இறைவன் ஒரு மறைபொருள்...
மறைபொருளானவனே, உன்னை மனங்களில் சிறை வைத்தோம் ஆலயப் பாடலின் அழகான வரிகள்; அர்த்தமுள்ள வார்த்தைகள்; நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தைகளும்கூட. நாள்தோறும் நாம் இறைவனோடு ஜெபம் வழியாக உரையாடுகிறோம்; உறவாடுகி


மறைபொருளானவனே, உன்னை
மனங்களில் சிறை வைத்தோம்
ஆலயப் பாடலின் அழகான வரிகள்; அர்த்தமுள்ள வார்த்தைகள்; நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தைகளும்கூட.
நாள்தோறும் நாம் இறைவனோடு ஜெபம் வழியாக உரையாடுகிறோம்; உறவாடுகிறோம். அவருடைய அன்பைச் சுவைக்கின்றோம்; ஆறுதலை அனுபவிக்கின்றோம்.
இருப்பினும், இறைவனை நாம் முற்றிலும் அறிந்து கொண்டோம் என்று நம்மில் யாரும் கூற இயலாது. இறைவனை நாம் எவ்வளவு அன்பு செய்தாலும் இறைவனோடு ஆழ்ந்த உறவு கொண்டாலும் இறைவன் மறைபொருளானவர்தான். அவரை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
இறைவனிடம் இரு தன்மைகள் உள்ளன:
1. அவர் உள் உறைபவர்: அவர் இப்பூவுலகில், வான மண்டலங்களில், இயற்கையில் உறைகிறார். ஒவ்வொரு மனிதரிலும் மனிதரின் இதயங்களிலும் இறைவன் வசிக்கிறார். எனவே, அவர் எல்லோருக்கும் அறிமுகமானவர். எல்லோராலும் உணரப்படுபவர்.
2. அவர் வெளிக் கடந்தவர்: அதே வேளையில், இறைவன் வானம், பூமி, வானமண்டலங்கள் அனைத்தையும் கடந்தவர். அனைத்திலும் மேலானவர்.
மனிதக் கற்பனைக்கு எட்டாதவர். காலம் இடம் அனைத்தையும் கடந்தவர். என்றும் மாறாதவர். என்றும் வாழ்பவர். மனிதரின் அறிவாலும் ஞானத்தாலும் அவரது இயல்பை ஒருபோதும் முற்றிலும் அறிந்து கொள்ள இயலாது.
ஒருவகையில் இது முரண்பாடாகத் தோன்றினாலும் முரண்பாடற்ற வகையில் இந்த இரு இயல்புகளும் இறைவனில் இணைகின்றன. எனவே, அவர் அறிந்தும் அறியப்படாதவராய், உணர்ந்தும் உணரப்படாதவராய், வெளிப்பட்டும் வெளிப்படாதவராய்த் திகழ்கிறார். எனவேதான் இறைவனை மறைபொருளானவர் என்று அழைக்கின்றோம்.
மறைபொருள் என்பது மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மை! மனித அனுபவத்தில் ஏராளமான மறைபொருள்கள் உள்ளன.
மனித உறவுகள், தாய்மை, அன்பு, நட்பு, காதல், சாவு... இவை அனைத்துமே மறைபொருள்கள்தான்; மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்டவைதான்.
இவற்றை நமது மனித அறிவால் ஓரளவே புரிந்து கொள்ள முடியும்.
மனித அனுபவத்துக்கே இக்கதி என்றால் இறையனுபவத்துக்கு..?
எனவே, இறைவன்தான் மறைபொருள்கள் அனைத்திலும் மேலானவர்.
இறைவன் மறைபொருளானவர் என்று நாம் கூறும்போது, இறைவெளிப்பாட்டின் அர்த்தத்தையே தேடுகிறோம். இறைவனே தம்மை முழுமையாக வெளிப்படுத்தினாலன்றி, இறைவனை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...