நன்றி சான்ற கற்பு

வாழ்க்கையில் கணவரும், மனைவியும் ஒருமித்து இல்லறம் நல்லறமாக அமைதல் நலம் பயக்கும். இத்தகைய நல்வாழ்வில் விரிசல் ஏற்படுதல் பிரிவுக்குக் காரணியாகின்றது.
Updated on
1 min read

வாழ்க்கையில் கணவரும், மனைவியும் ஒருமித்து இல்லறம் நல்லறமாக அமைதல் நலம் பயக்கும். இத்தகைய நல்வாழ்வில் விரிசல் ஏற்படுதல் பிரிவுக்குக் காரணியாகின்றது.

ஒழுக்கநிலையினின்று வழுவும் காலத்தில் இல்லறத்தில் பூசல் ஏற்படுதல் இயல்பு. அந்த வகையில் தலைவனொருவன் கூடாவொழுக்கத்தில் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடினான். தலைவி பெருந்துயருற்றாள். சிறிது காலத்தில் பரத்தையை விடுத்து தலைவியைச் சேர எண்ணிய தலைவன், தலைவியின் உற்ற தோழியின் உதவியை நாடினான். தோழி தலைவனின் போக்கைக் கடிந்துரைக்கின்றாள்.

தடமருப்பு எருமைப் பிணர்ச் சுவல்

இரும் போத்து,

மடநடை நாரைப் பல் இனம் இரிய,

நெடு நீர்த் தண்கயம் துடுமெனப் பாய்ந்து,

நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை

இருள்புனை மருதின் இன் நிழல் வதியும்

யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை

எம் மனைத் தந்து நீ தழீஇயனும், அவர்தம்

புன் மனத்து உண்மையோ அரிதே; அவரும்,

பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,

நன்றி சான்ற கற்போடு

எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

- (நற். பா -330)

எருமையானது நாரைக்கூட்டம் பறந்தோடும் வகையில் பொய்கையில் புகுந்து தன் வருத்தம் தீர்ந்த பின்னும் தனக்குரியதான தொழுவத்தில் தங்காது இனிய மருதநிழலில் தங்கும் ஊரன் எனத் தலைவனைப் பழிக்கிறாள் தோழி.

தலைவனை எருமைக்கடா எனவும், தனக்குரிய இல்லம் சேராது வேறிடம் செல்லும் கடாவினைப் போல் பரத்தையிடம் சென்று சேர்ந்தான் என உள்ளுறையாக வெளிப்படுத்துகிறாள்.

பரத்தையைக் குலமகளிரைப்போல நினைத்துக் கொண்டு, இல்லத்துக்கு அழைத்து வந்தாலும் உண்மையான காதலன்பு அவர்களிடத்தில் ஏற்படாது.

தலைவியைப் போன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு நன்றி சான்ற கற்போடு அந்தப் பரத்தை அமைதல் அரிதினும் அரிது என்பதைத் தலைவனிடம் புலப்படுத்துகிறாள் தோழி.

இந்தப் பாடலில் உண்மையான காதலும் குழந்தைப்பேற்றின் உன்னதமும் தோழியின் வாயிலாகத் தலைவனுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

தலைவியின் உயர்வுக்குப் பரத்தை இணையாக மாட்டாள் என்பதையுணர்த்தி, மனைவிக்கும் பரத்தைக்குமான வேறுபாடு உணர்த்தப்பட்டு, பரத்தை இல்லாளாக என்றும் ஆதல் அரிதுஎன்பதைத் தோழி பறைசாற்றியுள்ளாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com