தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா. !

சிறுகதை மன்னன், சிறுகதைக் கலைஞர், மறுமலர்ச்சி மன்னன், மறுமலர்ச்சி பரிதி என சக படைப்பாளிகளாலும், நண்பர்களாலும் அவர் வர்ணிக்கப்படுகிறார்.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா. !
Published on
Updated on
2 min read

மகாகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன். 

வசன கவிதை, கட்டுரை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், வரலாறு, மொழிபெயர்ப்பு என பலதரப்பட்ட இலக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளபோதிலும், தமிழ் இலக்கியச் சமூகத்தால் அவர் ஒரு சிறுகதையாளராகவே மதிப்பிடப்படுகிறார்.

சிறுகதை மன்னன், சிறுகதைக் கலைஞர், மறுமலர்ச்சி மன்னன், மறுமலர்ச்சி பரிதி என சக படைப்பாளிகளாலும், நண்பர்களாலும் அவர் வர்ணிக்கப்படுகிறார்.

கும்பகோணம் பட்டாபிராமையர் -  ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் கும்பகோணத்தில் ஜனவரி 1902-இல் பிறந்தார். 1921- இல் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொண்டு பி.ஏ. படிப்பில் சேர்ந்தார்.

அதே கல்லூரியில் ந.பிச்சமூர்த்தியும் படித்தார். நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்த இருவரும் கல்லூரி நாள்களில் ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். பின் தமிழில் எழுதத் தொடங்கினர். இருவருக்கும் நெருக்கமானவராக இருந்த வ.ரா. இவர்களை 'இரட்டையர்கள்' என்று அழைத்தார்.

அரசுப் பணியில் சேர்ந்த அவர் வருவாய் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று, பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். கண்புரை நோயால் பார்வையை இழந்ததினால் வேலையையும் இழக்க நேரிட்டது. சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு கண் பார்வை மீண்டது. ஆனால், மீண்டும் அரசு வேலையில் சேர இயலவில்லை. இதனால் எழுத்தை நம்பி சென்னைக்கு வந்தார்.

பல்வேறு இதழ்களில் எழுதினார். 'சுதந்திர சங்கு- 23-03-1934' இதழில் முதல் சிறுகதை 'விசாலாக்ஷி' வெளியானது. தொடர்ந்து 'மணிக்கொடி', 'காந்தி', 'ஹிந்துஸ்தான்' போன்ற இதழ்களிலும் கு.ப.ரா.வின் படைப்புகள் வெளியாகின. 1936 -ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' இதழில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

1938-39 காலகட்டத்தில் 'பாரதமணி', 'பாரததேவி' இதழ்களில் சிறிது காலம் பணியாற்றினார். பாரததேவியில் 'பாரத்வாஜன்', 'கரிச்சான்', 'சதயம்' ஆகிய புனைபெயர்களில் எழுதினார். 1942 ஆகஸ்டில் திருச்சி துறையூரில் 'கிராம ஊழியன்' பத்திரிகை தொடங்கப்பட்டபோது, அதன் கெüரவ ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஒன்பதாவது இதழிலிருந்து அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 

கு.ப.ரா. இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், சரித்திரம் சம்பந்தமான சிறுகதைகள் சிற்சில வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், சரித்திரச் சிறப்பு பெற்ற ஆண்கள், பெண்களின் உணர்ச்சி, மனநிலை, லட்சிய நோக்கு போன்றவற்றைக் கருப்பொருளாக்கி, தரமான கதைகளைப் படைப்பதில் முனைந்து வெற்றி கண்டார். அவரது 'காணாமலே காதல்' சிறுகதைத் தொகுதி இதற்கு ஒரு நல்ல சான்று.

கு.ப.ரா. இவ்வுலகில் வாழ்ந்தது நாற்பத்திரண்டு ஆண்டுகள்தாம். 1933-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கி, அவர் முனைப்புடன் இலக்கியப் பணி ஆற்றிய காலங்கள், பதினோரு ஆண்டுகள். பல சிந்தனை கட்டுரைகளையும், ஓரங்க நாடகங்களையும், வசன கவிதைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும், முடிவு பெறாத சில நீளக்கதை (நாவல்)களையும் படைத்த இக்காலகட்டத்திலேயேதான் அவர் சற்றேறக்குறைய தொண்ணூற்றிரண்டு சிறுகதைகளை எழுதியுள்ளார்.

நடைமுறை வாழ்க்கையை விட்டு விலகி, படிப்பவர் மனத்துக்கு ஒரு தற்காலிகமான மகிழ்ச்சியைத் தரும் கருவியாக கு.ப.ரா. சிறுகதைக் கலையைக் கருதவில்லை. வாழ்க்கையின் உண்மையான விஷயங்களைப் பற்றித் தைரியமாக எழுதுவதே, எடுத்துக்காட்டுவதே சிறுகதை என அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆணித்தரமான முறையில் சிறுகதைகளைப் படைத்தார்.

மனிதர், கலைஞர் என்ற இரு நிலைகளிலும் கு.ப.ரா.வை மிகவும் கவர்ந்தது மனோதத்துவ ஆராய்ச்சிதான். அவர் தம் வாழ்நாள் முழுவதும் அலசி ஆராய்ந்தவை எல்லாம் மனிதனின் மனநிகழ்ச்சிகளில் காணப்பட்ட விபரீதப் போக்குகளைத்தான்; அதிலும் அவர் உள்ளத்தைப் பெரிதும் தொட்டது வாழ்க்கையின் தலைமைப் பண்பாக விளங்கும் துவந்துவ பாவம்தான் - இரட்டை நிலைதான். ஒரு வகையில், கு.ப.ரா.வின் கதைகள் எல்லாமே இதன் விளக்கம் என்று சொல்லி விடலாம்.

சிறுகதையைப் பற்றிச் சொல்லும்போது, 'சுருக்கமும் சூக்ஷ்மமும்தான் தற்காலத்தின் தேவைகள். மின்சாரயுகமல்லவா? எதுவும் சீக்கிரமாக முடியவேண்டும். தற்கால மனிதனுக்கு நீண்டு எதையும் அனுபவிக்க நேரமில்லை. பொறுமையும் இல்லை' என்கிறார் கு.ப.ரா. 'கவி முற்றி யோகி ஆகிறான்' என்பது அவரது கொள்கை. அவரிடமிருந்த இந்தக் கவி உள்ளம்தான் பலதரப்பட்ட இலக்கியப் படைப்புகளைத் தமிழுலகத்துக்கு  தர வைத்தது.

1944 -இல் காங்கரின் என்ற நோய் காரணமாக முழங்காலுக்குக் கீழே இரு கால்களையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கு.ப.ரா. அதற்கு சம்மதிக்கவில்லை.

உடல் நலிவுற்றிருந்த 1944, ஏப்ரல் 27 -ஆம் நாள் காலமானார்.

'கு.ப.ரா.வின் சிறுகதைகளைப் படிக்கும் போது கு.ப.ரா.வின் ஆளுமைப் பண்பு, தனித்துவம் நமக்குச் சரிவரவே தெரிய வருகிறது என்பது அவர் சிறுகதைகளின் தனிச்சிறப்பு...' என க.நா.சு குறிப்பிட்டுள்ளது போல, படைப்புலக வாழ்விலும், இயல்பு வாழ்விலும் - உள்ளும் புறமும் ஒத்த தலைப்படு மனிதராக - தன் எழுத்தைப் போல் தனித்துவமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் கு.ப.ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com