சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்

இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னருளைப் பெற முயன்றனர்.
Updated on
3 min read

இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னருளைப் பெற முயன்றனர். சமுதாயத்தோடு ஒன்றிய வாழ்வாகவே சமய வாழ்வு அமைந்தது. நோன்பு நோற்பதன் மூலம் சமுதாயத்தை வளம் பெறச் செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் வேரூன்றியிருந்தது. நீரின்றி அமையாதன்றோ உலகம்? 'கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே'' என்று தொல்காப்பியம் புறத்திணையியல் கூறுகிறது.

வள்ளுவரும் தம்முடைய குறளில் கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து 'வான் சிறப்பு'' எனும் அதிகாரத்தை வகுத்துள்ளார். தம்முடைய நோன்பினால் மாதம் மும்மாரி பொழியும் எனும் தெளிவும் மக்களிடையே காணப்பட்டது. இதனை நன்கு உணர்ந்தே ஆண்டாளும் தம்முடைய திருப்பாவையில், 'நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி பெய்து'' எனப் பாடுகிறார்.

பொதுவாகக் கோயிலுக்குச் செல்வோர் வெறுங்கையுடன் செல்லார். மிகத் தூய்மையாகக் குளித்துவிட்டு, தம் கையில் மலர்களை ஏந்திக் கொண்டு, கோயிலுக்குச் செல்வர். 'தூயோமோய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது'' என்று ஆண்டாள் தம்முடைய திருப்பாவையில் குறிப்பிடுவார். இறை வழிபாடு மூன்று வேளைகளில் நடைபெற்றதை 'நாச்சியார் திருமொழி'' நன்கு விளக்குகிறது.

'தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுதேத்துகின்றேன்'' என்று கோதை நாச்சியார் பாடுவார்.

இங்ஙனம் நடைபெற்ற இறைவழிபாட்டில் சங்கு ஊதுதலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சங்க காலத்தில் நேரத்தைக் குறிப்பதற்கு, குறிப்பாக முன்னிரவு கழிந்து நள்ளிரவு வந்ததை அறிவிக்கும் வகையில் சங்கு ஊதப்பட்டது. அரசனைத் துயிலெழுப்ப வலம்புரிச் சங்குகள் அதிகாலையில் அரண்மனையில் முழங்கியதைச் சங்கப் பாடல்கள்வழி அறியலாம். சிலப்பதிகாரத்திலும் இதே கருத்தைக் காண முடிகிறது. மணிமேகலையில், 'வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப'' என்று வருகிறது.

ஆண்டாள் தம்முடைய திருப்பாவையில் சைவ, வைணவக் கோயில்களில் விடியற் காலையில் சங்கு ஊதப்படுதலைக் குறிக்கிறார். 'செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்'' என்று சிவன் கோயிலைக் குறிப்பாலும், 'புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கம் பேரரவம் கேட்டிலையோ'' என்ற வைணவக் கோயிலில் 'சங்கு' ஊதப்படுதலை நேரிடையாகவும் குறிப்பிடுகிறார்.

இன்று இறைவன் திருக்கோயில்களில் சங்கும் சேமக்கலமும் ஓரிருவிடங்களில் மட்டும் முழங்கப்படுகின்றன. கேரள மாநிலத்தில் பகவதி கோயில்களில் சங்கு முழங்கப்படுகிறது. இலங்கையில் சைவக் கோயில்களில் சங்கும் சேமக்கலமும் முழங்கப்படுகின்றன. இன்று தமிழகத்தில் சில சைவக் கோயில்களில் சங்கினையும் சேமக்கலத்தினையும் அந்தணர் அல்லாதோர் கையாளுகின்றனர். ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த கால கட்டத்தில் தமிழகத்தில் திருமணச் சடங்கிலும் சங்கு ஊதப்படுதல் உண்டு. நாச்சியார் திருமொழி 'மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத... கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்' என்று திருமணத்தில் சங்கு முழங்கப்பட்டதைக் குறிக்கிறது.

சங்க காலத்திலும் திருமணங்களில் சங்கும், பறையும் பயன்பட்டன. சங்கு ஊதப்பட்டதோடு மத்தளமும் கொட்டப்பட்டது. ஆனால், தற்காலத்தில் திருமணங்களில் மத்தளம் மட்டும் கொட்டப்படுகிறது.

முற்காலத்தில் வேதச் சடங்குகளிலும் சங்கு ஊதப்பட்டது. கி.பி. 10}ஆம் நூற்றாண்டில் தோன்றிய பட்டினத்தார் தம் பாடல்களில் சங்கு}மங்கல, அமங்கல காரியங்களுக்குப் பயன்பட்டதைக் குறிக்கிறார்.

வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாம் திருமாலின் ஐம்படைகளுள் சங்கு, சக்கர எனும் இரண்டும் வைணவ அடியார்களின் இரு கண்களைப் போன்றவை.

வாழ்வில் ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரும்பேறு 'குழந்தைப் பேறு' என்பதில் கருத்து வேறுபாடு இராது. 'மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே' என்று புறநானூற்றில் பாண்டியன் அறிவுடைநம்பி குழந்தைப் பேற்றின் இன்றியமையாமையினை அழகாக எடுத்துரைக்கிறார்.

குழந்தைச் செல்வத்தின் பெருமையை விளக்க வந்த வள்ளுவரும், இதற்கென்று ஓர் அதிகாரம் முழுவதையும் ஒதுக்குகிறார். ஆனால், உலகில் அனைவருக்கும் இச்செல்வம் கிட்டும் என்று கூறவியலாது. குழந்தைப் பேறின்மையைச் சங்கப் பாடலும் கூறுகிறது. 'பொன்போல் புதல்வர்ப் பொறாஅ தீரும்' என்று மகப்பேறில்லாத நிலை குறிக்கப்படுகிறது.

இத்தகையோரை மலடு என்றும் சொல்வதுண்டு. 'மக்கட் பெறாத மலடன் அல்லேன் வாகண்டாய்' என்பதும் பெரியாழ்வார் பாசுரம்.

குழந்தைப் பேறற்றோர் பிறர் குழந்தையைத் 'தத்து' எடுத்துக் கொள்வர். பெரியாழ்வார் காலத்தில் இவ்வழக்கம் நிலவியது என்பதை அவருடைய பாசுரம் உணர்த்துகிறது. அசோதை வளர்த்த கண்ணனைக் குறித்துப் பாடுகையில், 'தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ' என்கிறார். தாம் கண்டெடுத்த கோதையைத் தம்முடைய குழந்தையாகப் பெரியாழ்வார் 'தத்து' (மகன்மை) எடுத்துக் கொண்டு வளர்த்திருப்பார் என்பதற்கும் அவருடைய இப்பாசுரம் மறைமுகச் சான்றாக அமைந்துள்ளது. திருநாவலூரில் அவதரித்த நம்பி ஆரூரனை, நரசிங்க முனையர் எனும் அரசர் மகன்மை கொள்ளுவதாகப் பெரிய புராணம் பகருவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

சங்கப் பாடல்கள் பலவற்றுள் தீநிமித்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. கனவில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உலகளாவிய அளவில் பல்வேறு இலக்கியங்களிலும் காணலாம்.

ஜூலியஸ் ஸீஸரின் மனைவியான கல்பூர்ணியா, ஸீஸர் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவில் தான் கண்ட தீய கனவைப் பற்றி எடுத்துக் கூறி, ஸீஸரை 'செனட்' சபைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்துவதாகவும் ஷேக்ஸ்பியர் கூறுவார்.

சிலப்பதிகாரத்திலும் கண்ணகி, தான் கண்ட தீய கனவைப் பற்றி கூறுகையில், 'நனவுபோல நள்ளிருள் யாமத்துக் கனவு கண்டேன் கடிதிங்குறுமென' எனத் தான் கண்ட கனவையும், அது பலித்துவிடுமோ என்று பயப்படுதலையும் இளங்கோவடிகள் புலப்படுத்துகிறார். இங்ஙனம் கனவுக் காட்சிகள் பெரும்பாலும் தீ நிமித்தங்களாக அமைய, நாச்சியார் ஒரு மங்கலகரமான நிகழ்ச்சியைத் தம்முடைய கனவில் காண்கிறார். இஃது முற்றிலும் புதுமையான கனவு நிகழ்ச்சியாக அமைகிறது.

வாரணமாயிரம் எனத் தொடங்கும் திருமொழியில், தம்முடைய திருமண நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கூறும் பாங்கு நம் உள்ளத்தை ஈர்க்கின்ற வகையில் அமைகின்றது. மேலும், நம் கண்முன் உண்மையான திருமணத்தை நடத்திக் காட்டுவதாக இப்பாசுரங்கள் இலங்குகின்றன. இப்பாடல்கள் உருவெளித் தோற்றம் எனக் கருதப்படுவதுண்டு. இதுபோன்று பல்வேறு நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அக்கால மக்களிடையே நிலவி வந்ததை பாவை பாசுரங்கள் வெளிப்படுத்துகின்றன.

முனைவர் சீனிவாச கண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com