தில்லையில் ஆடு புலி ஆட்டம்!

தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றும் இனியும் புலவர்களால் தமிழ் வளரும் நாடு நம் தமிழ்நாடு.
Updated on
2 min read

தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றும் இனியும் புலவர்களால் தமிழ் வளரும் நாடு நம் தமிழ்நாடு. அந்த வகையில் கி.பி. 14}ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாற்றுத் திறனாளிகளான இரட்டைப் புலவர்களால் தமிழ் வளர்ந்தது.

சிற்றிலக்கிய வளர்ச்சியில் கலம்பகம் பாடுவதில் இவர்கள் வல்வர்கள். 'கண்பாய கலம்பத்திற்கு இரட்டையர்கள்' என்பது அவர்கள் குறித்த தனிப்பாடல் மதிப்பீடு. கும்பகோணம் சார்ந்த இலந்தை என்னும் ஊரினராம். இவர்கள் ஒருதாய் வயிற்று இரட்டைப் பிள்ளைகள் எனப்பட்டாலும், உடலுறுப்புக் குறையாம் பொறியின்மை யார்க்கும் பழியன்று என்ற வள்ளுவத்தின்படி மாற்றுத் திறனாளிகளாகவே அறிவறிந்த ஆள்வினை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இளமையில் பெற்றோர்களை இழந்த இவர்களுள் கால்முடமானவர், கண்ணிலார்க்குக் கண்ணாகவும் கண்ணிலார், முடவர்க்குக் காலாகவும் இருந்து கண்ணிலார் முடவரை முதுகில் தூக்கிச் சுமந்தே எங்கும் பயணித்தனர். இந்த நிலையில், சிதம்பரமாம் தில்லைக்கு வந்தவர்கள் நடராசரைக் கலம்பகம் பாடிவணங்கினர்.

நூறு பாடல்களைக் கொண்ட தில்லைக் கலம்பகத்தின் கீழ்க்கண்ட 60}ஆம் பாடல் அம்மானை என்ற தலைப்பில் பாடப்பட்டதாகும்.

தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே

வெம்புலிஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை!

வெம்புலிஒன்று எந்நாளும் மேவுமே ஆமாகில்

அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை!

ஆட்டை விட்டு வேங்கை அகலுமோ அம்மானை!

மகளிர் விளையாட்டான அம்மானை என்பது அம்மனைக்காய் எனப்படும் கழற்சிக் காயை (செச்சைக்காயை) மேலே எறிந்து பிடித்து தம்முள் ஒரு கருத்தை விவாதப் பொருளாக்கிக் கொண்டு வினாவிடைப் பாங்கில் ஆடுவர்.

மூவர் ஆடும் இந்த விளையாட்டில் முதற்பெண் ஐயமாக ஒரு கருத்தைத் தொடங்குவாள். அதற்கு இரண்டாமவள் வினாப் போல் விடை பகர்வாள். அதைத் தெளிவுறுத்தும் வகையில் மூன்றாவது பெண் விடையையே வினாப் போல் பகர்வாள்.

மேலும், முதற்பெண் கூறிய இரண்டாம் அடியையே மூன்றாம் அடியாக மடக்கிக் கூறி நான்காம் அடியை விடையாகப் பகர்வாள் இரண்டாம் பெண். மூன்றாமவளோ ஒரே அடியில் விடை

பகர்வாள், இந்த வினா விடைப் பாங்கு சிலேடை அணியாக அமையும் என்பதே அம்மானைப் பாடலின் இலக்கண முறையாகும்.

மேற்கண்ட பாடலின் கருத்தைத் தொடங்கும் ஒருத்தி, 'தென்புலியூரில் அம்பலவர் இருக்கும் தில்லைச் சிதம்பரத்தில் கொடிய புலி ஒன்று எந்நாளும் தங்கியிருக்குமாம், இது குறித்து அறிவீரோ' என்றாள்.

அடுத்தவள் 'கொடிய புலி ஒன்று எப்போதும் தங்கியிருக்குமானால் அது அம்பலத்தை விட்டு நீங்கவே நீங்காதோ?' என்றாள். மூன்றாமவளோ, 'அம்பலத்தில் இருக்கும் ஆட்டை விட்டு அப்புலி நீங்கிப் போமோ?' என்றாள்.

தில்லைச் சிற்றம்பலத்தில் நடராசர் ஆடிக்கொண்டே இருப்பதைப் புலிக்கால் முனிவர் எப்போதும் கண்டு தரிசித்துக் கொண்டே இருக்கின்றார் என்ற பாடு பொருளைத்தான் பாடலின் சில சொற்கள் சிலேடைத் தொனிப் பொருளாக உணர்த்துகின்றன.

வெம்புலி என்றால் கொடியபுலி என்றும். பக்தி விருப்போடு வணங்கும் புலிக்கால் முனிவர் என்றும் பொருள். ஆட்டை விட்டு என்பது ஆடும் ஆட்டத்தை விட்டு விட்டு என்றும், ஆடாகிய விலங்கை விட்டு விட்டு என்றும் பொருள்படும் போது புலிக்கால் முனிவரையும் புலியான விலங்கையும் குறிக்கும்.

ஆட்டை என்பது ஆடும் ஆட்டத்தையும் ஓர் ஆடாம் விலங்கையும் குறிக்கும். இதனால், உலகியல்படி ஆட்டைவிட்டுப் புலி போகாது என்பது போல் ஆன்மிகத்தின்படி நடராசரின் ஆட்டத்தைக் காணாமல் புலிக்கால் முனிவர் போகார் என்பது கருத்து. ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ என்ற தொடர் சைவ சித்தாந்த உணர்வில் ஆன்மாவை ஆண்டவன் அரவணைப்பதான தொனிப் பொருளையும் தருவதைக் கூடுதலாக உணரலாம்.

வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் நடராசர் திருவுருவில் இடது தோளிலிருந்த கீழிறங்கும் ஒருகைதான் தூக்கிய திருவடியைக்கீழ்நோக்கிச் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அது யானையின் துதிக்கை போன்றிருப்பதால் கெஜஹஸ்தம் என்பர். அப்படிச் சுட்டிக் காட்டப்படும் தூக்கிய திருவடிதான், யானை தன்பாகனை முதுகில் ஏற்ற உதவியாக இருப்பது போல ஆண்டவன் பக்குவமுள்ள ஆன்மாவுக்கு உயர்ந்த வீடுபேறளிக்குமாறு செய்வானாம் என்பது கருத்து.

இந்தக் கருத்துத் தொனிப்பைத்தான் தூக்கிய திருவடியின் ஆட்டத்தைச் சுட்டிக்காட்டும் விதமாகவே நடராசரின் விருப்பத்துக்குரிய ஒருகை உள்ளதாகக் கருதும் இரட்டைப் புலவரின் ஆடுபுலி ஆட்டத்தின்வழி நடராசர் மீதுள்ள பக்தியை உணர முடிகின்றது.

(ஜனவரி 3 மார்கழி திருவாதிரை தரிசனம்)

தமிழாகரர் தெ. முருகசாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com