திருக்குறள் காட்டும் அரசியல் நெறி

உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.
திருக்குறள் காட்டும் அரசியல் நெறி
SWAMINATHAN
Updated on
2 min read

உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.

திருக்குறள் சொல்லாத நீதிக் கருத்துகள் எதுவுமில்லை. அதுவும் இன்றைய அரசியல் ஆட்சியாளருக்குத் தேவையான கருத்துகள் நிறைய இருக்கின்றன.

ஜனநாயகம் என்னும் தக்கதொரு பெயராலே பணநாயகம்தான் இன்று பாரதத்தை ஆள்கிறது.நல்லாட்சிக்கு வள்ளுவர் சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. (குறள் 381)

படைவலி என்பது கூடுகிற கூட்டமோ எண்ணிக்கையோ அல்ல, வருகிற எதிரிகளை எதிர்த்து நிற்கும் மனத் துணிவு.

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை. (குறள் 765)

இவர்களைப் போலே குடிமக்களும் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும். (குறள் 131)

ஒழுக்கம் என்பது தனி மனிதனின் விருப்பம் என்றாலும், அதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு அரசிடம்தான் உள்ளது. இதைக் கடுமையான சட்டங்களாலும் ஒழுங்கு நடவடிக்கைகளாலும் தண்டனைகளாலும் நிறைவேற்றும் கடமை அரசிடம்தான் இருக்கிறது. போதைப் பழக்கம், மதுப் பழக்கம் இவற்றால் நிகழும் தீமைகளைக் கருத்திற்கொண்டு அப்படிப் பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை.

இன்றைக்கு கல்விக் கூடங்களிலேயே கயமைச் செயல்கள் நிகழ்கின்றன. காவல் துறையிலும்கூட அப்படிப்பட்ட செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றன.

குடிபுறங் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில். (குறள் 549)

இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே போதைக் கலாசாரம் தலை விரித்தாடுகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, களவு, கொள்ளை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

மது என்பது அதைக் குடிப்பவனுக்கு மட்டுமல்ல, சுற்றுப்புறத்தைச் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது. அரசே வருவாய்க்காக மதுக் கடைகள் திறப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும். இவர்களுக்காகத்தான் வள்ளுவர்

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுஉண்பார் கள்உண் பவர். (குறள் 926)

என்றார்.

திருக்குறள் நெறிப்படி ஒவ்வொருவரும் வாழத் தொடங்கினால் இந்தச் சமுதாயமே ஒழுக்கமுள்ள சமுதாயமாக மாறிவிடும். பிறகு வன்செயல்களுக்கு இடமே இருக்காது.

திருக்குறளில் சொல்லப்பட்ட அரசியல் அறநெறிகள் அந்தக்காலத் தேவை கருதிச் சொல்லப்பட்டாலும் எந்தக் காலத்துக்கும் எந்த நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது.

அன்றைக்கு அரசர் என்றால் இன்றைக்குப் பிரதமர், முதல்வர் ஆகியோரைக் குறிக்கும்.

அரசியல் அதிகாரங்களில் அரசனின் இயல்புகள், மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள், அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவு உடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல்,

சுற்றம் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஒற்றாடல், ஊக்கம் உடைமை, மடி இன்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய இருபத்தைந்து அதிகாரங்களில் அரசியல் குறித்தும் ஆட்சிமுறை குறித்தும் திருக்குறள் தெள்ளத் தெளிவாக உரைக்கிறது.

அரசின் கீழ் இயங்கும் நாடானது, பசியில்லாமலும், நோய் இல்லாமலும், வெளிநாட்டுப் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு. (குறள் 734)

அப்படிப்பட்ட நல்ல நாடாகத்தான் இந்த நாட்டை ஆக்க வேண்டும் என்று பிரதமர் முதல் முதல்வர்கள்வரை அனைவரும் பாடுபடுகின்றனர். ஆனால், நடைமுறையோ வேறாகவும் மாறாகவும் இருக்கின்றன.

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்

சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664)

என்று குறள் கூறுவதை அனைவரும் உணர வேண்டும்.

சமுதாயத்திலுள்ள குடிமக்களின் வாழ்க்கை நன்னிலை பெறச் செம்மையான நெறிகளை வகுத்து அறம் தவறாமல் ஆட்சி புரிதல் அரசின் கடமையாகும்.

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா

மானம் உடையது அரசு. (குறள் 384)

ஆனால், இன்றைக்குப் பெருபான்மையான அமைச்சர்கள் ஊழல்வாதிகளாவும், முதல்வர்கள் அதைவிடப் பெரிய ஊழல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆண்டால் நாடு என்ன கதிக்கு உள்ளாகும் என்பதை நாம் தாம் உணர்ந்து கொள்ள வேண்டும். குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர், இவர் வேண்டாதவர் எனப் பாராது நடுநிலையோடு குற்றத்தை அறிந்து தண்டனை வழங்கச் செய்யும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள் 541)

என்று உணர்த்துகிறார்.

இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள் அப்படியா செயல்படுகின்றன? கலைத் துறை விருதுகளில்கூட அவன் அந்தக் கட்சி, இவன் இந்தக் கட்சியென்று ஒருவரது திறைமையை, சாதனையை மூடி மறைத்து ஒதுக்க நினைக்கிறது அரசு.

நல்லாட்சி புரிபவர்களை மக்கள் கடவுளுக்குச் சமமாக மதிப்பார்கள்.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும். (குறள் 388)

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு. (குறள் 544)

முடியாட்சிக் காலத்தில் வள்ளுவர் சொன்ன இதுபோன்ற கருத்துகள் இன்றைய குடியாட்சிக் காலத்துத் தலைவர்களுக்கும் பொருந்துமாறு இருக்கின்றன.

தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் செலுத்தும்வரை நல்ல தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி

நியாயமான அமைச்சர்களைத் தேட வேண்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com