருந்திய சுரத்தானங்களில் இசை பெருகுமாறு இசைக்கிறார். சிவபிரானின் ஐந்தெழுத்தின் இசையானது பெருகுமாறு, கூறப்படும் 'இளி'யைக் குரலாக உடைய பண்ணே குரலாக எழும் கொடிப்பாலையில் நிறுத்துகிறார்.    

மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி
யேறியதா ரமுமுழையுங் கிழமைகொள விடுந்தானம்
ஆறுலவு சடைமுடியா ரஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை யினினிறுத்தி 

இசையை எங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாமிர்தமும் கலந்து இருப்பதுபோல அனைத்துயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்றாம். இசையால் எவ்வாறு உலகத்துயிர்கள் வசப்படுகின்றன என நயம்பட விளக்குகிறார். 

கொன்றை மலரணிந்த சிவபெருமானின் அடியாராகிய ஆனாயர் தமது செவ்வாயில் வைத்து வாசித்த குழலின் வாசனை எனும் இசை உட்புகுந்து உள்ளத்தையுருக்க, அண்ட சரசரங்களனைத்தும் இசைமயமாகிவிட்டன. தமது உடலும் அதனில் குடிகொண்ட ஐம்புலன்களும் கரணங்களும் இசையாகிய தன்மையையே அடைந்தனவாம். ஆனாயர் இசைத்த குழலிசை வையத்தை நிறைத்தது என்கிறார் புலவர் பெருமான். அனைத்தையும் தன் வசமாக்கிற்று.

இவ்வாறு நிற்பனவுஞ் சரிப்பனவு மிசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையா ரடித்தொண்டர் 
செவ்வாயின்     மிசைவைத்த திருக்குழல்வா சனையுருக்க. 

இசையமுதம் அனைத்து உயிர்களையும் வசப்படுத்த வல்லது என அருமையாக விளக்கங்களுடனும், இசையிலக்கணத்துடனும் சேக்கிழார் பெருமான் கூட்டியுரைத்தமுறை நயக்கத்தக்கதாம். அக்காலத்தில் காப்பியங்கள் இயற்றுவோர் பலகலைகளிலும் வல்லுனராயிருந்தனர் என்பது இதனால் கண்கூடு. 

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் மாதவி ஆடிய நாட்டியக்கலையையும், இசைக்கலையையும் பல செய்யுட்களில் அவற்றின் இலக்கணத்துடன் வருணனை செய்துள்ளார். இதுபோன்றே ஆனாய நாயனார் சரித்திரத்திலும் இசை தொடர்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளார் சேக்கிழார் பெருமான். தெய்வப்புலவர்களின் பெருமை சொல்லவும் அரிதே! பெரிதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com