இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

வாக்களிப்பு உணர்வும் வயோதிக சக்தியும்
இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

தமிழகத்தில் வாக்குப் பதிவு விகிதம் வெறும் 69.72% என்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

சிறுவனாக இருக்கும்போதே விடுதலை வேள்வியில் ஈடுபட்டுப் பின்னாளில் இந்திய குடிமைப்பணி அதிகாரியான லெட்சுமிகாந்தன் பாரதிக்கு இப்போது வயது 99. அவர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயங்கவில்லை.

98 வயதான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவும், விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமைக்குரியவர். பொதுவாழ்வில் நேர்மைக்கும் எளிமைக்கும் அடையாளமாக வலம் வருபவர். வயோதிகத்தையோ, வெயிலையோ காரணம் காட்டாமல், வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தவர்களில் அவரும் ஒருவர்.

பத்து ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், ராஜாஜியால் அடையாளம் காணப்பட்டவருமான ஹெச்.வி.ஹண்டேக்கு வயது 97. அவரும் சரி, வாக்களிப்பது தனது உரிமைமட்டுமல்ல கடமையும்கூட என்று கருதி வாக்களித்திருக்கிறார்.

எனது பேராசிரியரும், நாடறிந்த இலக்கியவாதியும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்தார். அவரை இன்னும் ஒரு வாரம் கூடுதலாக தங்கியிருக்க அமெரிக்காவாழ் தமிழர்கள் வற்புறுத்தினர். ஏப்ரல் 19-ஆம் தேதி தனது வாக்கை தவறாமல் பதிவு செய்தாக வேண்டும் என்கிற கடமை உணர்ச்சி காரணமாக அதை ஏற்றுக்கொள்ளாமல், ஏப்ரல் 17-ஆம் தேதியே அவர் மதுரை திரும்பி விட்டார்.

கேரள மாநிலம் வடகரையைச் சேர்ந்த 110 வயது எம்.கே.கிருஷ்ணனும், 100 வயதான அவரது மனைவி மக்கம்மாவும் முதுமை, கோடைவெயில் என்று சாக்குப் போக்கு சொல்லாமல் வாக்குச் சாவடிக்கு சென்று தங்களது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களைப் போல இன்னும் எத்தனை எத்தனையோ பேர்கள்...

அவர்களுக்கெல்லாம் சுதந்திரம் பெற என்ன விலை கொடுத்தோம் என்பதும், என்னென்ன கனவுகளுடன் இந்தியா ஜனநாயகப் பயணத்தைத் தொடங்கியது என்பதும், வாக்குச் சீட்டின் மரியாதை என்ன என்பதும் தெரியும்.

தங்களது வாக்கை பதிவு செய்யத் தவறிய 30% தமிழர்கள் குறித்து சிந்திக்கும்போது வேதனை மேலிடுகிறது. அதிலும் குறிப்பாக முதல்முறை வாக்காளர்களும், இளையதலைமுறையினரும், நகர்ப்புற மக்களும்தான் அந்த முப்பது விழுக்காட்டில் கணிசமானவர்கள் என்பது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.

-------------------------------------------------------------------------

படிக்க வேண்டும் என்று நான் தேர்வு செய்து அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களின் வரிசையில் அலங்கார நாடா (ரிப்பன்) கட்டப்பட்ட புத்தகக் கட்டு ஒன்று சில மாதங்களாகவே இருக்கிறது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தபோது, எனக்கு நினைவு அன்பளிப்பாக வழங்கியவை என்று மட்டும் தெரியும். யாரால், எப்போது, எங்கே வழங்கப்பட்டது என்று நினைவில்லை. அவர்களும் அந்தப் புத்தகக் கட்டில் குறிப்பிடவில்லை.

நாடாவைப் பிரித்துப் பார்க்க மூன்று வாரங்களுக்கு முன்புதான் நேரம் வாய்த்தது. பிரித்தேன். பரமன் பச்சைமுத்து எழுதிய ஒன்பது புத்தகங்கள் இருந்தன. கடந்த மூன்று வாரங்களில் அவற்றில் நான்கு புத்தகங்களை மட்டும்தான் என்னால் படிக்க முடிந்திருக்கிறது. மற்றவை காத்திருப்புப் பட்டியலில் தொடர்கின்றன.

வாழ்க்கைப் பாசறையில்; வளர்ச்சி விதைகள்; அச்சம்தவிர்... ஆளுமைகொள்; உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே; அகமும் புறமும்; மனப்பலகை; நதிபோல ஓடிக்கொண்டிரு; மணற்கேணி; வெற்றிவாகை - இவைதான் அந்தக் கட்டில் இருந்த பரமன் பச்சைமுத்து எழுதிய ஒன்பது புத்தகங்கள், அவற்றில் நான் படித்து முடித்திருப்பவை அகமும் புறமும், உடல் வளர்த்தேனே.. உயிர் வளர்த்தேனே, நதிபோல ஓடிக்கொண்டிரு, அச்சம் தவிர் ஆளுமை கொள் ஆகிய நான்கும்.

ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். பரமன் பச்சைமுத்துவின் எழுத்தை எடைபோட நான்கு புத்தகங்கள் போதாதா என்ன? உடல் வளர்த்தேனே; உயிர் வளர்த்தேனே என்கிற புத்தகம் சித்த மருத்துவர் நாகராஜனுடன் பரமன் பச்சைமுத்து நடத்திய நேர்முகம். கேள்வி பதில் பாணியில் நம்மில் பலரும் எழுப்பும் உடல் சார்ந்த மருத்துவக் கேள்விகளை பரமன் பச்சைமுத்து எழுப்ப, அதற்கு சித்த மருத்துவர் நாகராஜன் வழங்கிய பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எனக்கிருந்த சில ஐயப்பாடுகளுக்கு விளக்கம் கிடைத்தது.

அகமும் புறமும், நதிபோல ஓடிக்கொண்டிரு, அச்சம் தவிர் ஆளுமை கொள் ஆகிய மூன்று புத்தகங்களும் தன் முனைப்பை ஊக்குவிக்கும் கட்டுரைகள் அடங்கியவை. பழையபாணியில் சொல்வதாக இருந்தால், சுயமுன்னேற்ற வழிகாட்டிகள். அவற்றில் நதிபோல ஓடிக்கொண்டிரு புத்தகத்தில் உள்ள பல கட்டுரைகள் என்னை இரண்டு தடவை படிக்கத் தூண்டின. சாதனைகள் படைக்கத் துடிக்கும் இளைஞர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்.

"யார் இந்த பரமன் பச்சைமுத்து'? என்று எனது உள்மனது கேட்டது. அவரை சந்திக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துவைத்துக்கொண்டேன். கூடவே ஒரு வருத்தம். முன்பு போல "இளைஞர் மணி' இணைப்பு இருந்திருந்தால் உடனடியாக பரமன் பச்சைமுத்துவைத் தொடர்பு கொண்டு ஒரு தொடர் எழுதச் சொல்லி இருப்பேன். மீண்டும் "இளைஞர் மணி' தொடங்கப்பட்டால், பரமன் பச்சைமுத்துவை தவறவிட மாட்டேன்.

-------------------------------------------------------------------------

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் "வினோத நடனங்கள்' என்கிற தலைப்பில், நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நெல்லைச் சீமை தமிழுக்கு வழங்கிய தலைசிறந்த கொடையான "முண்டாசுக் கவிஞன்' மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் "ஊழிக் கூத்து' கவிதையுடன் தொடங்குகிறது, கவிஞர்களின் பதிவு. வ.உ.சி., புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி. என்று தொடர்கிறது.

அதில் இடம் பெற்றிருக்கிறது கவிஞர் பேரா என்று பரவலாக அறியப்படும் பே.இராஜேந்திரன் எழுதிய இந்தக் கவிதை-

காட்டுப் பூக்கள்

குளித்து மகிழ்ந்தால்

மழை...

குளம் ஏரிகளை

நிரப்பிக் கொண்டால்

மழை...

மலைகளை

முத்தமிட்டுக் கொண்டால்

மழை...

காட்டுவழி ஓடி

காசுக்குப் பலனின்றி

கடலில் கரைந்தால்

அது பிழை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com