குன்றேறி யானைப் போர் காணல்!

குன்றின் மீது நின்று யானைப் போரைக் காணும் திருவள்ளுவர் உவமை
குன்றேறி யானைப் போர் காணல்!

மானுட அனுபவங்களுக்கு உட்பட்ட எளிய உவமைகளால் கருத்தைத் தெளிவுற விளக்குதலைத் திருக்குறளிற் காணலாம்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை (964)

உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது

மிக்கற்றால் நீள விடல் (1302)

இத்தகைய எளிய உவமைகளுக்கு மாறாகக் காண்பதற்கு அரியதாய் - அருகிருந்து காண்பார்க்கு இடையூறு விளைவிப்பதாய் யானைகளுக்கு இடையில் நடக்கும் போரினை ஓரிடத்து உவமையாக்கிப் பாடுகிறார் திருவள்ளுவர்.

குன்றேறி யானைப் போர்

கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை (758)

என்னும் குறள் பொருள் செயல்வகை அதிகாரத்தில் இடம் பெறுவது. கையில் பொருள் வைத்துக் காரியம் செய்தல் மலையேறி யானைப் போரைப் பார்ப்பது போலாம் என்பது இதன் திரண்ட கருத்து.

யானைகள் ஒன்றோடொன்று போரிடுவதை அருகிருந்து பார்ப்பார்க்கு எந்நேரத்திலும் ஆபத்துண்டாகலாம். எனவே இடையூறின்றி இனிது காண்பதற்கு ஏற்ற செயல் எது? தரைமீது இருந்து பார்ப்பதைத் தவிர்த்து வரை(மலை) மீது நின்று பார்ப்பதே கேட்டினைத் தவிர்ப்பதற்கு ஏற்றதாம்!

இனி திருவள்ளுவர் கூறிய இவ்வுவமை அவரால் கற்பித்துச் சொல்லப்பட்டதா? அவர் காலத்துக் காணப் பெற்ற "யானைப் போர்' பற்றிய நிகழ்வுகளின் அடியாகப் பிறந்ததா? எனும் ஐயம் எழுதல் இயல்பே. பத்துப்பாட்டுள் ஒன்றான மதுரைக் காஞ்சியில் இதற்கு விடை கிடைக்கிறது.

மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரையில் (மதுரைக் காஞ்சி 699) போர் இல்லாத காலங்களில் - யானைகளை ஒன்றோடொன்று போர் செய்யுமாறு மறவர்கள் ஏவியதை அந்நூலில்,

கோணம் தின்ற வடுஆழ் முகத்த

சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,

மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்,

மாறாது உற்ற வடுப் படு நெற்றி,

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்

கடுங்களிறு ஓட்டலின்...(592 - 597)

என்னும் அடிகளில் சித்திரிக்கிறார் மாங்குடி மருதனார். "மாயோன் மேய ஓண நன்னாளில்' ஒரு குடியிருப்புக்கும் மற்றொரு குடியிருப்புக்குமிடையே

இப்போர் நிகழ்ந்தது. போரினைக் காண்போர்க்கு யானைகளால் இடையூறு நேராதவாறு உயரிய கரை ஒன்று எடுத்திருந்தனர். அக்கரையின் மேலும் சரிவிலும் யானைகள் ஏறினால் சறுக்கி விழும் பொருட்டுக் கரிய பருக்கைக் கற்களைப் பரப்பி இருந்தனராம். யானைப்போர் காண்போர்க்குப் பாதுகாப்பாகச் செய்யப்பட்ட முன்னேற்பாடு இது.

"இட்ட நெடுங்கரைக் காழகம் நிலம்பரல் உறுப்ப' (598-599) என்னும் அடியால் இதை உணரலாம். காழகம் பருக்கைக்கற்கள். பரங்குன்றம், மாலிருங்குன்றம் ஆகிய இரண்டும் முறையே மதுரைக்கு மேற்கிலும் வடக்கிலும் சற்றுத் தொலைவில் உள்ளவை. எனவே மதுரையில் குன்றம் (மலை) எதுவும் இல்லாத நிலையில், மறவர்கள் நகரத்துக்குள்ளே யானைப்போர் காணும் பொருட்டு அமைத்த செயற்கைக் குன்றாக இதைக் கருதலாம்.

இஃதன்றியும் குன்று சார்ந்து கானகத்தில் நடந்த யானைப் போரினைக் குன்றின் மீது நின்று கண்ட அனுபவத்தின் வெளிப்பாடாகவும் வள்ளுவர் இந்த உவமையைக் கையாண்டிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com