திறனாய்வில் தனித்தடம் பதித்த  தி.க.சி!

திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!

தமிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது.
Published on

தமிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலையும் ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார். சிறுகதை வளர்ச்சியில் ஈடுபாடு காட்டிய 'மணிக்கொடி' எழுத்தாளர்கள் இலக்கியத் திறனாய்வில் கருத்து செலுத்தவில்லை எனினும், புதுமைப்பித்தன் விமர்சன ரீதியில், படைப்புகள் பற்றிய தன் அபிப்பிராயங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

1940 -களில் இலக்கியத் திறனாய்வை ஒரு தனித் தீவிரத்துடன், சிறப்பான ஈடுபாட்டுடன் வளர்த்தவர் என்றால் அது க.நா.சு.தான். தனது ரசனை உணர்வையே இலக்கிய விமர்சனத்துக்கு உரிய அளவுகோலாக அவர் கொண்டிருந்தார். க.நா.சு.வை அடியொற்றி திறனாய்வில் ஈடுபட்ட சி.சு.செல்லப்பாவின் விமர்சனங்கள், ஆழ்ந்த பகுப்பாய்வு முறையில் அமைந்தன. இலக்கிய விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளாத போதிலும், ரசனை அடிப்படையில் திறனாய்வில் ஈடுபட்டவர்களில் ரசிகமணி டி.கே.சி.யும் உண்டு.

இப்படியான திறனாய்வு சூழலிருந்த காலகட்டத்தில்தான் தொ.மு.சி., தி.க.சி. முதலியவர்கள் திறனாய்வில் கவனம் செலுத்த முற்பட்டார்கள். ரசனையே திறனாய்வின் அடிப்படையாகும் என்றாலும், ரசனையுடன் தத்துவார்த்தச் சிந்தனை இணைகிற போதுதான் திறனாய்வு சரியானதாக அமையும் என்ற கருத்தை இவர்கள் வலியுறுத்தினார்கள்.

தி.க.சி.யின் எழுத்துலகப் பயணம் 1944-இல் தொடங்கிவிட்டது. 'மணிக்கொடி' இதழாசிரியர்களில் ஒருவரான வ.ரா.வின் நடைச்சித்திரங்கள் மீது கொண்ட ஈர்ப்பால், அதே பாணியில் நடைச்சித்திரங்களும், கட்டுரைகளும் எழுதினார். தமிழில் திறனாய்வுக் கலை புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவும், வளர்ச்சி குன்றிய நிலையிலும் இருந்த அப்போதைய நிலையில், மக்களுக்குத் தரமான இலக்கியத்தை இனம் காட்டுதல், அறிமுகப்படுத்துதலான இக்கலையை நாம் ஏன் செய்யக் கூடாது என்ற உந்துதலில் அவர் திறனாய்வுக் கலையில் ஈடுபட்டார். மார்க்சிய அழகியல் கண்ணோட்டத்துடன் அவர் திறனாய்வில் ஈடுபட்டார்.

தொடக்கத்தில் திரை விமர்சனங்கள் எழுதி வந்த தி.க.சி.யை இலக்கியத் திறனாய்வின் பக்கம் திருப்பியவர் பேராசிரியர் நா.வானமாமலை. அப்போது மு.வ.வின் புத்தகங்கள் தமிழகத்தில் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருந்த நேரம். மு.வ.வினுடைய நூல்களை வாங்கிப் படித்து, அந்நூல்களை நடுநிலைமை, நிதானம், முரண்பாடின்மை என்கிற விமர்சனப் பண்புகளோடு திறனாய்வு செய்து கட்டுரைகள் எழுதினார். இது குறித்து மு.வ.வின் கருத்தைக் கேட்பதற்காக அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். சில நாட்கள் கழித்து, 'உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி' என மு.வ.விடமிருந்து ஓர் அஞ்சலட்டை வந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, 1945 முதல் தி.க.சி.யின் திறனாய்வுக் கட்டுரைகள், கிராம ஊழியன், ஜனசக்தி, தாமரை, சரஸ்வதி, சாந்தி, செம்மலர் முதலிய இதழ்களில் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, தாம்கோஸ் வங்கி ஊழியராக கொச்சியில் பணியாற்றிய சமயத்தில், மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளை தாமரையில் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

மௌனியின் 'அழியாச்சுடர்', ந.பிச்சமூர்த்தியின் 'மாயத்தாகம்', க.நா.சு.வின் 'மணிக்கூண்டு', ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'சூரியகாந்தி', ஆர்.சண்முகசுந்தரத்தின் 'மனமயக்கம்', கி.ராமச்சந்திரனின் (கி.ரா.) 'வெள்ளிக்கிழமை', பி.எஸ். ராமையாவின் 'கார்னிவல்' ஆகியவை தி.க.சி.யின் திறனாய்வுகளில் குறிப்பிடத்தக்கவை.

1945 -ஆம் ஆண்டிலிருந்தே திறனாய்வு செய்வதில் ஈடுபட்ட வந்த போதிலும்கூட, தி.க.சி.யினுடைய திறனாய்வுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றது அவர் எழுத ஆரம்பித்த அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னர்தான். பிப்ரவரி 1993 -இல் அவரது முதல் நூல் 'தி.க.சி திறனாய்வுகள்' வெளிவந்தது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் வரிசையில், தி.க.சி.யின் தமிழை 'விமர்சனத் தமிழ்' என அடைமொழி சூட்டியதோடு, அந்தப் பெயரிலேயே தி.க.சி.யின் திறனாய்வுகளை ஏப்ரல் 1993-இல் நூலாகக் கொண்டு வந்தவர் 'அன்னம்' மீரா.

இவற்றைத் தொடர்ந்து, 'விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்' (டிசம்பர் 1994), 'மனக்குகை ஒவியங்கள்' (மார்ச் 1999) 'தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்' (டிசம்பர் 2001) ஆகியவை அவர் எழுதி வெளிவந்த நூல்கள். இவற்றுள் 'விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்' நூலே அவருக்கு 2000-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது.

தி.க.சி. 1954-இல் வெளிவந்த ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுதியான 'உதயம்' தொகுப்பு பற்றி 'சாந்தி, பிப்ரவரி 1955' இதழில் இப்படி விமர்சிக்கிறார்: ''ஜெயகாந்தனுடைய சிறுகதைகளில் நல்ல வேகம் இருக்கிறது. ஆனால், அவருடைய பார்வையில் இன்னும் நிரம்பத் தெளிவு வேண்டும். கதாசிரியன் எதை எழுதினாலும் காரண காரியத்தோடு, வாசகர்களுக்கு நெஞ்சில் உரமூட்டும்படி, எதிர்காலத்தில் நம்பிக்கை தழைக்கும்படி எழுத வேண்டும். இல்லாவிடில், அவன் எழுத்துகள் அலங்கார சித்திரங்களாக ஒரு சிலருக்குத் திருப்தி அளிக்கலாமே தவிர, மிகப் பலருக்கு பயனற்றதாய்ப் போய்விடும். இந்த உண்மையை சமுதாய நலத்தில் நாட்டங் கொண்ட ஜெயகாந்தன் போன்ற நல்லெண்ணமுடைய எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்வர் என்று திண்ணமாய் நம்புகிறோம்...''

1986 - ஆம் ஆண்டு க.நா.சுப்ரமண்யத்துக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் நண்பர்கள் சிலர் அவரை பாராட்டச் சென்றிருக்கிறார்கள்.

''நீங்களெல்லாம் பாராட்டுவது இருக்கட்டும். எனக்கு விருது அறிவிக்கப்பட்டதைப் பற்றி தி.க.சி என்ன சொல்கிறார்?'' என்று நண்பர்களிடத்தில் க.நா.சு. கேட்டிருக்கிறார் க.நா.சு. தனக்கு விருது அறிவிக்கப்பட்டதை பற்றி, திறனாய்வாளர் என்ற முறையில் தி.க.சி.யினுடைய அபிப்பிராயத்தை அறிய ஆர்வம் காட்டி இருக்கிறார் க.நா.சு.

இலக்கியக் கோட்பாட்டு ரீதியாக இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தபோதிலும் தான் நடத்திய இலக்கிய வட்டம் இதழில், தி.க.சி.யினுடைய 'பதினேழு ஆண்டு இலக்கியம்' மற்றும் 'அசுரகணத்துடன் போரிடுக' ஆகிய கட்டுரைகளை வாங்கிப் பிரசுரித்திருக்கிறார் க.நா.சு.

(திறனாய்வாளர் தி.க.சி.யின் பிறந்த நூற்றாண்டு இன்று நிறைவு பெறுகிறது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com