இந்த வாரம் கலாரசிகன் - (18-02-2024)

பாரதியார் பிறந்தநாள் விழா: கலைஞர்களுக்கு விருதுகள், பாரதி பாஸ்கர் கௌரவம்
இந்த வாரம் கலாரசிகன் - (18-02-2024)

ஆண்டுதோறும் ஸ்ரீராம் நிறுவனத்தின் சார்பில், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் மகாகவி பாரதியார் விழா கொண்டாடுகிறது. அவரது 142-ஆம் பிறந்தநாள் விழா கடந்த 10-ஆம் தேதி தி.நகர் ஸ்ரீ கிருஷ்ணகான சபாவில் நடந்தது. பிப்ரவரி மாதம் ஏன் பாரதியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்கிற புருவம் உயர்த்தலுடன்தான் நான் இதைப் பதிவு செய்கிறேன்.

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மகாகவி பாரதியாரின் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்கள் விருது வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டப் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் "தினமணி' துணை செய்தி ஆசிரியர் ராஜ்கண்ணனும் ஒருவர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. "வழி வழி பாரதி' என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றிய பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் விருது வழங்கி அவர்களை கெளரவித்திருக்கிறார்.

என்மீது தனித்த அன்பும், அக்கறையும் கொண்டவராக இருந்திருக்கிறார் தமிழறிஞர் ஒளவை நடராசனார். அவரைப் போலவே நானும் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தை விடாமல் கடைப்பிடிப்பவன் என்பது என்மீது அவருக்கிருந்த அன்புக்கு முக்கியக் காரணம்.

ஒளவை நடராசனாரும் சரி, அவரது தந்தையார் "உரை வேந்தர்' ஒளவை துரைசாமிப் பிள்ளையும் சரி எழுதிக் குவித்திருக்கிறார்கள். தனது தந்தையார் ஒளவை நடராசனாரின் கையெழுத்து பிரதிகளை அவரது திருமகனார் ஒளவை அருள் சேர்த்து வைத்திருக்கிறார், தொகுத்துப் பார்த்திருக்கிறார் என்பது தந்தை மேல் அவருக்கிருக்கும் அளப்பரிய பக்தியின் வெளிப்பாடு.

"அப்பாவின் தனித்துவமான கையெழுத்தைக் கண்டு நான் வியப்பதற்குக் காரணமுண்டு. ஆங்கிலத்தில்தான் எழுத்துக்களைச் சேர்த்தெழுதும் முறையை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் அப்பாவோ, ஆங்கிலத்தைப் போலவே தமிழிலும் எழுத்துக்களை உரிய நெறிப்படி சேர்த்தெழுதும் ஆற்றல் மிக்கவராய் திகழ்ந்தார்' என்கிறார் ஒளவை அருள்.

நாள்குறிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், அவ்வப்போது ஒளவை நடராசனார் எழுதி வைத்திருந்த குறிப்புகள் சிலவற்றை அவரது கையெழுத்து பிரதியுடன் தொகுத்து "ஒளவையின் சிந்தனைப் புதையல்' என்கிற பெயரில் வெளிக்கொணர்ந்திருக்கிறது ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம். 180 குறிப்புகள் இடம் பெற்றுள்ள இந்த அரிய தொகுப்பின் ஆக்கத்தில் முனைவர் ஒளவை அருளின் முனைப்பும், நண்பர் பொன்னேரி பிரதாப்பின் பங்களிப்பும் பளிச்சிடுகின்றன.

விலையில்லா பதிப்பாக வழங்கப்பட்ட புத்தகத்தின் பிரதிகள் எனக்கு அனுப்பித் தரப்பட்டிருக்கின்றன. எதற்காக விலையில்லா பதிப்பு என்று புரியவில்லை. எல்லோரும் வாங்கிப் படிப்பதற்கான பதிப்பாகவே வெளியிடலாம் என்பது எனது கருத்து.

------------------------------------------------------------------------

நல்லதை ரசிப்பதற்கும், நல்லவற்றைப் பாராட்டுவதற்கும் நல்ல மனது வேண்டும். நல்ல ரசனை இருப்பவர்களுக்குத்தான் அந்த நல்ல மனது இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவரைக் குறிப்பிடுங்களேன் என்று என்னிடம் யாராவது கேட்டால், சற்றும் யோசிக்காமல் நினைவுக்கு வரும் பெயர் நடிகர் சிவகுமார்!

நான்கு மாதங்களுக்கு முன்னால்... சுப்ர. பாலன் எழுத்தாக்கத்தில், ஓவியர் மணியம் குறித்து அவரது புதல்வர் மணியம் செல்வன் வெளிக்கொணர்ந்திருக்கும் "மணியம் - 100' என்கிற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. ஓவியர் மணியம் வரைந்த அற்புதமான வண்ண ஓவியங்களுடன், அவரது வாழ்க்கையையும், அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளையும், குறிப்பிடத்தக்க ஓவியங்கள் வரையப்பட்ட பின்னணியையும் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது அந்தப் புத்தகம்.

மூவேந்தர்கள் காலத்து உடையலங்காரம், நடையலங்காரம் மட்டுமல்லாமல், அன்றைய அரண்மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், மக்களின் வாழ்க்கை முறைகள் போன்றவை எப்படி இருந்தன என்பவற்றை மணியம் வரைந்த ஓவியங்களின் அடிப்படையில்தான் நாம் அவதானிக்கிறோம் என்கிற உண்மையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

"கல்கி' தீபாவளி மலருக்கு ஓவியர் மணியம் வரைந்தளித்த ஒவ்வோர் அட்டைப் படமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அற்புதச் சித்திரங்கள். 1961 கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஓவியம் இன்றளவும் பல வீடுகளின் பூஜையறைகளை அலங்கரித்து வருகிறது. இரவாப் புகழ் பெற்ற ஓவியர் மணியமின் கைவண்ணங்கள் பல, தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருப்பதே பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றால், அந்த ஓவியங்களின் அசல் எப்படி இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஓவியங்கள், ஓவியர் மணியம் குறித்த தகவல்கள் மட்டுமல்ல, ஓவியர் மணியம் குறித்து அவரது சமகால ஓவியர்களும், உடன் பணியாற்றியவர்களும், படைப்பிலக்கியவாதிகளும், பத்திரிகையாளர்களும் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வைஜயந்திமாலாவில் ஒரு குந்தவையையும், கமலா லட்சுமணனில் ஒரு சிவகாமியையும் அவரால் பார்க்க முடிந்ததால்தான், அந்த வரலாற்றுக் கதாபாத்திரங்களை கல்கியால் நமது மனதில் வரைந்து காட்ட முடிந்தது என்பது என்து கருத்து.

இனி நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். அக்டோபர் மாதம் நடந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் சிவகுமார் யூடியூபில் வெளியாகி இருந்த அந்த நிகழ்வை எனக்கு அனுப்பித் தந்திருந்தார்.

"அந்த நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்' என்று அவர் கேட்டிருந்தால் அதில் குறிப்பிட ஒன்றுமில்லை. அவர் "சாகாவரம் பெற்ற ஓவியங்கள்' என்று எழுத்தாளர் சிவசங்கரி அந்த நிகழ்வில் பேசிய உரையை அனுப்பித்தந்து, "சிவசங்கரியின் மிகச் சிறந்த உரை இது. நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும்' என்று கூறியதில்தான் நடிகர் சிவ

குமார் உயர்ந்து நிற்கிறார்.

விமர்சனத்திற்கு வந்திருந்தது கவிஞர் ராமாநுஜம் ராகவன் எழுதிய "வாழ்க்கை காட்டிய வரிகள்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்தது இந்தக் கவிதை - கோழி மிதித்துக்

குஞ்சு முடமாவதில்லை

இது பழசு - இப்போது

குஞ்சுகள் மிதித்துக்

கோழிகள் முடமாகின்றன...

முதியோர் இல்லங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com